சனி, 10 பிப்ரவரி, 2018

அநாதி



அநாதி என்று எழுதப்படும் சொல் இன்று இங்கு சிந்திக்கப்படும் சொல்லாகிறது.

இதை முன்  அ+ நாதி பிரித்தனர்.

வெளியாரிடம் சென்று யான் இன்ன குடியைச் சேர்ந்தவள் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்குமானால்,  அவள் நாதி உள்ளவள். 

நா > நாதி.  இங்கு நா :  நாக்கு;   தி ~ விகுதி.

தான் யார் என்று சொல்லும் அறிகுறிகளும் அடையாளங்களும் ஆகிய தற்குறிப்பு நாவினாலே சொல்லப்படுவதாதலின்,  நா என்ற நாக்குக் குறிக்கும் சொல்லே இதற்குப் பயன்பட்டது.

மிகப்பழங்காலத்தில் எழுத்துக்களும் தாளும் இல்லை.  கணினியும் இல்லை. ஒரு மனிதனின் தன் அடையாளத்தைத் திறமாக முன்வைக்கும் அட்டைகளை இப்போதுபோல் யாரும் வெளியிட்டதுமில்லை.  தன்னை அறியாதவரிடத்து  முன்நிற்குங்கால் நாவே துணைக்கருவி.   அதனாலேதான் ஒருவனின் அடையாளம் திகையும். திகையும் என்றால் கேட்போன் தீர்மானிப்பான் என்பது.  அவனை அறிந்தோரிடத்து அவன் உறையும் காலை அவனது அடையாளம் ஒரு பிறச்சினை (பிரச்சினை)  ஆகமாட்டாது.
 
நாவால் திகைக்கப்படுவது "நாதி" என்`கையில் தி ஒரு விகுதி எனினும் அமையும்.

இது நாவால் போற்றப்படுவோன்  நாதன் ஆனதுபோல.  நா : நாவின்;  து : உடைய; அன்:  அவன்.  போற்றப்படும் என்பதை விரித்துக்கொள்க.  நாவினதானவன் எனினும் அமையும். ஈண்டும் எழுத்தால் போற்றப்படுவது பின்நிகழ்வாகும். இறைப்பெயர்கள் பல்வேறு காரணங்களால் அமைந்துள்ளன; அவற்றுள் அவன் நாவிலிருப்பவன், நாவினாலுரைபெறுவோன் என்ற கருத்து  இரண்டு மொன்றாம்.

நாதன்:  மேலும் அறிய:  http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html

அல் என்பது அ~ என்று கடைக்குறையும்.  குறைந்து அன்மை உணர்த்தும்.

அ+நாதி = அநாதி.  ( நாதி அற்றவன் ).

இறைனுக்கு யாருமில்லை;  தாயுமில்லை; தந்தையுமில்லை.  அவன் ஒற்றையன்.ஆகையால் அநாதி.

தத்துவ நோக்கில் இறைவனுக்குத் திணையுமில்லை. (யாம் இங்கு இலக்கண விதியைக் குறிப்பிடவில்லை.)  ஆதலின் நா+து+அன் என்பதில் திணைமயக்கம் உள்ளதெனினும் அஃது ஒரு பொருட்டாகாது என அறிக. அது நா+த் + உ + அன் எனக்கொண்டு,   த்: இடைநிலை; உ: சாரியை; அன் - விகுதி ஆண்பால் எனினும் ஆகும்.  எப்படி விளக்கினும் நாதன் என்பது நாவின் அடிப்படையில் எழுந்த சொல்லே ஆகும்.  து என நிறுத்துவது திணைமயக்கம் எனினும் பெரிய பழுதொன்றுமில்லை.  உ என்று விளக்கி முன்னிருப்பது என்று கூறக்கூடும். அங்கனம் திணைமயக்கம் தீரும். இவை விளக்கவேற்றுமையன்றி வேறில்லை.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்.



இந்த இரண்டு குடும்பங்களும் எத்துணை அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்; இதுபோலவே உலக மிருந்தால் எங்கும் சமாதானமே நிலவும் என்று பேசிக்கொள்வதைச் செவிமடுத்திருப்பீர்கள்.

இந்தப் பேச்சில் வந்த அன்னியோன்னியத்தை அலசி ஆராய்வோம்.
இது:

அன்ன இய ஒன்னியம்!

அன்ன =  அவ்வளவு.

இய =  வாத்தியத்தின்

ஒன்னியம் =   ஒற்றுமை.

ஒன்று  என்ற சொல் ஒன்+து =  ஒன்று.  ஒன் என்பதே அடிச்சொல். து என்பது அஃறிணை விகுதி.  அஃறிணை அல்லாத இடங்களிலும் வேறு சில பிற்காலச் சொற்களிலும் வரும்.   இகரச் சுட்டு ஏறி இது என்றும் அகரச் சுட்டு ஏறி அது என்பதிலும் வரும்.   எடுத்துக்காட்டுகள்:  பருத்தல் : பரியது:  பரு+ அது + அம் = பருவதம்; மலை;  கண்> கணி > கணித்தல் :  கணி+ இது + அம் = கணிதம்.  ஓர் இகரம் வீழ்ந்தது.   கணிதம் என்று சொல்வதே நாவுக்கு நல்லது. கணியிதம் என்று சொல்வது ஒருவகையில் முட்டாள்தனம். என்ன “ணியி”  “ இயி””  .  இலக்கணம் தெரியாவிட்டாலும் புத்தியாவது இருக்கவேண்டாமா?

துணியில் கூடுதலாகத் தொங்கும் கீற்றுக்களை தையற்காரன் வெட்டி வீசிவிட்டுத்தானே இரவிக்கை  தைக்கிறான்?  சொல்லும் அது போலவே!

ஒன் என்பதே அடி;  ஒன்+ இயம் =  ஒன்னியம்.  ஒன்: ஒன்றாகிய; இ = இந்த; அம் : தன்மை காட்டும் விகுதி.  பொருள்: ஒற்றுமை.  ஒன்+து (ஓன்று ) என்பது ஒற்றுமை. ஒன்னு என்பதும் அதே.  ஒண்ணு என்பதும் அதே. திரிபுகள் பல. இத்தனை திரிபுகளுக்கும் இடம் ஏற்பட்டுத்தான் தமிழ் பல மொழிகளாய்ப் பிரிந்து வழங்குகிறது.   ஒன் என்ற அடிச்சொல்லை வெள்ளைக்காரனும் மேற்கொண்டது  நமது வளத்துக்கு ஒரு சான்று. 

ஒற்றுமை என்றால் இயம்போல ஒன்றாக இயங்குவதே ஒற்றுமை. வெவ்வேறு வாத்தியக் கருவிகள் இயங்கினாலும் என்ன இனிமை. என்ன ஆன்ந்தமாக இருக்கிறது. இசைக்கலையே  இனிதாகும். எல்லாம் குழைந்து செவிக்குள் வருவதுபோல.  கவலையை மறக்க இசையில் மூழ்கவேண்டுமென்பதை இயம் என்பது நமக்குக் கற்பிக்கிறது.

அன்ன இய ஒன்னியமாகவே இருப்போம். அன்ன இய என்பவற்றை இயைக்க அன்னிய என்று புணர்ந்தது.  இது  அந்நிய ( அயல் ) என்பதினும் வேறானது.
இதில் ஓர் அகரம்  குறுக்கப்பட்டது .   அன்+(ன் அ ) + இய  = அன்+ன் இய = அன்னிய.    0ன்+இ = 0னி.

அன்னிய ஒன்னியம் >  அன்னியொன்னியம் > அன்னியோன்னியம். இதில் ஒகரம் ஓகாரமாக நீண்டது.   மருவி அமைந்த சொல்.

இனிமேல் போவியோ அடி ?   போவியோடி?  இதெல்லாம் பேச்சு வழக்கைப் பின்பற்றி அமைந்த திரிபுகள்.  போவாயோ> போவியோ? இகரத்தை அடுத்து 
ஓகாரம் வருவதும் ஓர் இனிமைதான்.

வியோ!   னியோ!  யாராவது கத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பெடுத்துக்கொள்க.   கைப்பேசியைக்கொண்டு பதிவுசெய்க.

அன்ன இய ஒன்னியமாக இருங்கள். இசைபோலும் இயைக.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

அம்பு ஆரம்பம்: தொல்பழந்தமிழ்



ஆரம்பம் என்ற சொல்லுக்குத் தொடக்கம் என்பதே வழக்கில் நாமறியும் பொருளாகும்.

ஆனால் இதன் சொல் புனைவின்போது பயன்படுத்திய அடிச்சொற்கள் எத்தகு பொருளன என்பதை ஈண்டு அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்பது பல்பொருளொரு சொல். அதன் பொருள்தோற்றங்களில் பொருந்துதல் என்பதும் ஒன்றாகும்.   இந்த “ஆர்” என்னும் சொல்லே "ஆரம்ப"த்தின் முன்னிலை அடியாய் உள்ளது.

இதற்கடுத்தது அம்பம் என்பது.

அம்பம் என்பதில் சொல்லிறுதியில் இருப்பது அம் என்னும் விகுதி. ஆகவே அதைப் பிரித்து எடுத்துவிடும்போது,  எஞ்சி நிற்பது:  அம்பு என்பதாகும்.

அம்பு என்ற சொல் ஒரு சுட்டடிச் சொல்.  அ என்ற சேய்மைச் சுட்டும்  பு என்ற விகுதியும் இதில் உள்ளது.

அந்தக் காலங்களில்,  -  இப்போதும் ,  எய்யப்படும் கூர்மையான கோல்,  இங்கிருந்து அங்கு செல்கிறது.    இப்படி அங்கு போய்க் குத்துவதால் அது “  அம்பு “  ஆயிற்று.” இது அம்பினை எய்தவனின் கோணத்திலிருந்து உண்டாகிய சொல்.  மேலும்  அங்கு போகும்படி விடுக்கப்படுவது என்பதே அதன் அடிப்படைக் கருத்து.   அ + பு = அம்பு ஆயிற்று.   

அ+பு = அப்பு என்றொரு சொல்லும் உள்ளது.  அது வினையாகப் பயன்படுகிறது.  அப்புதல் என்பது அந்த வினைச்சொல்.  அதே துண்டுகளைக் கொண்டு புனையப்பட்ட இந்த அம்புச் சொல்,  பகர ஒற்று புகுத்தப்படாமல் மகர ஒற்றுடன் விளங்குவதாகிறது. ஆகவே அது அம்பு என்றாகி, அப்புவிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது.  இது புணர்ச்சியில் மெலித்தல் விகாரம் எனப்படும்.

முழுச்சொற் புணர்ச்சிகளிலிருந்து சற்று வேறுபட்டவை சொல்லமைப்பில் 
வரும் புணர்ச்சி. இதையாம் விளக்கியிருக்கிறோம்.  முன் இடுகைகள் காண்க.

இது செ+ பு =  செம்பு, என்பது போல.  இரு+பு = இரும்பு எனினுமாம். இரும்பு என்பதில் பொன் என்னும் சொல் குறுகிப் பு என்று விகுதியாய் நின்றது.

இங்கிருந்து ஏவப்படும் அம்பு அங்குச் சென்று பொருந்துவதே எதிரியைத் தண்டிப்பதன் தொடக்கம் ஆகும். விளக்கத்தின்பொருட்டு இங்கு அம்பு என்ற போர்க்கருவி குறிக்கப்பெறுகிறது.  ஆனால் சொல்லமைப்பில் அங்கு போவது எதுவும் அ+ பு என, அங்குப் பொருந்துவதே. அம்பு என்பது காரண இடுகுறிச் சொல்.

இதில் இங்கிருந்து அங்குச் செல்வது என்பது சொல்லாக்கச் சிந்தனையாய் இருக்க, அது அம்பு என்னும் போர்க்கருவிக்குப் பெயராய் இடப்பட்டுள்ள படியால் தன் பொதுப்பொருளை இழந்து காரண இடுகுறி ஆகிவிட்டாலும், ஆரம்பம் என்னும் சொல்லில் அம்பு என்பதை அடிப்படை அமைப்புப் பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்; அல்லது காரண இடுகுறியாகிய அம்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  ஏவப்படும் அம்பாக மேற்கொள்ளின், புரிந்துகொள்ள எளிதாக்க்கூடும். அப்படிக்கொள்ளாமல் அதைச் சுட்டடியாகக் கொள்வது சொல்லியல் அறிஞனின் திறம் காட்டும்.

இனி, ஆர்+ அம்பு+ அம் அல்லது ஆர்+ அ + பு+ அம் என்பது,  இங்கிருந்து அங்குப் பொருந்துதல் என்று பொருள்பட்டு,   “தொடக்கம்” என்பது அதன் வழக்குப் பொருளாகிறது.  ஆக அது வினைப்பெயர் அதாவது தொழிற்பெயர் ஆகும்.

இதை அம்பு என்ற ஏவுபொருளின் அடிப்படையில் உணர்வது எளிது.  அம்பு இங்கிருந்து புறப்பட்டுவிட்டால் போர் தொடங்கிற்று; அது தொடக்கம்  என்று பொருளாகிவிடுகிறது.

தமிழ் மொழியும் சீனமொழிபோல் ஓரசைச் சொற்களில் தொடங்கிப் படிப்படியாக சொற்கள் அமைந்த வரலாற்றையே காட்டவல்லது ஆகும்.  அம்பு என்ற கருவியும்  அ -   போ  :  அங்கு போவது, அ -    பு  அங்கு புகுவது,    -  பு:   அங்கு புறப்படுவது  என்ற ஒன்றுடன் இணைந்து  இறுதியில் புணர்ச்சியில் மகர ஒற்றைப் பெற்று,  இன்று அம்பு என்றே ஒரு சொல்லாய் நிற்கிறது.  அதாவது ஓரசைச் சொற்கள் இணைந்து கூடிப்  புணர்சொல்லாய் மாறி  நம்மை வந்தடைகிறது. இது தமிழ்மொழியின் தொல்பழங்காலத் தோற்றத்தை எமக்கு விளக்குகிறது. உங்களுக்கும் விளங்கிவிட்டிருக்கும் என்பது எம் துணிபு ஆகும்.   

எழுத்துக்கள் தவறுதலாகப் புள்ளி பெறுதல்
மேலேற்றியபின் உண்டான கோளாறு ஆகும்.

பிழைத்திருத்தம் பின்.

கூடுதல்  மெய்யெழ்ய்த்துப்புள்ளிகளைத் திருத்தியுள்ளோம்.
அவை மீண்டும் தோன்றக் கூடும். கவனம். நன்றி.  05012121.