திங்கள், 19 பிப்ரவரி, 2018

அன்னை நோய்...(யாப்பியற் குறிப்புகளுடன்)



அன்னைக்கு நோய்கண் டதனால் மருத்துவர்
தம்மைப் பலமணிக்கூ றண்மியே ==  எண்மையொடு
யாம்பரிய நின்றோமே  யாதும் செயலறியத்
தீம்பெரிய தேவுபணிந்  தோம்.


அடிக்குறிப்புகள்:

அன்னை -  தம்மை எதுகை

அகரமும் தகரமும் ஈண்டு மாத்திரையில் ஒத்தன.  
இரண்டாம்  எழுத்தாகிய  னகரமும் மகரமும் 
ஒன்றினவாகவே  கொள்ளவேண்டும். ஏனெனில் 
னகரமும் மகரமும் போலியாவன.  எடுத்துக்காட்டு: திறம் -
திறன்.  போலி எதுகையாகிறது எனலாம் என்றாலும் மூன்றாம் 
எழுத்தாகிய ஐகாரம் ஒன்றுகிறது.  எனவே எதுகையில் 
கேடொன்றுமில்லை  யாகிறது. இவ்வெதுகை நிற்பதே.

அன்னைக்குத் தன்னை எதுகையானால் ஒருமை
பன்மை மயக்கமாகும்.  எனினும் பலர் அப்படி
எழுதுவர்.

அன் :  றண் : எண் என்று ஒருவாறு ஒன்றுவதுடன்
மகர மிகர மைகாரங்களும்  ஒன்றி நயம்தருவனவாயின. 


யாமுருகி நின்றோமே  யாதும் செயலறியத்

யாமுருகி என்பதும் பொருந்தும் சீர்தான்.  தீம்பெருகு
என்னும் சீருக்கு எதிராக நிற்கும் தகுதி உடையதே
ஆகும். இதையே முதலில் பெய்து பாடியிருந்தோம்.
இருப்பினும் யாம்உருகி என்பது  அப்படியே நில்லாது
புணர்ச்சி இலக்கணத்தின் காரணமாக யாமுருகி
என்று  கலந்துவிடுகின்றது. இதனால் பாதகம்
ஒன்றுமில்லைதான்.  என்றாலும்:

இதற்குப் பதிலாக "யாம்பரிய" என்று பாடினால்
பொருந்தும் என்பது எம் துணிபு.  பரிய என்பது
நான்காவது சீரில் வரும் செயலறிய என்பதுடன்
ஓர் நயம் பயக்கின்றது.  யாம்பரிய :  செயலறிய என்று
இரண்டிலும் உள்ள இறுதி அசைகள் ஓர் ஒன்றுதலைத்
தருவனவாகின்றன.

 தீம்பெருகு தேவுபணிந்  தோம்.

இதுவே இறுதியடியாய் இருந்தது.  இதை "தீம்பெரிய 
தேவுபணிந்  தோம்"  என்று மாற்றினால் இன்னும்
இனிய நயம் உண்டாகுமே என்று தோன்றியது.  
இங்ஙனமே  இறுதிவடிவம் தரப்பட்டது.

கவி பாடுங்கால் ஓசைநயத்தையும் பாடுவோன்
கவனிக்கவேண்டியுள்ளது.

எத்தகு சொற்களால் புனைதல் அழகு என்பது
கவிபாடுவோன் தானே தீர்மானித்தற்குரியதே.
இதைக் கேட்போனுடன் பகிர்ந்துகொள்வது
அரிது.  எனினும் ஈண்டு பகிர்ந்துகொள்வோம்.
நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

அரும்பொருள்

பலமணிக்கூறு :  பலமணி நேரம்
அணிமியே -  நெருங்கிச் சென்று
எண்மை -  எளிமையுடன்,
பரிய -  இரங்கலுடன்; மனமிரங்கிய நிலையில்.
தேவு -  கடவுள்;  தேவன்.


சனி, 17 பிப்ரவரி, 2018

பாடம், நெட்டுரு, மனனம், எதுகை,மோனை



மறதிக்கு எதிரான போராட்டம்:

பண்டை மக்கள் மறதிக்கு எதிராகப் ஒரு பெரும் போராட்டமே நடத்தவேண்டி யிருந்தது.  ஒரு பாடலைப் பலமுறை வாயாற் சொல்லி அதனை நெட்டுருச் செய்தனர் கல்வி கற்பவர்கள். அப்பொழுதுதான் பாடல் மனத்திற் பதிந்தது. இதை “  மனப்பாடம் “ என்றனர்.   மனத்திற் படிவதுதான் மனப்பாடம்.   படி+ அம் = பாடம்.  படி(தல்) வினைச்சொல்.  இது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றது.  படி என்பதன் இறுதி இகரம் தொலைந்தது.  கெட்டது  என்பது இலக்கணச் சொலவு ஆகும்.

பாடம் என்பது மனத்திற் படியச் செய்யும் கருவியாகும்.  செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதைத்தான் குறிக்கிறது. நாவினால் பலமுறை சொல்ல வேண்டும்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு இது முரணழகு தருகிறது.

படிதல், படித்தல், வாய்பாடு முதலியன

படிதல் என்பது தானே சொல்லச்சொல்ல மனத்துள் படிவது.  படித்தல் என்பது படிதல் என்பதன் பிறவினை.  படித்தலாவது படியும்படி செய்தல். இரண்டுக்கும் படி என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல்வினை ஆகும்.  படி என்ற சொல் படு என்ற மூலவினையினின்று வருகிறது.

படு > படி.    படுதல்> படிதல். படித்தல்.

படுதல் என்ற சொல்லும் படுதல் (தன்வினை) ,  படுத்தல் (பிறவினை) என வருதல் கண்கூடு

பாடுதல் என்ற வினையும் படுதல் என்பதில் தோன்றியதே ஆகும்.  வாயிற்படு முகத்தான் வெளிப்படுவதே பாடல்,  அது பாடுவது.

எண்சுவடி முறையில் பெருக்கல் வரிகளை வாயில்பட மனப்பாடம் செய்கிறோம். அதுவே “வாய்பாடு”  ஆகும்.    வாயிற்படிந்து மனத்திலும் சென்று கணக்குப் படிகிறது.  வாய்படுதல் > வாய்பாடு.   படு> பாடு:  முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

நடு > நடி போலவே படு> படி என்பதும்.   இத்தகைய அனைத்தும் ஒப்புமையாக்கமாகும்.  நள் என்ற அடியை விளக்கும் இடுகையை 2 நாட்களின் முன் வெளியிட்டுள்ளோம்.

நெட்டுருச் செய்வதை மன்னம் என்றும் சொல்வர்.

நெடு+ உரு = நெட்டுரு.

( நீளமாக உருப்போட்டு மனத்துள் அமைத்தல்)
மனம்> மனன்  >  மனன்  + அம் =  மன்னம்.   மனத்தில் அமைத்தல்.

திறம் > திறன்  போல மனம் > மனன்  ஆகும்.  மகரனகரப் போலி.
மன்னுதல்:  நிலைபெறுதல்.  எண்ணங்கள் நிலைகொள்ளுமிடம் மனம்.
மன்+அம் =  மனம்.

முன்னுதல் என்பது மன்னுதல் என்று திரிந்ததென்பர்.

மறதியை மாற்ற:

இன்று பாடலுக்கு அழகுறுத்துதலாக எண்ணப்பெறும் எதுகை, மோனை, தளை, தொடை முதலியவும் மறதிக்கு எதிரான போராட்டத்தின்  விளைவே
ஆகும்.

மறதி என ஒரு பாவி என்று உருவகப்படுத்தினார் வள்ளுவனார்.  மறதியை எதிர்த்துப் போராடப்போன மனிதகுலம் இன்று கணினிவரை வந்துவிட்டது.
வேறுபயன்`களும் இதில் விளைந்துள்ளன.

மீண்டும் சந்திப்போம்.

சமஸ்கிருதப் பாடல்கள் மறைந்தன பல

சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்.



அழிந்துபோன நூல்களும் பாடல்களும்

தமிழில் பல நூல்களும் பாடல்களும் அழிந்தன.  இங்கனமே சமஸ்கிருதத்துக்கும்  பல பாடல்கள் எட்டாதொழிந்தன. இதற்குக் காரணம் இறைவனைப் பாடித் துதித்தவர்கள் தம் பாடல்களை எழுதவில்லை.  அவற்றை வாய்மொழியாகவே பாடினர்.  அத்தகைய பாட்டுகள் ஏராளமிருந்தன. வேதவியாசன் உருக்கு வேதமென்ற பெயரில் இவற்றைத் தொகுத்தபோது  அத்தொகுப்பில் அகப்பட்டவை போக மற்றவை அழிந்துபோயின.  இவை எத்துணை இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.  இவற்றை மீட்க எவ்வழியும் இல்லை.

திருவள்ளுவர் திருக்குறள் இயற்றிய காலத்தின் பின்னரே உருக்குவேதம் தொகுக்கப்பட்டது. பாடல்கள் தோன்றி வழங்கிவந்த காலம் வேறு; அவை தொகுக்கப்பட்ட காலம் வேறு. 

இதற்குச் சான்று.  திருவள்ளுவமாலை 23வது பாடலில் வேதத்தைச் செய்யாமொழி என்று வெள்ளிவீதியார் என்ற புலவர் குறிப்பிடுவது ஒன்றாகும்.  செய்யா என்பதற்கு தொகுப்பாகக் கோவை செய்யாத என்று பொருள். மனிதன் செய்யாத அல்லது கடவுள் செய்த என்று பொருள்கூறுவோருமுண்டு.  பின்னர் அவை கோவை செய்யப்பட்டன. இக்காலத்துக்கு முன்னும் சமஸ்கிருதம் என்ற சொல்லால் குறிக்கப்பெறும் மொழி இருந்தது ஆனால் எழுத்தில் இல்லை.

இதனால் பாணினியின் இலக்கணமும் வாய்மொழியாகவே இலங்கிற்று.

குறுந்தொகையிலும் எழுதாக் கிளவி எனற தொடர் உள்ளது.  இப்பாடல்கள் (குறுந்தொகை )  எழுந்தபோதும் அது  (சங்கதம் )  எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது.

திருவள்ளுவமாலையில் இன்னொரு பாடலும் இதையே தெரிவிக்கிறது:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்தேட்டின் புறத்தெழுதார் --- ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்  வின்று
(தி-மாலை, . 15)

மந்திரங்களுக்கு பலுக்குமுறை முன்மையானதாகும்.  
 பிழைபடப் பலுக்குதலால் மந்திரம் பலனின்றி முடியும்.  
 ஆதாலால் எழுத்தில் எழுதி அவற்றைக் 
கெடுக்கலாகாது என்பதே எழுதிவைக்காமைக்குக் 
காரணம்.  ஆனால் பல மறக்கப்பட்டு 
மீட்சியின்றி மறைந்தபின் இக்கொள்கையை
 மாற்றிக்கொண்டு எழுத்துக்களால் எழுதிவைத்தனர்.


  



: