சனி, 4 ஆகஸ்ட், 2018

தலைவரும் தொண்டரும் வேறுபாடு

தலைவருக்குப் படையுண்டு காவல் உண்டு;
தலைநடுங்கும் பயமில்லை நன்றே என்றும்;
தொண்டருக்கு நல்லுதைகள் நையக் குத்தித்
தொண்டைகிழி பட்டுவலி மிண்டா வண்ணம்
ஒண்டுதற்கும் வீடின்றி ஓடும் துன்பம்
உலகினிலே நித்தலுமே உண்டம் மாவே.
பண்டிதுவே இன்றுமுண்டு என்றும்  ஆமே
பாரினொரு பான்மைதனை மாற்றப் போமோ?

குறிப்பு:

யாப்பியல்:

தலைவர் -  தொண்டர்: முரண்தொடை.

என் வீட்டுக்குப் பின் பத்து நாய்கள் போன துன்பம்

பத்துநாய்கள் பின் தெருவில் நத்து நாட்கள்
பறந்தனவே வாராவோ  எங்கே  எங்கே;
ஒத்திருந்த காலமதை உன்னு கின்றேன்;
ஓய்ந்திடாத குரைப்புக்குள் ஊறிப்  போன
அத்திருந்து செவிகட்க  மைதி தானோ
ஆகவிது வேறுலகும் ஆயிற்  றம்மோய்!
மெத்தையிலே கிடந்தாலும் மேவு நெஞ்சில்
மீண்டுமொரு மகிழ்வில்லை யாண்டும் துன்பே.

இங்கு பத்து நாய்களோ அதற்கு மேலோ இருந்தன. பின் வீட்டு சீனப் புண்ணியவான் பகலில் இறைச்சி கோழி உணவுகள் விற்கும் கடைகட்குப் போய் வாடிக்கையாக அவற்றுக்கு  எலும்பு இறைச்சி கலந்த சோறு கொண்டுவந்து போட்டார். தெம்பாகக் குலைத்துக் கொண்டிருந்தன.
அந்த வீட்டுச் சீன அம்மையார் சொன்னார்: புதிதாக இங்கு குடிவந்தவர்கள் போட்ட புகார் மனுவின் காரணமாக எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும்படி நகர அவை உத்தரவிட்டுவிட்டது. எல்லாம் போயிற்று என்றார்.

பாவம், எங்கே போய் என்ன பாடுபடுகின்றனவோ! சிலவற்றை மீளா உறக்கத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டார்களாம்.

இந்தக் கவி அது பற்றியது.

12  12 12 12 12 12 12 12

பின் தெரு -  என் வீட்டின் பின்னால் உள்ள தெரு.
நத்து(ம்)  -   பின்செல்லும்; சோற்றுக்காகப் பின்னால் போகும்.
ஒத்திருந்த - (குலைத்தாலும் வாடை கொடுத்தாலும் ) சம்மதித்திருந்த;
உன்னுகின்றேன் = சிந்திக்கின்றேன்;
குரைப்பு - நாய் குலைத்தல்.
திருந்து செவிகள் - நல்ல செவிகள்; இசை தெய்வநாமம் முதலிய கேட்கத்
தகுதியுடைய காதுகள்;
மேவும் - பொருந்தும் (நெஞ்சில்)
யாண்டும் -  எப்போதும்


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

போட்டாகாப்பி : ஒளிப்பகர்ப்பு


போட்டோகாப்பி   போட்டாகாப்பி ஃபோட்டோகாப்பி.

 போட்டோ என்பது ஆங்கில வழக்குச் சொல்.  இச்சொல் குறிக்கும் படத்துக்கு 

ஆங்கிலத்தில் முன் அமைந்த பெயர் “ஃபோட்டோகிராப்” என்பதுதான். இப்படத் தொழில்நுணுக்கம் இப்போது பழையதாகிவிட்டது. போட்டாகிராப் என்பதன் பேச்சுவழக்குச் சுருக்கமே “ஃபோட்டோ”  (போட்டா என்பதுமுண்டு). ஆகும்.
போட்டோ  என்றால் ஒளி என்பதே பொருள். போட்டோசிந்திசிஸ் என்ற சொல்லைக் காண்க.

ஒளியின் மூலம் எடுக்கப்படும் காப்பி  அல்லது பகர்ப்பு  ஒளிப்பகர்ப்பு ஆகிறது. இன்னொரு வகையில் இதைக் கூறுவதானால் :  படப்பகர்ப்பு என்று கூறவேண்டும்.

படி என்ற தமிழ்ச்சொல்லும் அதன் வட திரிபாகிய பிரதி என்பதும் ஒன்றன்படி இன்னொன்று அமைந்திருத்தலைக் குறிக்கிறது.  ஒன்றுபோலவே இன்னொன்று படிந்துள்ளது..  படி என்ற சொல்லின் அடிச்சொல் படு என்பது.
படு என்பதோ மிக்க அழகாக அமைந்த தமிழ்ச்சொல்..உன்மேல் என் கை படாமல் நடிக்கவேண்டும் என்று நடிகை கூறும்போது படுதல் என்றால் என்ன என்று விளங்கும்.,  பாயில் படு என்னுங்கால்  உன் முதுகு தலை கால்கள் எல்லாம் தரையில் விரித்திருக்கும் பாயில்  படும்படியாகக் கிட என்று பொருள். படுத்துவிட்டால் உடல் முழுமையாகப் பாயில் படிந்து கிடக்கிறது. 

படிதலாவது பொருளின் படத்தக்க எல்லாப் பகுதிகளும் படும்படியாக இருத்தலாகும்.  இப்படி ஒன்று இன்னொன்றில் படிந்து அதனால் உண்டாகும் உருவமைப்பே படி என்று உணர்க.  இனி வட அமைப்பு:  ப = ப்ர.  டி = தி.

படு > படி,
படு+ அம் =  படம்..

இனி போட்டோகாப்பி என்பதை படப்பகர்ப்பு அல்லது ஒளிப்பகர்ப்பு என்பதே நன்றாம்.