செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்: ஒரு தொகுப்பு:-



பூமி பற்றிய சொற்கள்.

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்:  ஒரு தொகுப்பு:-


பூத்தல்:  தோன்றுதல்.

பூ+ ம் + இ  =  பூமி.

பல உயிர்களும் தாவரங்களும் ( நிலைத்திணை உயிரிகளும்)
தோன்றுமிடம்.   அல்லது  இறையருளால் தோன்றிய ஓர் இடம்
அல்லது கோள்.

தருதல் :  கொடுத்தல்.

தரு+ அணி > தார்+அணி =  தாரணி.

தரு என்பது தார் என்று திரியும்.  தரு> தார் ( தாராயோ என்ற
வினைமுற்றை நோக்கின் புரியும்.)


தாரணி > தரணி.  இது   முதனிலை குறுகிய சொல்.

தரணி >  தரு+ அணி > தர்+ அணி > தரணி.
இதில் உகரம் கெட்டது.


தருதல்:  தரை.

தரு+ஐ = தரை.

இது பல மொழிகளிலும் பரவிய தமிழ்ச்சொல். டெரா என்று

இலத்தீன் மொழிக்கும் சென்றது நம் பெருமைக்கு¡¢யதே.

தமிழ் பல மொழிகட்கும் சொல்வளம் தந்துள்ளது.

இடம்:

எதை எங்கு இடுகிறோமோ அது அங்கு இடம் கொள்கிறது.

இடு+அம் = இடம்.

இடு> இடை.

இடு >இடுக்கு.  (கு - விகுதி).


மேல் இருக்கும் இடம்:


மே+து + இன் + இ.

மேல் (தன்மேல்) உயிர்கள் தாவரங்கள் இவற்றை உடைய (து

 ) ஆகிய இடம்.

வினோதம் என்ற சொல்.

ஓதுதல் என்ற சொல் இப்போது பலருக்கும் பல
பொருளைத் தருவதாக இருக்கின்றது.  "அந்த
அறையில் என்ன நடக்கிறது என்றவர்க்கு
அங்கு என்னவோ ஓதிக்கொண்டிருக்கிறார்கள்
என்று பதில் வருகிறது. இது பாடம் படிப்பதைக்
குறிக்கவில்லை. சமய மந்திரம் ஓதுவதையே
சுட்டுகிறது. ஓதாமல் ஒரு  நாளும் இருக்க
வேண்டாம் என்றால் ஒரு நாளும் படிக்காமல்
இருக்க வேண்டாம் என்பதே பொருள் என்று
தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.

யாரோ காற்றில் ஓதிவிட்டு அது வந்து
இவரைத் தாக்கிவிட்டது என்று பேசிக்
கொள்வதும் காதில் விழுகிறது.

உண்மையில் ஓது என்பது மிக்க எளிதாய்
அமைந்த  ஓர் ஒலிக்குறிப்புச் சொல். ஓ
என்பது ஒரு நெட்டொலி. அதை
எழுப்புவதையே முற்காலத்தில் ஓது
என்றார்கள். ஓ என்பது ஒலியைக்குறிக்க, து
என்பது வினையாக்க விகுதியாய்
வருகின்றது. இன்னோர் எடுத்துக்காட்டு:
விழுது என்பது. விழு என்ற வினையினின்றே
இதுவும் அமைந்தது.கை என்பது ஒரு சினைப்
பெயர். அதாவது உறுப்பின் பெயர்.
அதில் து விகுதி சேர்த்துக் கைது என்ற சொல்
 அமைந்தது. ஒரு குற்றவாளியைக் கையால்
 பிடித்து அடக்குவதைச் செயலளவில்
குறிக்குமென்றாலும் சட்டத்தில் இதற்கு
வரையறவுகள் இருத்தலை அறிஞர் சுட்டுவர்.
 நாம் விளக்குவது சொல் மட்டுமே.

சிறிய கொய்யாக் கனியையே பார்த்தவர்
இப்போது தலைப் பெரிதாய் ஒன்று காணின்,
 அதைப் புதுமை என்று சொல்வர். அதாவது
பெரிது என்று ஓதுவர்.  அல்லது வியன் என்று ஓதுவர்.
வியன் என்றால் பெரிது என்று பொருள்.

இச்சொல்லை " விரிநீர் வியனுலகு"
என்று குறளில் காணலாம்.

வியன் ஓது அம் > வினோதம்.
(பெரிது என்று ஓதுதல்),

பிற்காலத்தில் வழக்கில் பெரிதாயினும்
சிறிதாயினும்  புதுமையாய் வியக்க வைக்கும்
பொருளைக் குறித்தது இந்தச் சொல்.

ம்... விய வியத்தல் என்ற சொல்லிலேயே
வியன் இருக்கிறதே. காணவில்லை?

வினோதமென்பதில் ஒரு யகரமே
வெட்டுண்டது.


இதற்கு மற்றொரு முடிபும் கூறலாம்,  அது
இங்கே  சொடுக்கிக் காண்க.

http://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_59.html

சில சொற்கள் இருவழிகளில் பிரித்துக்காணக்கூடியனவாய்
இருக்கும். இவற்றைப் பல்பிறப்பிகள் அல்லது இருபிறப்பிகள்
என்று பொருந்துமாறு குறித்தல் கூடும். சில புலவர்கள்
இவற்றைப் பாடல்களில் அமைத்து சில பொருள்கள் தோன்றப்
பாடுவர்.   சிலேடை : சிலவாக எடுத்துக்கொள்ள இடந்தருபவை,
சில+எடு+ஐ.  எடு என்பது முதனிலை திரிந்து ஏடு என்று
வந்துள்ளது.  இதுவே சிலேடையாம். சில்+ஏடு+ஐ எனினுமாம்.


மாற்றம் சிறிதே.  அறிந்து மகிழுங்கள்.




திங்கள், 2 ஏப்ரல், 2018

தென் கண்டத்துப் பாலை அழகு Australian deserts



மேற்குத் தென்`கண்டத்தில்
மிகுவிரி மணற்பரப்பும்
ஏற்கும் ஒளிவெள்ளத்து
எல்லோன் இறங்குமுகம்.

ஒட்டகத்து உயர்முதுகை
ஒட்டியே அமர்ந்து நகர்
வெட்டவெளிச் செலவினையே
வேண்டிவரு வோர்பலரே.

தாழ்வரு செடிகொடிகள்
தருங்கவின் கண்டுவிட்டீர்
வாழ்வருகி விட்டவரள்
வண்ணமிது கண்ணுறுவீர்.

மாலைவெயில் மஞ்சளிட்டு
மனம்கொஞ்சும் இராக்கூட்டும்
பாலையிலும் இயற்கைத்தாய்
பதுக்கிவைத்த பெருகெழிலே.


 அரும்பொருள்:

மேற்குத் தென் கண்டம்:  ஆஸ்திரேலியாவின்
மேற்குப் பகுதி.
ஒளி வெள்ளம் :  சூரிய ஒளி.
எல்லோன்: சூரியன்.

வெட்ட=  வெளிச்சமுள்ள
செலவு :  பயணம்
வேண்டி : விரும்பி

தாழ்வரு : தா(ழ்)வரங்களாகிய.
வாழ்வருகி : உயிர்கள் வாழாத.
வரள் வண்ணம்: வரண்டுபோன அழகு.

இரா: இரவு
கூட்டும்: சேர்க்கும்
பெருகெழில்: அதிக அழகு.
பாலை: பாலைவனம் 

கருத்து:  வரண்டுவிட்ட உயிர்கள் வாழாத பாலை
வனமும்கூட மாலை வெயில் சாயும் நேரம் ஒட்டகத்தில்
ஏறிச்செல்கையில் ஓர் மறைந்துகிடந்த ஒப்பற்ற அழகினையே
வெளிக்காட்டுகிறது.  இயற்கை அனைத்தும் எல்லாம்
அழகே.