புதன், 7 நவம்பர், 2018

விற்பனை, விற்பன்னர், நிபுணர். நிபுணத்துவம்.

வில் என்பது நீக்கப்பொருள் உணர்த்தும் சொல்லாகும்.  இது சென்ற இடுகையில் விளக்கப்பட்டது.  பொருளானது ஒருவனிடத்திருந்து  நீங்கி இன்னொருவன்பால் செல்வதை வில் என்பது குறிக்கும்.  அம்பு எய்யும் வில் என்றாலும் வில்லில் இருந்து அம்பு நீங்கிச் செல்லும்படியான ஒரு பொறியே அது வாகும்.  நீக்கப் பொருளே அதுவாகும்.

இனி இவற்றைக் காண்க:

வில் >  விலை  ( வில் + ஐ)    ஐ என்பது விகுதி.   ( மிகுதி > விகுதி).

சொல்லை மிகுத்து வேறுபடுத்துவதும் புதுப்பொருள் தருவதும் விகுதி.

வில்+ பு + அன் + ஐ  =  விற்பனை.

பு :  விகுதி.
அன்:  இடைநிலை.
ஐ:  விகுதி.

இதேபோல் அமைந்ததே கற்பனை என்பதும்.

கல் + பு + அன் + ஐ =  கற்பனை.

விற்பன்னர்

பலருக்கு ஒன்றை நேர்வழியாகச் சொல்லவே தெரியும்,  ஆனால் விற்பன்னர் என்பவரோ ஒன்றை வளைத்துச் சொல்லி  வெற்றியை ஈட்டுபவர் ஆவார்.
பன்னர் -   பன்னுபவர்.  பன்னுதல்:  பலமுறை எடுத்துச்சொல்லுதல்.  வில் என்பது நீக்கப்பொருட் சொல் ஆதலின் இவர் ஒன்றிலிருந்து  இன்னொன்றைக் கண்டுபிடித்துச் சொல்வார்.  ஒன்றினின்று இன்னொன்று வருதலே இதில் நீக்கம்  ஆகும். வில் என்பது நீக்கத்தில் வெற்றி அல்லது அடைவைக் குறிக்கின்றது.  வில் போலும் குறிவைத்துப் பன்னுபவர் எனினும் ஆகும்.

நிபுணர்

நிபுணர் என்பவர்   ஒன்றன் நிலையை முழுதுமுணர்ந்தவர்.  நிற்பு  உணர் என்ற இருசொற்கள் கூடிய சொல் இதுவாகும்.   நிற்பு -  நிலை;  உணர் =  உணர்தல்.
இது முதனிலைத் தொழிற்பெயர்.  ஆகுபெயராய் உணர்ந்தவரைக் குறித்தது.  நிற்பு என்பதில் றகர ஒற்று குறைந்து  நிபு ஆன
 து.  இது தப்புதல் என்னும் சொல்லில் பகர ஒற்று வீழ்ந்து தபு ஆகி,  தபம், தவம் என்ற சொற்களைப் பிறப்பித்தல் போலுமே ஆகும்.

உலகத் துயர்களிலிருந்து தப்புபவரே தவமுனிவர்.    தப்பு > தபு > தபம்.

நிற்புணர்த்துவர்>  நிற்புணர்த்துவம் >  நிபுணத்துவம்

திருத்தம் பின்

செவ்வாய், 6 நவம்பர், 2018

வில் என்னும் அடிச்சொல்.

ஒன்றிலிருந்து இன்னொன்று அகன்று செல்வதையே "விலகு" என்னும் தமிழ்ச்சொல் குறிக்கிறது.

இதில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  இதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்த்தி அதைச் சொல்லித்தர வேண்டும்.  அதாவது வாய்ப்பாடமாகச் சொல்லிக்கொடுப்போனே வாய்த்தி.  அது பின் தன் யகர ஒற்றினை இழந்து வாத்தி ஆகி, பணிவு கருதி வாத்தியார் ஆயிற்று.   உப அத்தியாயி என்ற சொல் உபாத்தியாய என்றானது வேறு. குழப்படி பண்ணாமல் கு என்ற விகுதியை அறிவோம்.

விலகு என்பதில் வில்+ அ + கு என்று மூன்று துண்டுகள் உள்ளன.  கு என்பது சேர்விடம் குறிக்கும்.   கோலாலம்பூருக்கு,  அமெரிக்காவிற்கு என்று நாம் போமிடம் குறிப்பது.   வேற்றுமை உருபு ஆனாலும் அங்குமட்டும்தான் வருமென்று தடையேதும் இல்லை.  ஆகையினால் சொல்லாக்கத்திலும் பயன்பட்டு அது மொழியை வளர்த்துள்ளது.

பழ -   பழகு
உரு  -  உருகு
பெரு - பெருகு.
இள -  இளகு

என்பவை போதும்.

இடைநிலையாக நிற்பது   அ என்ற சுட்டுச்சொல் ஆகும்.  ஒரே எழுத்து,   அதற்குப் பொருளிருக்குமானால் அது ஒரு சொல்லுமாகும்.  இங்கு இடையுற்று  முழுச்சொல்லை ஆக்குவதனால் சொல்லிடைநிலை.   இந்த அகரம் சுட்டுச்சொல் ஆதலால் இதற்கு அங்கு என்று பொருள். இடத்தைக் காட்டுகிறது.

ஓர் இடக்குறியினின்று அங்கு சென்று சேர்வது  "  விலகு"  என்ற சொல்லால்
குறிக்கப்பெறுகிறது. அங்கு என்பது எவ்விடத்துப் போகுமோ அவ்விடம், அது ஒரு விரற்கடையாகவும் இருக்கலாம்.  நூற்றுக்கணக்கான கல் தொலைவாகவுமிருக்கக்கூடும்.

விலகு என்பது வேறிடம் மாறிச்செல்வது ஆகும்.

இதை அறிந்துகொள்ளுங்கள்.  தொடர்வோம்.


பார்க்கவும்:
29.6.18 விற்றலும் வாங்குதலும்.:https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_67.html

சாப்பாட்டு ராமர்களைக் காணவில்லை

ஓருசீமை நல்லிலந்தை  ஒற்றடியாய்த் தின்னத்
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.

புரிந்துகொள்ள:

சீமை இலந்தை:   ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் -  சளைக்காமல்
திருவமை -  உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ :  ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் -  அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு =  முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே -  சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் -  உயர்ந்தது போலும் என்றபடி.

நபர் :  இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,

யாப்பியற் குறிப்புகள்

ஒரே அடியினுள்:

தன்னொரு வன்மை:  எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.