ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

மனிதனை விலங்குபோல் படைத்துள்ளார்.

மனிதத் தசையூண் மலைப்பாம்பு ---பூவின்
மதுவுண்ட வண்டாய் மயங்கியதே;

இனிதித் தசையே எனவிழுங்கி ---- ஓர்

எண்ணைந்  தடிக்குள் உறங்கியதே.



இவனுக் குணவாம் விலங்குகளே --- இவன்

எவ்விலங் கினுக்கும் உணவாகுவான்;

இவற்கும் அவற்றுக்கும் வேறுபாடு ----- உண்டோ

இறைவன் படைப்பினில் கூறுபாடு.



மாந்தனை நீயுண்க என்றுசொன்னான் ---பல

மாக்களும் பின்பற்றி வந்துள்ளன;

வாழ்ந்திட மாந்தனே உண்மாவினை --- என

மாந்தனும் வாழ்ந்திடப் பின்பற்றினான்.



ஆய்ந்திடில் மாந்தனுக் கென்ன இடம்--- அவன்

அருந்தலை மைக்கிங்  கறிகுறியோ  

சேர்ந்தெழுப் பிட்டதோர்  கூக்குரலால் ---- இவன்

சீர்பெற்று மேலான தெப்படியோ?

மா = விலங்கு
உண் மா =   விலங்குகளை உண்.


மலைப்பாம்பு விழுங்கிய பெண் கதை. சொடுக்கி வாசிக்க:

மேற்குறித்த செய்தியைப் பாருங்கள். மனிதன் 
விலங்குகட்கு உணவு.  விலங்குகள் மனிதர்க்கு 
உணவு. எல்லாம் இறுதியில் அழிவை எய்துவதும்
படிப்பகர்ப்புகளை உண்டாக்கிக்கொள்வதுமாகவே
உள்ளன. இந்தக் கவிதை இதனைச்  சிந்திக்கிறது.
மனிதன் எப்படி விலங்கினும் மேலானவன் என்று 
சொல்லிக்கொள்கிறான்.

மனிதன் தன் இயல்பினாலும் கடவுள் கட்டளையாலும்
மேலானவன். அப்படியானால் பல நிகழ்வுகளில் 
மனிதனுக்கு ===  குழந்தைக்கும் வளர்ச்சி 
பெற்றவளுக்கும் உள்ள வேறுபாடு ஏன் தெரியாமல் 
போனது? ஆட்டினுடன் ஏன் 
வன்புணர்வில் ஈடுபடுகிறான்?

மனிதனும் ஒரு விலங்கு அல்லனோ? மனிதன் 
தற்பயிற்சி மூலமாகவும் சிந்தித்ததன் மூலமாகவும் 
வேறுபாடுகிறான். மற்றபடி அவனும் விலங்குதான்.

உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். 

Previews failed to load.  Impedes editing. Read with necessary
corrections as you deem fit until we are able to edit. Thank you.




சனி, 4 ஆகஸ்ட், 2018

தலைவரும் தொண்டரும் வேறுபாடு

தலைவருக்குப் படையுண்டு காவல் உண்டு;
தலைநடுங்கும் பயமில்லை நன்றே என்றும்;
தொண்டருக்கு நல்லுதைகள் நையக் குத்தித்
தொண்டைகிழி பட்டுவலி மிண்டா வண்ணம்
ஒண்டுதற்கும் வீடின்றி ஓடும் துன்பம்
உலகினிலே நித்தலுமே உண்டம் மாவே.
பண்டிதுவே இன்றுமுண்டு என்றும்  ஆமே
பாரினொரு பான்மைதனை மாற்றப் போமோ?

குறிப்பு:

யாப்பியல்:

தலைவர் -  தொண்டர்: முரண்தொடை.

என் வீட்டுக்குப் பின் பத்து நாய்கள் போன துன்பம்

பத்துநாய்கள் பின் தெருவில் நத்து நாட்கள்
பறந்தனவே வாராவோ  எங்கே  எங்கே;
ஒத்திருந்த காலமதை உன்னு கின்றேன்;
ஓய்ந்திடாத குரைப்புக்குள் ஊறிப்  போன
அத்திருந்து செவிகட்க  மைதி தானோ
ஆகவிது வேறுலகும் ஆயிற்  றம்மோய்!
மெத்தையிலே கிடந்தாலும் மேவு நெஞ்சில்
மீண்டுமொரு மகிழ்வில்லை யாண்டும் துன்பே.

இங்கு பத்து நாய்களோ அதற்கு மேலோ இருந்தன. பின் வீட்டு சீனப் புண்ணியவான் பகலில் இறைச்சி கோழி உணவுகள் விற்கும் கடைகட்குப் போய் வாடிக்கையாக அவற்றுக்கு  எலும்பு இறைச்சி கலந்த சோறு கொண்டுவந்து போட்டார். தெம்பாகக் குலைத்துக் கொண்டிருந்தன.
அந்த வீட்டுச் சீன அம்மையார் சொன்னார்: புதிதாக இங்கு குடிவந்தவர்கள் போட்ட புகார் மனுவின் காரணமாக எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும்படி நகர அவை உத்தரவிட்டுவிட்டது. எல்லாம் போயிற்று என்றார்.

பாவம், எங்கே போய் என்ன பாடுபடுகின்றனவோ! சிலவற்றை மீளா உறக்கத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டார்களாம்.

இந்தக் கவி அது பற்றியது.

12  12 12 12 12 12 12 12

பின் தெரு -  என் வீட்டின் பின்னால் உள்ள தெரு.
நத்து(ம்)  -   பின்செல்லும்; சோற்றுக்காகப் பின்னால் போகும்.
ஒத்திருந்த - (குலைத்தாலும் வாடை கொடுத்தாலும் ) சம்மதித்திருந்த;
உன்னுகின்றேன் = சிந்திக்கின்றேன்;
குரைப்பு - நாய் குலைத்தல்.
திருந்து செவிகள் - நல்ல செவிகள்; இசை தெய்வநாமம் முதலிய கேட்கத்
தகுதியுடைய காதுகள்;
மேவும் - பொருந்தும் (நெஞ்சில்)
யாண்டும் -  எப்போதும்