செவ்வாய், 19 ஜூன், 2018

நம் செந்தமிழ் வேலன் ஒரு வஜ்ஜிரவேலன்.

நம் வேலன் போர்முடித்து வாகை சூடியவன். அந்நிலையில் அவன் மிகுந்த வலிமையை வெளிப்படுத்தியவன். முள் என்றாலும் வேல் என்றாலும் உடற்பகுதியில் பதிந்த நிலையில் தம் வீரமிக்க அடியார்களை ஏற்று மகிழ்பவன்.  வீரத்தை விளையாட்டாகக் கொண்ட வேலன் வேறு எதைத்தான் விரும்புவான்?

குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல்.  குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான்,  முருகப்பிரானின் வேல்வலிமையால்.

அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.

வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?

வல் =  வலிமை.

சிற =  சிறந்த.

வல்சிற  வேல் >  வற்சிறவேல் >  வஜ்ஜிர வேல்.

ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை  வச்சிரவேலென்றெழுதினார்.

வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.

ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?

ஞாயிறு, 17 ஜூன், 2018

பயிற்சியமா அல்லது பரிச்சயமா?


பயிற்சி என்பதனோடு அம் என்ற விகுதியைச் சேர்த்தால் அது பயிற்சியம் என்றாகிவிடுமென்பது உங்களுக்கு எந்தப்  பேராசிரியனும் சொல்லிக்கொடுக்காமலே நன்றாகத் தெரியும்.  அம் விகுதிபெற்ற சொல் அப்படி உருக்கொள்ளுமென்பது சொல்லித் தெரிவதில்லை.  உங்கள் செவிகளே உங்கள் எசமானன் ஆகிவிடும். பேராசிரியனோ என்றால் அவன் அரிதின் முயன்று அறிந்தவற்றை எல்லாம்  அள்ளித்  தந்துவிடமாட்டான்.  வியக்கச் சிறிது சொல்வான்.

ஒரு குரு எல்லாவற்றையும் சீடனுக்கு அள்ளித்தருவதில்லை.

எசமான் என்பதையும் சீடன் என்பதையும் யாம் விளக்கியதுண்டு.  இப்போது அவை ஈண்டில்லை என்பதால் விரைவில் அவற்றையும் இடுகை செய்வோம்.

இனிச் சொல்லாய்வுக்கு வருவோம்.

சொல்லமைப்புகளில் எழுத்து நிரல்மாற்று அமைப்பும் ஒன்று உண்டு.  இதை எழுத்து முறைமாற்று என்றும் கூறுவதுண்டு.  இது எப்படி வருமென்றால் காட்டுதும்.  ு.

விசிறி  >  சிவிறி என்று வரும்.

இச்சொல்லில் விசி என்பது சிவி என்று வந்தது.

சில குழுவினர் நாத்தடுமாற்றத்தில் இப்படிப் பேசி நாளடைவில் நிரல்மாற்றுச் சொற்களும் மொழியி லிடம்பெற்றன என்பதே சரியானதாகும்.

மதுரை என்ற சொல்லும் இப்படி அமைந்ததே என்பதை இப்போது பலர் உணர்ந்துள்ளனர்.

பல மருத நிலத்தூர்கள் சூழ அமைந்த பெருநகரமே மதுரை.

அது மருதை ( மருத நிலம் சூழ் நகர்) என்று அமைந்து பின் மதுரை என்று திரிந்தது என்பதே சரி.  ~ ருதை என்பது ~துரை என்று எழுத்து முறைமாறி அமைந்தது.

விகடகவி என்ற சொல் மட்டும் இருபக்கமும் இருந்து படிக்க நன்றாகவே வரும். இதுபோலும் வேறு சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

இனிப் பயிற்சி என்பதோ பயில் என்பதினின்று சி விகுதி பெற்று அமைந்தது.

பயில்+சி =  பயிற்சி.
அம் சேர்க்க:  பயிற்சியம்.
நிரல் மாற்றில்:

பயிற்சி  >  பறிய்ச்சி  ஆகும்.   ற்  என்பது றி ஆனது.  யி என்பது ஒற்று  (ய்)  ஆனது.
சற்று வெளிப்படையாய் அமையாத நிரல்மாற்று.

பறிய்ச்சி என்பதில்  ய் - ச்  என்ற இரண்டு ஒற்றுக்களும் தேவைக்கு அதிகம்.  அவற்றை வெட்டுக.

இப்போது பறிய்ச்சி என்பது பறிச்சி ஆகிறது.

இப்போது பறிச்சி என்பது எதையோ பறிகொடுத்ததுபோல் அமைந்து தொல்லை தருவதால்பறி என்பதை பரி ஆக்கிக்கொள்க.

பரிச்சி என்பதனோடு அம் சேர்க்கப் பரிச்சயம் ஆகிறது.  சி என்பதை ச என்று மாற்றின் இனிதாகும்.  (  இனிதாக்கம் )

இதன் அடிச்சுவடுகளை மறைக்க:

பரி என்பதை முன்னொட்டாக ஆக்கி, சயம் என்பதை நிலைச்சொல் ஆக்கிடுக.

சொற்களை அமைப்பது என்றால் எவனும் உணராவண்ணம் பயன்படுத்தமட்டும் செய்தளிக்கவேண்டும்.

ஒரு சொல்லைப் பயன்படுத்தும் சின்னவனுக்கு அது எப்படி அமைந்தது என்று ஏன் தெரியவேண்டும்!வேண்டாமே.

ஆனால் இவ்வளவு மறைமாற்றுக்கும்  பொருள் மாறவில்லை.  ஒருவன் எதில் பயிற்சி பெறுகிறானோ அதில் அவனுக்குப் பயிற்சியம் > பரிச்சயம் ஏற்படும்.


சனி, 16 ஜூன், 2018

இலாவகம்


அந்த ஓடைக்குள் கால் போய்விடாமல் வெகு  இலாவகமாகவே குதித்துத் தாண்டிவிட்டான்.

இது வாக்கியம்.  ஓடையருகில் வந்தவுடன் எப்படித் தாண்டுவது, எப்படி அப்பால் செல்வது என்றெல்லாம் சிந்திக்கவுமில்லைஓடை எவ்வளவு அகலம், தாண்டமுடியுமா என்று அளவு எடுத்துக் கணக்குப் பார்க்கவில்லை; அகத்தில் ஒரு சிந்தனையுமின்றி, விழுந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இன்றிஅணிந்திருப்பதெல்லாம் நனைந்துவிடுமோ என்ற தயக்கமும் இன்றி, ஒரே தாண்டு; தாண்டிவிட்டான்.

இதுதான் இலாவகம்.  இது லாவகம் என்றும் எழுதவும் சொல்லவும் படும்.

இந்தக் கூட்டுச் சொல்லில் இரு சிறு சொற்கள் உள்ளன.

ஒன்று:  இல்லா;   இன்னொன்று அகம்.

ஒருவன் ஒரு காரியத்தைச் சற்றும் தயக்கமில்லாமல் ஆய்ந்து பார்க்காமல் செய்து முடிக்க வல்லனாயின் அது பெருந்திறம் ஆகும்.  "அருந்திறல்" என்றும் சொல்வோம்.

இல்லா  என்பது இலா என்று குறைந்து நிற்கின்றது.

அகம் என்பது சிந்தனை, தயக்கம் முதலியவற்றையும் முன்னேற்பாடு ஆகிய ஆயத்தங்களையும் குறிக்கும்.

ஆக,   " அகம்" செலுத்தாமல் என்று பொருள்.

இலா+ அகம் =  இலாவகம்.

அரங்குபோன்ற ஆற்றிடைக்குறையில் அமர்ந்துள்ள கடவுளின் இடம் -   அவருக்குப் பெருஞ்சீரான இடம்.  அது சீர்+அரங்கம் என்ப்பட்டது.  சீரங்கம் ஆகி, அங்குள்ள சாமி அரங்கசாமி ஆனார்.  பின் "ரங்கசாமி" ஆனது.  அகரம் குறைந்து சொல் தலைக்குறை ஆனது.

அதுவேபோல். இலாவகம் என்பதும் முதற்குறையாகி  லாவகம் ஆயிற்று.

அறிவீர்; மகிழ்வீர்.

(சில வேளைகளில் எங்கோ செப்பனிடும் பணி நடைபெறுகிறது போலும். இணையம் கிட்டுவதில் இடையீடு உள்ளபடியால் இன்றுகாலை இதை மேலேற்ற முடியவில்லை.)


எழுத்துப் பிழைகள் இருப்பின் பின் சரிசெய்யப்படும்.