புதன், 17 அக்டோபர், 2018

சில வினைமுற்றுக்களின் சிறப்புகள் ( ஒரு வினா)

இன்று சில வினைமுற்றுக்களை ஆய்ந்தறிவோம்.

தமிழில் நிகழ்கால வினைமுற்றுக்களில் இன்று என்ற சொல் பயன்பட்டுள்ளது இப்போது காண்போம்.

வருகின்றான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

வரு+ கு + இன்று + ஆன்  = வருகின்றான்.
செய் + கு + இன்று + ஆன் =  செய்கின்றான்.

இப்போது  இவ்வினை வினைமுற்று வடிவங்களில் இன்று என்ற சொல்
பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதை வேறு விதமாகச் சொல்வோம்.

வருகின்றனன்    -  இதில் அன் என்று ஓர் இடைநிலையும் அன் என்ற
ஓர் ஆண்பால் விகுதியும் இணைந்துள்ளன காண்பீர்.

வரு + கு+ இன்று + அன் + அன்
செய் + கு + இன்று + அன் + அன்.

இன்று என்பதே இப்போது செயல் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது.
காலம்  நிகழ்காலம் எனப்படும்.

இனி,  இறந்த காலத்தில் இதைக் கூறுவதானால் இன்றுக்குப் பதிலாக
அன்று என்பதை இடவேண்டும்.

வ  +  து +  அன்று.
செய் + து + அன்று.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இன்றுக்கு எதிர்மறையான அன்று என்பதே இறந்தகாலம் காட்டுவது.  நாளடைவில் அன்று என்ற விகுதி களைவுற்றது.  பயன்பாட்டு வழக்கின் காரணமாக வந்து என்பதே இறந்தகாலத்தைக் காட்டத் தொடங்கியது. இற்றைக்கு வந்து என்பதே இறந்தகால எச்சமாகவும் வந்தான் என்ற ஆன் விகுதி இணைப்பு உள்ள முற்று  இறந்தகால வினைமுற்றாகவும் இயல்கின்றது.

ஆகவே பழம்பாடல்களில் வந்தன்று எனின் இன்றைய வழக்கில் வந்தது என்பதாகும்.

அன்று என்பது  அன்+து என்று அமைந்த சொல்.   அன் என்பது இறந்தகாலச் சுட்டுச்சொல்.  அ என்பது அதனடி. ஆகும்.

எனவே வந்தன்று என்பதைப் பிரித்தால்:

வ+ து + அன் + து  என்று பிரியும்.   இதில் து இருமுறை வந்துள்ளது.

இதில் புலவர்கள் புகுந்து,  வந்து என்பதில் வ+த் +உ என்று  உறுப்புகள் சேர்ந்து  த் என்பதே இறந்தகாலம் காட்டிற்று என்றனர்.  அன்று என்பது விகுதியாக இல்லாதுபோயின் த் என்பதுதான் இறந்தகாலம் காட்டவேண்டிவரும். வந்~ என்பதில் நகர ஒற்று புணர்ச்சியினால் உண்டானது எனக்கொள்க. கால உணர்வு ஏதாவதொன்றில் தொற்றிக்கொள்வதே உண்மையாகும்.

பொழிப்பாக:

வருகின்று என்பது  நிகழ்காலம்.
வந்தன்று என்பது இறந்தகாலம்.

வருகின்று  என்பது  வருன்னு என்று  நிகழ்விலும்  வந்தது என்பது வன்னு என்று இறப்பிலும் மலையாளத்தில் திரிதல் காண்க.

 இன்று என்பது இன்னு என்று திரிய,  அன்று என்பது அன்னு என்று திரியும்.

வருன்னு என்பது வரு என்ற பகுதியில் காலம் இல்லை.
வன்னு என்பதில் 0ன்  எனற்பாலதில் காலம் இல்லை.
ஈரிடத்தும் உகர இறுதி சாரியை.

இதற்கு மாறாகக் காலம் வரு என்பதில் நிகழ்வு;  வன் என்பதில் இறப்பு எனலாமோ?
அல்லது  வருகின்று என்பதில் இன்று எனல் காலம்;  ஆயின் வந்தன்று என்பதில் அன்று என்பது காலப் பொருள் பொதிந்திருக்கவில்லை என்னலாமோ?

மறுதலித்துப் பின்னூட்டம் செய்க.

வந்தன்று, மகிழ்ந்தன்று என்பன சங்ககால வடிவங்கள்.

நினைவிலிருந்து:

"இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே"

யாதுமூரே என்ற கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாட்டு,

காலச்சுவடுகள் யாங்குள கூறுக.

-----------------------------------------------

அடிக்குறிப்புகள்:




நன்னூல்: எழுத்ததிகாரம்: பதவியல்.

143. ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை


கு+ இன்று என்பதை கின்று என்று பிரித்து வகைப்படுத்தும் நன்னூல்.
இன்று என்பதும் முன் நிற்கும் கு அல்லது க் என்னும் ஒற்றும் தனித்தியங்காமல் இடைநின்றமையின் அவற்றுக்குத் தனிப்பொருள்
நன்னூலார் கூறிற்றிலர். இது பிறழ்பிரிப்பென்பார் அறிஞர் மு.வரதராசனார்.

கிறு என்பது கின்று என்பதன் இடைக்குறை.

ஆநின்று:   செய்யாநின்றான் =  செய்துநின்றான்.
இது செய்யாமல் நின்றான் என்று பொருடருதலும் உண்டு. கவனமுடன்
காண்க.

142. த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை   ( நன்.)






செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஒரு கவிஞனின் வீழ்ச்சி.

திரைத்துறையில் பாட்டெழுதத் தேடினான் வாய்ப்பதனை;
மறைத்தனனே ஆட்டிவைத்த மாயிருள் ஆசைகளை!
குரைத்ததுபோல் சத்தமிடும் கோத்தளி பாடல்களால்
நிறைத்தபல நீள்படங்கள் அன்னாற்   கறிமுகமே.

இசையறிஞர்  நெஞ்சிரக்கம்  ஏற்பதனால்  ஊதியமாய்ப்
பசைவரவும்  கேட்டவர்கள்  தந்தபுகழ் உந்திடவும்
மிசையுறுகா மப்பசியால் மெல்லியலார் பாடுநரின்
தசையுறவும் வன்புணர்வும்  கொண்டுவிழ லாயினனே.

தகுதிதன தெத்தகைத்தோ தானறியாக் காரணத்தால்
மிகுதியுறச் சிந்தித்தான் மேலுலகோர்  தாம்பழித்தான்;
அகதியெனச் சாய்ந்திடுவன் தண்டனையன் னாற்கினியே
தொகுதியிழந்  தான்புரையத் தோல்வியிலே வீழ்படுமே.


அரும்பொருள்:

மாயிருள்:  பேரிருளில் அல்லது இடர்களில் புகுத்தும்.
கோத்தளி :  கோத்து அளி -  பழம்பாடல்களில் வரும் சொற்களைப்
பொறுக்கிக் கோத்துத் தந்த.
அறிமுகம்:  மக்களிடையே அறியத்தக்கவன் ஆன நிலை.
ஏற்பதனால்:  ஏற்பட்ட இரக்க உணர்வை முன்னிறுத்தி முனைந்ததனால்.
பசை வரவு :  ஊதியம் செலவு போக அதிக மிருத்தல். ஒட்டாதது -
செலவிடப்பட்டது;  ஒட்டியது: பசை; மீதப்பட்டது,
கேட்டவர்கள்:  பாடல்களைக் கேட்டவர்கள்,
மிசை:  மேலாகிய;  ( அதிகமான )
மேலுலகோர்:  முன் காலத்து வாழ்ந்து மக்களிடை வணக்கத்திற்கு
உரியோர் ஆனவர்கள்.
அகதி:  கதியற்றோன்.
தொகுதி :  தேர்தலில் வெற்றி பெற்ற இடம்.
இழந்தான்:  மறு தேர்தலில் அடைந்த தோல்வியாளன்.
புரைய  -  ஒத்த.
வீழ்படும் :  வீழ்ச்சி அடைவான் . 

யாப்பியற் குறிப்பு:

தொடக்கச் சீர்கள் ஒவ்வோர் அடியிலும் கருவிளங்காய்ச் சீர்களாய்
வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன.

முதல்பா தவிர பிற எல்லாச் சீர்களும் நிரைநடுவாகிய சீர்களான் இயன்றுள்ளன.

ஒவ்வொரு பாவும்  ஏகாரத்தில் இறுகின்றது.

முதல்பா தவிர அடிதோறும் தளை வெண்சீர் வெண்டளையாய் யாவுமியன்றன.பின்வருமடி கலித்தளை.

ஆகவே முதல்பா தவிர  ,  சந்தம்:  தனதனதாம்  தாந்தனதாம் தாந்தனதாம் தாந்தனதாம் என்பதாகும்.

படித்து மகிழ்க.




ஞாயிறு, 14 அக்டோபர், 2018

tamil for word: battery.

பேட்டரி, பாட்டரி என்னும் மின்சேமி

பாட்டியுடன் ஒரு பேரன் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்  . திடீரென்று கைப்பேசி நின்று உரையாடல் அறுந்துபோயிற்று.  என்ன என்று பார்க்கும்போது  கைப்பேசியில் "பேட்டரி" என்னும் மின்சேமிப்பு (மின்சேமி ) தீர்ந்துவிட்டது.  அதில் மீண்டும் மின்னாற்றலை ஏற்ற வேண்டியதாயிற்று.

என்னைத் தொடர்பு கொண்டு, அந்தப் பாட்டியின் பேரன் கேட்டார்.(இது இலக்கணப்படி தவறு:  ஒருமை பன்மை மயக்கம்)  இந்தப் பாட்டி என் அறைக்குப் பக்கத்தில் இருந்ததால், நான் இதை அறிந்து பேரனிடம் தெரிவித்தேன்  -  ஒரு குறுஞ்செய்தி மூலமாக.

மின்சேர்வி:

என் உரையாடல் தமிழில் இருந்தது, ஆனால் நான் மின் கலம் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்தியது மின்சேர்வி என்ற சொல்.

நான் கொடுத்த தகவல்:   " பாட்டி கைப்பேசியில் மின்சேர்வி தீர்ந்துவிட்டது" என்பதுதான்.

சேர் என்ற சொல் ரகர ஒற்றை இழந்து  சிலவிடத்து சே என்று வரும்.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல் :  சேமிப்பு.

சேர்கரித்தல் -  சேகரித்தல்:  இதில் ரகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: நேர்மித்தல் ஆகும்.  நேர்மித்தல் என்றால் ஒரு பட்டியல் பெயர்களில் ஒவ்வொன்றுக்கும்
 நேர் எதிரே குறிப்பு எழுதிவைத்து நிறுவுதலைக் குறிக்கும்.

கருணாகரன் ............  தளபதி.

அதாவது கருணாகரன் தளபதியாய் நேர்மிக்கப்படுகிறார்.   இது பின்னாளில் நேமித்தல் என்று தன் ரகர ஒற்றை இழந்தது.

ஓர்மித்தல் என்ற சொல் மலையாளத்தில் வழங்குகிறது. இதன் பொருள்: நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது.  ஆனால் இச்சொல் ஓமித்தல் என்று திரியவில்லை.  ரகரம் நன்றாகவே ஒலிக்கப்படுகிறது.  சொற்களைக் கவனமாக உச்சரிப்பவர்கள் மலையாளமக்கள் ஆவர்.

மின்னடை

இவை ஒரு புறம் கிடக்கட்டும்.  மின்சேர்வி என்பதையே நான் பயன்படுத்தினேன்.  ஒரு சமயம் : மின் அடை அல்லது மின்னடை என்பதைப் பயன்படுத்தினேன்,   ஒரு பாட்டரியில் மின் ஆற்றல் அடைந்து வைக்கப்படுகின்றது.  ஆகவே இதுவும் நல்ல மொழிபெயர்ப்பே.

மின் கலம்

ஒரு மின்சேர்வி ஒரு சட்டிபோல; அதற்குள் மின் ஆற்றல் பெய்து வைக்கப்படுகிறது.  ஆகவே கலம் ஆகலாம்.

ஆற்றலடை:

ஆற்றலடை என்றும் சொல்லலாம்.  மின் ஆற்றலை அடைந்து வைத்துள்ளதே பாட்டரி-- ஆற்றலடை.  தேனீக்கள் தேன்சேகரித்து வைத்துள்ள அடைவு  தேனடை எனப்படுகிறது.  அதேபோல ஆற்றல் அடைந்து  வைத்துள்ள அடைவு ஆற்றலடை ஆகிறது.   நன்றாகவே உள்ளது.

இருதா:

இனி சந்தா,  வாய்தா முதலிய சொற்களின் அமைப்பைக் காண்பீர்களாக.  சம் - சேர்தலைக் குறிப்பது; தா = சேர்தலுக்குத் தரவேண்டிய கட்டணம்.  ஆகவே சந்தா ஆயிற்று.  சம் என்பது தம் என்பதன் திரிபு.  முன் இடுகைகள் காண்க.

இதே பாணியில் அமைந்த இன்னொரு சொல்:   நிலம் முதலியவற்றின் விளைச்சல்களிலிருந்து ஒரு பகுதியை வரியாகக் கொடுக்கவேண்டியுள்ளதைக் குறிக்கும். .  அப்படிக் கொடுக்கப்படுவது வாய்தா எனப்பட்டது   :   அதாவது வருவாயில் தா என்பது வாய்+தா = வாய்தா.
படுதா என்ற சொல்லைப் பாருங்கள்.  போர்வைபோலப் படர்வாக பிற பொருள்கள் மேல் போட்டு மூடத் தருவது படுதா.   படு= படர்வாக. அல்லது மேலே படுமாறு;   தா= போட வழி தரும் விரிப்பு.   படுதா என்பது நல்ல அமைப்பான சொல்லே.இவை எல்லாம்  மிக்க எளிமையான சொற்புனைவுகள். இவற்றைப் பின்பற்றி பாட்டரி என்பதை  இருதா என்று கூறலாம்.  இருப்பில் இருப்பதாகிய மின்னாற்றலைத் தருவது இருதா.  மின்னடைக்கு இருதா என்பதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.  முன் அமைந்தவற்றை ஆராய்ந்து அதேபாணியில் அமைக்க என்ன கட்ட(கஷ்ட) மென்று கேட்கிறோம்?   ஒவ்வொரு கைப்பேசியிலும் ஓர் இருதாவாவது  தேவை.

இப்போது இங்கு தரப்பட்ட மொழிபெயர்ப்புகள்:

மின்சேமி
மின்சேர்வி
மின்னடை
ஆற்றலடை
இருதா
மின் கலம்.

ஆங்கிலத்தில் பாட்டரி என்பது அடிப்பு என்று பொருள்படும் சொல்.  மின் ஆற்றலை அது அடிக்கிறது.   அதாவது செலுத்துகிறது.   அடிக்கும் மட்டை பேட் எனப்படுகிறது.  இங்கிலாந்துச் சட்டத்தில் ஒருவனை அடித்தால் அது பேட்டரி என்னும் குற்றம்.  இது ஆங்கில ஒருமைச்சட்டத்தின்படியான குற்றவியற் குற்றம் . English common law,   criminal law.  சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் இதை voluntarily causing hurt  என்று  சொல்கிறோம்.  பாட்டரி என்ற ஆங்கிலப் பதத்தில் மின்சார்ந்த சொல் அல்லது பொருண்மை எதுவும் இல்லை.  இதற்குச் சொல்வழக்குத் தான் காரணமாகிறது.

வேறுபட்ட வகையாக மொழிபெயர்ப்புகளை நீங்கள்  கண்டிருந்தால் இங்குப் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.

திருத்தம் பின்.
( சில மாற்றங்கள் காணப்பட்டன.  கவனிக்கின்றோம்).