வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.
ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது. சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர். வக்கிரம் யாதென்று அறிவோம்.
ஒவ்வொரு கோளும் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும். இப்படிப் போன கோள் மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.
இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:
வரு+ கு + அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.
இதில் கவனிக்க வேண்டியவை:
வரு என்பது வ என்று திரியும். வருவான் ( எ.கா) : வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.
அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல். அருகில் என்ற சொல்லை நினைவு கூர்க. அரு> அரி. அருகில் வரல்,
நெருங்குதல்.
ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும். செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.
இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,
ஆகவே இதன் பொருள் வந்து நெருங்குதல். அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.
இனி வக்கரி + அம் = வக்கரம். இகரம் வினையாக்க விகுதி, கெட்டது. அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.
சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.
வக்கரம் என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது. இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.
வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .
இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,
திருத்தம் பின்பு
திருத்தம் பின்பு
இஃது 9.3.2019ல் மறுபார்வை பெற்றது. பிழைகள்
எவையும் காணப்படவில்லை. கள்ளப்புகவர்களால்
(கள்ளத் தனமாகப் புகுந்து எழுத்து சொற்கள் முதலிய மாற்றிக்
கெடுப்போரால் ) புதிய பிழைகள் புகுத்தப்படின் பின் திருத்தப்படும்,
பின்னூட்டம் செய்து நீங்களும் தெரிவிக்கலாம் )
எவையும் காணப்படவில்லை. கள்ளப்புகவர்களால்
(கள்ளத் தனமாகப் புகுந்து எழுத்து சொற்கள் முதலிய மாற்றிக்
கெடுப்போரால் ) புதிய பிழைகள் புகுத்தப்படின் பின் திருத்தப்படும்,
பின்னூட்டம் செய்து நீங்களும் தெரிவிக்கலாம் )