செவ்வாய், 6 நவம்பர், 2018

தீபாவளி முடிந்ததா? பொங்கல் வந்துவிடும்........

கவலை வேண்டாமே..!


ஒருதிகதி  ஓடியிற்ற தீபா- வளி
ஓராண்டில் இனிவருமே தீர்வ-- திலை;
மறுபடியும் மறுபடியும் பலகா- ரமே.
மாந்தமிலை மகிழ்வுகொளீர் மாலை -- வரை;
இருவரிங்கு விருந்தோம்பி மகிழ்வு-- கொள
இனிப்பொங்கல் தனிவசதி மாறாப்--- புகழ்!
ஒருபடியாய் நாளனைத்தும் ஒடுங்கி-- நிலை
உற்றுவிடின் வாழ்விதுவும் வெற்றுக்--குழை

அரும்பொருள்:
திகதி:  தேதி, நாள்.
ஓடியிற்ற :  சென்றுமுடிந்த.
கொளீர் : கொள்ளீர் = கொள்வீர்
கொள -  கொள்வதற்கு
மாறாப் புகழ் -  வயிறார உண்டு மகிழ்ந்து
வாழ்த்துவதால் வரும் கீர்த்தி.
ஒருபடியாய் =  ஒரே மாதிரியாய்  வேறுபாடுகள்
இல்லாமல்;
ஒடுங்கி -  விரிவு இழந்து;
நிலை உற்று =  மாறாமல் அமைந்துவிட்டால்
வெற்றுக்குழை = பயனற்ற துளைத்தண்டு.
அணிகலன் இல்லாத கூந்தல் என்பதுமாம்..

உரை:

தீபாவளி ஒரே நாளில் ஓடிவிட்டதே என்று கவலைப்
படவேண்டாம், அது மீண்டும் வந்துவிடும் - அதுவும்
ஒரே ஆண்டிற்குள்ளாகவே.  அப்போதும் அடுத்தடுத்து
பல இனிப்புணவுகளை உண்டபடியே நீங்கள் மகிழலாம்.
காலையிலிருந்து மாலை வரும்வரை அப்போதும்
மகிழுறுவீர்கள். ஓராண்டா காத்திருக்கவேண்டும் என்று
அயர்வு கொள்ளாதீர். அதற்குமுன்பே பொங்கல்
வந்துகொண்டே இருக்கிறது! குடும்பத்தில் கணவன் மனைவி
இருவருமே விருந்தோம்புதலில் ஈடுபட்டு எல்லையில்லாப்
புகழை அடைந்துவிடலாம். அதுவும் வசதியான பண்டிகைதான்.
இவ்வாறு இல்லாதபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாய்
மாற்றமொன்று மில்லாமல் இருந்தால் அதுவோ அணிகலன்கள்
அணிந்து அழகுகாட்டாத பெண்ணின் கூந்தல் போலும்
கிளர்ச்சிதராத வெறுமை வாழ்க்கை ஆகிவிடுமே. அத்தகை
உணர்வு அற்ற வாழ்க்கையோ நமக்கு வேண்டாம்,,



யாப்பியற் குறிப்புகள்

ஒவ்வோர் அடியிலும் இறுதிச்சீர் நிரையசையில்
முடியுமாறு தொடுக்கப்பட்டது.  பாடிமகிழ்க.

ஆக்கியோன் தனிக்குறிப்பு:

காலை ஐந்திலிருந்து வேலையாய்ப் போய்விட்டபடியால்.
வாயில்வந்த கவிதையை எழுதிவிட்டு ஓய்வு கொள்வேன்.

தன்-திருத்தப் பிழைகள் முளைப்பின் திருத்தம் பின்.

திங்கள், 5 நவம்பர், 2018

கண்ணதாசன்: " வந்த வழி மறந்தேனே!"

நாம் எல்லோருமே ஒருவகையில் வந்த வழியை மறந்தவர்கள் தாம்.

காதல் வயப்பட்டுவிட்ட ஒரு கதைநாயகிக்கு ஒரு பாட்டு எழுதவேண்டிய சூழலில் கண்ணதாசன் இப்படிச் சிந்தித்தார்.  அவள் யாருக்கோ மகளாய்ப் பிறந்தவள்.  எங்கோ உலகின் ஒரு மூலையில் வளர்ந்தவள். கொஞ்சம் பெரியளானவுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஓர் ஆண்மகனைக் கண்டாள். மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.

வந்த வழி மறந்தேனே--- புது
மனந்தனைக் கொண்டேனே---  புது
வாழ்வதனைக் கண்டேன்   ( வந்த)

சிங்கப்பூரில் ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டிடத்திலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.  அங்கு வாழும் பலர் வந்த வழியை மறந்தவர்கள்தாம்.  புதிய வாழ்வினைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறே உலகனைத்தையும் சிந்தித்து உணர்ந்துகொள்ளலாம்.

மொழியில் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் தான் வந்த வழியை மறந்துவிட்ட சொல்தான். சொல் எப்படி அது அமைந்த வழியினை மறந்துவிடும்?  அதற்கென்ன மனமா இருக்கிறது?

" உயர்ந்த மலையும் உனது அன்பின்
உயர்வைக் காட்டுதே!:"

"இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?"

என்று இன்னொரு கவிஞர்  ( கவி கா.மு.ஷெரிப் )  காதலன் கேட்பது போன்ற வரியை எழுதினார்.  மொழியில் இருக்கும் சொல்லுக்கும் மனம் இல்லையாதலால் தான் வந்த வழியைச் சொல் அறிவதில்லை.  தான் வந்த வழியை அது அறிந்ததோ இல்லையோ,  வந்த வழியை அது காட்டிக்கொண்டு நிற்கிறது.  சொல்லைக் காணும்போது நாமதனை யுணர்ந்துகொள்கின்றோமே.

இதயம் என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்து உடலின் எப்பகுதிக்கும் செலுத்தியும் கொண்டிருக்கும் ஓர் உறுப்புதான்.  அதற்குள் மனம் என்பதொன்றில்லை.   முன்னுதல் > மன்னுதல்:  மன்னுதல் >  மன்: மன்+ அம் = மனம் ஆகும். உடலில் சிந்திப்பது நடக்கிறது; ஆனால் அஃது இருதயத்தில் இல்லை.  ஈர் என்றால் ஈர்த்தல்:  இழுத்தல். ஈர்  +  து + அ + அம் = ஈர்தயம் > இருதயம்.  (  முதனிலைக் குறுக்கம் ).  தோண்டிய தோடு போன்ற குரல்வளைப் பகுதி  தோண்டு+ ஐ =  தொண்டை என்று குறுகியதுபோலவே இதுவும். பல சொற்கள் இப்படித் திரிகின்றன. இதன் மறுபக்கம் என்னவென்றால்:   இழு> இரு> இரு + து + அ + அம்=  இருதயம் என்பதே.    இரு என்பதே பின் ஈர் > ஈர்த்தல் என்று திரிந்ததென்னலாம். எவ்வாறாயினும் இரு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடை சொற்கள்.  இரு என்ற வடிவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன.   எடுத்துக்காட்டு:  இரு1=  பெரிய;   இரு2:  ஓரிடத்து அசைவின்றி அமைதல்.  இரு3:  இழு என்பது.   இரை என்ற சொல்லில் சிதறியபின் ஓரிடத்துப் பறவைகளோ விலங்குகளோ உண்ணும்படியாகக் கிடத்தல்; பொதுவாக உயிரிகளின் உணவு.  அது இரு> இரை என ஆனதே ஆகும்.  இரைத்தல் என்று வினையுமாயிற்று,  ஈர்த்தலில் தொடர்பு உள்ளபடியால் இரு என்பது இரை என்று மாறி உண்டற்குரியதையும் காட்டும்.

அயல் என்ற சொல் அருமையாய் அமைந்தது,  அங்கும் அல்லாத அப்பாலிடத்தைக் குறிப்பது அயல் ஆகும்,  இவ்வாறே அப்பால் கண்டு பயன்பாட்டுக்கு வந்தது அயம் என்ற இரும்பு ஆகும்,  அயச் செந்தூரம் என்ற மருந்து இரும்பினால் அல்லது இரும்புத் தூளால் செய்யப்பட்டது ஆகும்.  செந்தூரம் என்பதே செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,  நன்றாக பூசப்பட்ட சாயம், சாயலையும் காட்டவல்லது.  சாயலாவது நிழல்.

அயல் > அயம்
சாயல் > சாயம்.

வேறு புதுச் சொற்களைத் தேடி அலையாமல்  லகர ஒற்றினையே மகர ஒற்றாக மாற்றியமைத்துச் சொற்புனைவு செய்தமை மிகுந்த திறன் ஆகும். பூசிய இடத்தில் சார்ந்திருப்பதால் சார் > சாய் > சாயம் எனினுமாம்,

அந்தச் சொற்களுக்கு வந்த வழி தெரியாவிட்டாலும் ஆய்வாருக்குத் தெரிகிறது,

ஆக வந்த வழி அறியக்கூடியதாய் உள்ளது.

தீபாவளி நடப்புக்கு வந்து மக்கள் கொண்டாடுமுன் தீபங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அதன்பின்னரே அவற்றை வரிசையாய் வைத்து ஆடவோ பாடவோ மக்கள் தொடங்கியிருக்கவேண்டும்,  ஆகவே தீபம் + ஆவலி (/ளி)  என்று சொல்லமைந்திருக்கலாம். ஆனால் வட இந்திய வழக்கில் தீ+ வளி  (தீ-வாளி)   என்று வருதலின்  தீபம் என்பதிலுள்ள பகர முதலியவை காணப்படவில்லை.   தீப (தீபா) என்ற சொல் அங்கும் உள்ளது.  ஆக தீவாளி என்று வந்து தீவளி   என்பதனுடன் ஒற்றுமைப்படுவது  ஆய்வுக்குரித்தாய் அதை ஆக்குகிறது,  படிக்க அறியாதார் இன்னும் தீவளி என்றே தெற்கிலும் கூறுகின்றனர் என்பதால்  தீயையும் வளியாகிய காற்றையும் குறிக்கின்றதா என்பதை அறிதல் வேண்டும்,  அப்படியானால் தீபத்தைக் காணுமுன் தீயும் வளியும் கண்டு உவந்த காலத்தது என்றாகலாம்,
அது இன்னும் பழையது என்றாகிவிடும்.

பிழை -  திருத்தம் பின்



 



ஞாயிறு, 4 நவம்பர், 2018

எமக்குத் தீங்கு எண்ணும் கேடு புரிவோர்

தாழிசை 

எழுத்தழுத்துப் பலகைதனைத் தட்டி  னாலும்
எழுத்துச்சில திரைதன்னில் தோன்றா வண்ணம்
கொழுத்தசிலர் இயற்றிவிட்ட புழுத்த மெல்லி
கூடிவந்த  தெங்கணினிக் கோவை நீக்க!

இத்தகையில் மெத்தஅழி வூட்டும் கேடர்
இப்புவியில் இருத்தற்கோ ஏதோ ஊட்டம்?
சித்தரொடு சீர்பெரியோர் உற்ற  பூமி
பித்தரொடும்  எத்தனைநாள் ஒத்தி லங்கும்?

 இதன்பொருள்:

எழுத்தழுத்துப் பலகை:  தட்டச்சு செய்யும் எழுத்துப் பலகை.
computer keyboard
திரை:  கணினித் திரை  computer screen
கொழுத்த -   திமிரினால் கெடுதல் செய்ய முயல்கின்ற

சிலர் -   சிறு எண்ணிக்கையினர்
புழுத்த -  பரவும் கெடுதல் உள்ள  infectious
மெல்லி  -கணினி   மென்பொருள்  software
கோவை =  பல திறமும் இணைக்கப்பட்ட கணினியின் நிலை.
integrity of our machines

தகையில் =  தகைமை இல்லாத;
மெத்த  :   அதிகம்
கேடர் -  கேடு புரிவோர்
ஊட்டம் = விளைவித்த காரணம் causation
சித்தர் =  சிந்தனையாளர் நல்லோர்
பித்தர் =  தீமைசெய்யும் பைத்தியக்காரர்கள்
ஒத்திலங்கும்  =  ஏற்றுக்கொண்டு தாங்கி நிற்கும்

கவிதை