வியாழன், 15 மார்ச், 2018

மொழியில் துணைவினைகள்:





ஒரு மலையாளி இன்னொருவருவருடன் மலையாள மொழியில் உரையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது முதலாமவர்  ஓடிக்களை என்றார். இரண்டாமவர் இந்தச் சொல்லைப் பிடித்துக்கொண்டு: ஓடாம். பின்ன களையின்னது எங்ஙன என்றார்.  இதற்கு என்ன பொருளென்றால்:  ஓடலாம்; எப்படி வீசுவது ? என்பதுதான்.

களை என்றால் வீசுவது, எறிவது என்று பொருள். இந்தச் சொல் தமிழிலும் வழங்குவதுதான்.  ஆனால் வாக்கியத்தில் இப்படிப் பயன்படுத்துவதில்லை.
அரசியலில் அநாகரிகத்தைக் களைந்திடுவோம் என்று ஒரு சொற்பொழிவாளர் பேசுவார்.   ஒரு வேண்டாத செய்கையாளனைக் குறிப்பிட்டு:  இதுபோன்ற புல்லுருவிகளைக் களையெடுக்கவேண்டும் என்பார்.  வயலில் களைக்கொட்டு ஒடிஞ்சி மெனக்கெட்டுப் போச்சு என்பார் ஒருவர் . களை என்ற சொல்லும் அவ்வப்போது பயன்பாட்டி;ல் வருவதுதான்.

ஆனால் ஓடிக்களை என்பதில் களை என்பது வீசி எறிவது என்பது பொருளன்று.  ஓடுகின்ற செயலை விரைவாகச் செய்து முடித்துவிடு என்று பொருள்.  ஓடிக்கொண்டிரு என்பதற்கு எதிரான வினைவகை அதுவாகும்.

களை என்பதுபோலும் சொற்கள் வினைமுற்றுக்களில் துணைவினையாக வருகின்றன.

ஓடிவிடு; என்று சொல்லும்போது விடு என்பதற்குத் தனிப்பொருள் இல்லை.
அது ஓடுகின்ற செயலை விரைந்து முற்றுப்பெறும்படி செய் என்று பொருள்தரும்.

எனவே அது ஒரு துணைவினையாக வந்து ஓடிவிடு என்ற வினைமுற்றின் ஆற்றலை மிகுத்து முடித்துவைக்கிறது.

செய்திடுவோம்.  பாடிடுவோம் கூடிடுவோம் என்பவற்றில் இடு என்பதும் ஒரு துணைவினையே.

சென்றொழி,   வந்தொழி,  கண்டொழி என்று பண்டை நாட்களில் பேசும் பழக்கம் இருந்திருக்கிறது.  இவற்றுக்கு: சென்றுவிடு, வந்துவிடு. கண்டுவிடு என்று இக்காலத்தில் பொருள்கொள்ளவேண்டும்.  ஒழித்தல். விடுதல் என்பன துணைவினைகளே.  பெரும்பாலும் தனிப்பொருள் இல்லை.

பொருட்சிறப்பு இருக்குமாயின் இவைபோலும் துணைவினைகட்குத் தனிப்பொருள் தரலாம்.

ஓடிக்களை என்பதில் எதைக் களைவது என்று கேட்டுவிட்டால் அதிலும் ஓர் இடர் பிறந்துவிடுகிறது.

அறிந்து மகிழ்வீர்.

தகனம்.



தகனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

தகத்தக என்பது எரிதல் ஒளிவீசுதல் என்பவற்றின் குறிப்பு.

தக என்பதனோடு அனல் என்பதையும் எடுத்துக்கொள்க.

அனல் என்பதில் அன என்பதை எடுத்துக்கொண்டால்:

தக+ அன.=  தகன என்றாகும்.

அம் விகுதி புணர்த்துக.

தகனம் ஆகிறது.                   

இது ஒரு புனைவுச்சொல் ஆகும்.

இதை அழகாகவே புனைந்துள்ளனர்  பண்டையர்.

புதன், 14 மார்ச், 2018

உண்மை பொய்

கடற்கடியில் கிடக்கின்ற மீனே நானே
கடல்தொடங்கும் இடம்யாதோ கழறு வாயே!

கிடக்கின்ற இடம்தானே கடல்தொ  டங்கும்;
மடக்காமல் மறைக்காமல் விடையே சொல்வாய்.

கரைப்புறத்து நின்றபடி உரைப்பாய் நீயும்;
கடல்நிற்கும் இடந்தனிலே தொடங்கு மென்பாய்.

உரைப்பதெது வானாலும் குறைப்பக் கூட்ட
முறைப்படுமோ சிறைப்படுமோ உண்மை தானே.

(கிறுக்கியபடி வந்த கவி)










ர்