வியாழன், 20 செப்டம்பர், 2018

பாதாளம் வரை செல்வோம் தடுப்பவர் யார்?

இன்று பாதாளம் என்ற சொல்லினமைப்பையும் தெரிந்துகொள்வோம்.

பாதாளம் என்ற சொல் காதில் விழும்போது ஏதோ வேறொரு சிறப்பான மொழியில் மிக்கச் சிறப்புடன் அமைவுற்ற சொல்லினைப் போலன்றோ ஒலிக்கிறது.  இதனால் ஏமாந்துவிடக் கூடாது. மெய்ப்பொருள் காணும் மேலான எண்ணத்துடன் என்றும் செயல்படுதலே நன்றாகும்.

பரத்தல் என்ற சொல் விரிவாய் இருத்தல் என்று பொருள்படும்.  தொழிற்பெயர்கள் அதாவது வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லாக மாறும் சொற்கள்,  பலவகைகளில் மாறும்; அதிலொரு வகை முதலெழுத்து நீண்டு அமைவதாகும்.  ஓர் எளிய உதாரணம்:  சுடு என்ற வினைச்சொல் சூடு என்று நீண்டமைந்து பெயராகிறது. பின்னும் அது ஒரு விகுதி பெற்றுச் சூடு என்று நிற்பது சூடம் ஆகும்.  பின்னும் அம் விகுதி அன் ஆகி சூடன் என்றாகும். பொருளிலும் மாறுதல் ஏற்படுதல் உளது.

இவ்வாறாக.  பர என்ற வினைச்சொல் பார் என்று அமையும். பார் என்பது இந்தப் பரந்த உலகம் என்று பொருள்படும்.  முன்னரே சொன்னோம்: பரத்தல் என்றால் விரிந்தமைதல். பார் என்ற சொல் பின்னர் இறுதி எழுத்து வீழ்ந்து பா என்று ஆகும். இந்த நிலையைக் கடைக்குறை என்பர். அதாவது கடைசி எழுத்துக் குறைந்து வருவதாகும். பொருளும் பரவலாக இருத்தல் என்பதே.

பாருங்கள்:  காலின் கீழ்ப்பகுதி பரவலாக அல்லது நடக்கும்போது நிற்க வசதியாக விரிந்து அமைந்துள்ளது.  மிகப்   பொருத்தமாக அதற்குப் "பாதம்" என்றனர்.  பா : பரவலாக;   து:  இருப்பது;  அம்: இது சொல்லின் இறுதி. அல்லது விகுதி.

பாதுகை: இது கீழே பரவலாக இருக்கும் காலணியைக் குறித்தது. ஒரு பற்றன் இராமபிரானின் பாதுகையே துணை என்று தொழுகிறான். இதனால் பாதுகை என்ற சொல்லுக்குத் துணை என்ற பொருளும் ஏற்பட்டது:  இது பெறுபொருள். 

தாள் என்பது  தாழ இருக்கும் காலைக் குறிக்கிறது.  "தாள் பணிந்து போற்றினேன் "  என்பதில்லையா:  அதுபோல்வது.  இது தாழ இருப்பதைக் குறிக்கும் தாழ் என்ற வினைச்சொல்லுடன் உறவுடைய சொல். உங்கள் அக்காவும் தம்பியும் உறவினர் ஆனதுபோலவே சொற்களெல்லாம் உறவுமுறை போற்றுகின்றன,  உறவு கண்டும் பொருள் காணலாம்.

பரந்து தாழ்வாக இருக்கும் பகுதியே பாதாளம் ஆகும்.  வழக்கில் அது மிக ஆழத்தில் இருக்கும் நிலப்பகுதியைக் குறிக்க வழங்கப்படுகிறது.  இயல்பான சொற்பொருளுக்கு மிக்க ஆழ்ந்த பொருளைத் தந்துவிடும் வழக்கு என்பது.  வழக்கு என்றால் எப்படிச் சொல்லை ஒரு மொழியில் மக்கள் வழங்கினார்கள் என்பது.  தொல்காப்பியப் பாயிரத்தல் பனம்பாரனார் எழுத்தையும் சொல்லையும் மற்றும் பொருளிலக்கணத்தையும் செய்யுள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் விதம் இவற்றையெல்லாம் ஆராய்ந்ததாகக் கூறுகிறார்.  இவ்வாறு பாதாளம் என்ற சொல் மக்கள் பயன் கொண்ட விதம் காணின் மேலாக உள்ள நிலப் பள்ளங்களைக் குறிக்காமல் ஆழமான நிலப் பரப்புப் பள்ளங்களையே பாதாளம் என்றனர்.  சொல்லின் அமைப்பை மட்டும் கண்டு உணர்ந்தால் பக்கத்தில் உள்ள படுகையைக்கூடப் பாதாளம் என்னலாம் எனினும் வழக்கில் அது இன்னும் ஆழமான பரந்த கீழ்நிலத்தைக் குறிக்கிறது; நாமும் இவ்வழக்குக்கு மதிப்பளித்து அவ்வாறே பயன்படுத்தி நம் மொழியைக் காப்போமாக.பாதாளம் என்பதும் ஒரு காரண இடுகுறிப் பெயரே ஆகும்.

பிழைகட்கு பின் கவனிப்பு.

இலக்குமி என்ற தெய்வச் சொல்

இல் என்பது தமிழில் வீடு என்று பொருள்படும் இனிய சொல். ஆத்துக்காரி என்பதனை இல்லத்தரசி என்று சொல்கிறோம்.

இல் என்பது ஓர் உருபுமாகும். கண்ணில்,   காதில், தோட்டத்தில் வீட்டில் என்று இவ்வுருபு இடப்பொருள் தருகிறது.

இல்லை என்று பொருள்தரும் இல் என்னும் சொல் வேறு பொருளுடைய வேறு சொல். இச்சொல் பற்றி ஈண்டு பேசவில்லை.

 ஆண்மகனை மணம்புரிந்து வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை  இலக்குமி என்றே சொல்கிறோம். நம் வீட்டுக்கு ஓர் இலக்குமி வந்திருக்கின்றாள் என்று எல்லோரும் மகிழ்வுகொண்டாடுவர்.  கிருகலெட்சுமி என்ற தொடரும் வழக்கில் உள்ளது. இலக்குமி வீட்டுக்கு நல்லனவெல்லாம் கொண்டுவருபவள்.

இலக்குமி:

இச்சொல்லில் இல் என்ற  சொல் முன் நிற்கின்றது. இதைப் பிரித்தால்:

இல் :  வீடு.
அ  :      அவ்விடத்து.  அங்கு.
கு:        சேர்விடம்.
உ =     முன்பு.
மி :       இது ம் மற்றும் இ என்ற இரண்டும் இணைந்த இறுதி.  பூமி என்ற சொல்லுக்கு யாம் கூறிய விளக்கத்தை மனத்தில் இருத்திக்கொண்டு நோக்குக.

இதில் கு என்பதன் உகரம் கெட்டது,

இது " இல்லத்துக்கு வந்து சேர்ந்து முன் நிற்பவள் "  என்பதாகிய பொருளைத் தருகிறது.  இதில் வந்த  இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளலாம்.  பூமி என்பதில் அஃறிணைக்குரிய விகுதி எனலே பொருந்துவது.

இலக்குமி என்ற இதே சொல்தான் இலட்சுமி என்றும் விரிந்து கிருகலெட்சுமி என்றும் வருகின்றன

இலக்கு என்ற சொல்லும் இழு இலு என்பவும் தொடர்புடையன. அவற்றைப் பின்னர் காண்போம்.

புதன், 19 செப்டம்பர், 2018

காமாக்கியா என்பது என்ன தெய்வம்?

மேகாலயாவில் காமாக்கியா பீடம் என்று ஓர் அம்மனைப் போற்றுமிடம் உள்ளது,  இச்சொல் யாது என்பதை இப்போது அறிந்துகொள்வோம்,

காமாட்சி என்பது ஒரு தெய்வத்தின் பெயர்.

காஞ்சி காமாட்சி அம்மையை உங்களுக்குத் தெரியும்.

இந்தச் சொல்லை இருவகையாகப் பிரிக்கலாம்.

மக்களைக் காக்கும் மாண்பினை உடையாள் என்பது ஒரு வகை.

கா :  காக்கும்;
மாட்சி :  மாண்பு.

இது தெய்வத்தைக் குறிப்பதால்  மாண்பு என்பதை மாண்பு உடையாள் என்று பொருள் கூறல் வேண்டும்.

கா+  மாட்சி  =  காக்கும் மாட்சி (உடையவள்.)

இனி இதனைக் காமம்+  ஆட்சி என்றும் பிரிக்கமுடியும்.

காமம் + ஆட்சி
=  காம +  ஆட்சி .  இதில் முதல் சொல்லில்  ( நிலை மொழியில்) உள்ள  இறுதி அகரம் கெடும் அல்லது விடப்படும்.   காம்+  ஆட்சி =  காமாட்சி ஆகிவிடும்.

காமாட்சிக்கு  ஓர் ~ ஆள் பெண்பால் விகுதி சேர்த்தால்:

காமாட்சியாள் என்றாகும்.

ஆட்சி என்பது ஆக்கி என்று திரியும்.   இன்னொரு சொல் எடுத்துக்காட்டாக:
பட்சி > பக்கி.

ஆகவே  ஆக்கியாள் என்று மாறிவிடும்.

காமாக்கியாள்.  இந்த ஆள் விகுதியில் உள்ள ள் பிற மொழிகளில் வருவதில்லை.

காமாக்கியாள்  >  காமாக்கியா.

முடிவு:  மேகாலயா முதலான மாநிலங்களில்  காமாக்கிய(/யா) என்றே வழங்கும்  இவ்வம்மனின் பெயர்.

அம்மனின் பெயர்:  எப்படிச் சொன்னாலும் முழுநிறைவே :  பூரணமே.
எல்லோரையும் வாழ்விக்க வேண்டும்.