வியாழன், 1 பிப்ரவரி, 2018

அகத்து இருந்தவர் அகத்தியர்,



இன்று அகத்திய முனி பற்றித் தெரிந்துகொள்வோம்.

அகத்தியர் பற்றி இங்கு முன்பும் எழுதப்பட்டுள்ளது, அவற்றையும் சேர்த்துப் படித்துச்  சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

அகத்தியர் வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்பது கதை. எல்லாக் கதைகளையும்போல இந்தக் கதைக்கும் வரலாற்றுப் படியிலமைந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.  வெளியிலிருந்து வந்துமிருக்கலாம். வெளியிலிருந்து யாரும் வந்து தங்குவது இயற்கைக்கு மாறானதன்று.  விவேகான்ந்தர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தாலும் இங்குத் தங்கவில்லை.

ஆனால் யாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதென்னவெனில்,  அகத்தியர் என்பது உள்நாட்டினர் என்று பொருள்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. அகம் என்றால் உள் என்று பொருள். வேறு பொருளும் உள்ளதென்றாலும் இதற்கு வெளி என்ற பொருளில்லை.  ஆகவே அவர் உள் நாட்டினர் என்பதைச் சொல்லின் பொருள் நமக்குத் தெரிவிக்கிறது.

அவர் எந்த ஊரினர், தாய்தகப்பன் யார் என்று பிற்காலத்தில் அறியாத நிலையில் அவர் வெளிநாட்டினர் என்று சிலர் கருதி, அதையே ஒரு கதையாக்கியிருக்கலாம். ஆனால் இக்கதை அகத்தியர் என்ற சொற்பொருளுக்கு மாறானதென்பதைத் தமிழறிஞர்கள் சிந்தித்துக் கூறவில்லை என்று சொல்லலாம்.

அகத்து இருந்து  (தமிழகத்திலே இருந்து) ஆசிரியராய் விளங்கியவரே அகத்தியர் எனலாம்.

வெளியிலிருந்து வந்தவராயின் எந்த மொழி பேசினார், எந்த மொழிக்கு உரியவர் என்பதற்கான கதைகூட இல்லை.

கடல்குடித்த:   குடித்த என்ற எச்சவினை  நீர்ப்பொருளைக் குடித்த என்று பொருள்தரலாம். எனினும்,  குடி+து+ அ =  குடித்த  என்பது குடியை உடைய என்றும் பொருள்தரும்.  அவர்தம் வீடு அல்லது அவரைச் சேர்ந்த குடிகள் கடற்பக்கமாக இருந்தனர் என்று பொருள்தர வல்லது இதுவாகும்.

இவர் மாணாக்கர் தொல்காப்பியர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுவும் பழங்க்தைகளிலிருந்து வருவதே.

ஆரியர் வந்தது உண்மையா?

கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது தமிழ்ப் பழமொழிகளிலொன்று.

கண்டது என்பதற்கு இருபொருள்:

1.  அறிஞர் ஆராய்ந்து உண்மையென்று கண்டதை;

அல்லது:

2.  கண்ணிற்கண்டதை.  (எதையும் என்று பொருள்).

அதாவது : மனிதன் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அரிது.

ஆனால் நூறு வருமுன்னே நோய்கள் பல வருவதற்குக் காத்துக்கொண்டுள்ளன.

அதனால் கற்பதைத் தெரிவுசெய்து கற்றுப் பயனடைய வேண்டுமென்று நாலடியார் என்னும் நூல் கூறுகிறது.

இதையும் படித்து மகிழுங்கள்:


http://anadimishra2.blogspot.sg/2016/02/change-history-books-aryan-theory-fake.html

இது ஆரியர் வருகை பொய்க்கதை என்`கிறது. 

புதன், 31 ஜனவரி, 2018

விளங்காதவனுக்கு எப்படி விளங்கவைப்பது



விளங்காதவன் யார்?

ஒவ்வொரு மனிதனும் தான் எல்லாவற்றையும் அறிந்துவிட்ட்தாகவே நினைத்துக்கொண்டு செயல்பாடுகளில் இறங்கிவிடுகிறான், இத்தகையோரை மேய்ப்பதென்பது ஒரு பெரிய கலை, இதற்காக இப்போது பெரிய கல்விச்சாலைகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் போன்றவற்றில் இவற்றை முழுமையாக்ச் சொல்லிக்கொடுக்க முடியாது.  வேலையில் ஈடுபட்டிருப்போருக்கு  அவ்வப்போது கொஞ்சம்  கால இடைவெளி விட்டு இக்கலைகளில் தேவையானவற்றைக் கற்பிப்பதே நல்ல விளைவுகளை ஏற்படுத்தித் தருமென்பதை இப்போது பல நிறுவன்ங்களில் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பத்து எழுத்தாளர்களுக்கு மேல் வேலைபார்த்துவந்தனர். இவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்  என்றாலும் அரசில் பணியாற்றும் மந்திரிகளைச் சாடியே எழுதிவந்தனர். இவர்கள் எழுதுவது மக்கள் வாசிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அடிக்கடி வழக்கறிஞர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபடி இருந்தன. இரண்டு மூன்று வழக்குகளும் தொடங்கப்பட்டு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்தன.

கூட்டத்தில் தீர்வு:

தலைமை ஆசிரியராய் இருந்தவர் ஒரு கூட்டத்தைக் கூட்டி வழக்குகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டினார்.  எழுத்தாளர்களோ தாங்கள் எழுதும் முறைகளை மாற்றிக்கொள்ள முடியாது என்றனர். காரணம் என்னவென்றால் நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாம் சட்டப்படி எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.  இதை விட்டுக்கொடுக்க முடியாது. அப்படித்தான் எழுதுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது பெரிய தலைவலிதான். --- இந்த சுதந்திரங்களையெல்லாம் தலைமை அதிகாரிதான் தடுக்கிறார் என்ற இரீதியில் வாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சரிசரி.   நீங்கள் எல்லாம் இட்டப்படியே சட்டப்படியே எழுதுங்கள். நீங்கள் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்து நட்ட ஈடு கட்டும்படியாகத் தீர்ப்பு வந்துவிட்ட வழக்குகளில் ஆகும் எல்லாச் செலவுகளையும் எழுதுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நமது குழும்பு ஏற்றுக்கொள்ள முடியாது.  அதுமட்டுமின்றி குழும்புக்கு ஏற்படும் எல்லாச் செலவுகளையும் நீங்களே சரிப்படுத்திவிடுங்கள். நான் உங்களைக் கட்டுப்படுத்தவில்லை  என்று தலைமை அதிகாரி சொன்னார்.

தலைமை தேவை

நட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர் எழுத்தாளர்கள்.
அப்படியானால் நான் சொல்கிறபடி எழுதுங்கள். வழக்குகள் வராதபடி பார்த்து எழுதுங்கள். எனது மேற்பார்வை இல்லாமல் எழுதுவதை அனுமதிக்க முடியாது என்று தலைமை அதிகாரி சொல்லவே,  வேறுவழியின்றி எழுத்தாளர்கள் ஒப்புக்கொண்டு இப்போது எல்லாம் நன்றாக நடைபெற்று வருவதாகத் தகவல்.
ஆகவே ஒவ்வொரு நிறுவனத்திலும் தலைமை தேவையானதாகிறது.

இந்தக் கட்டுரையில் வரும் சொற்களைப் பின்னர்
அலசி ஆராய்வோம்.