திங்கள், 29 ஜனவரி, 2018

ஆண்டாள் அருங்கவிதை


நாச்சியார் திருமொழியில் உள்ள ஓர் அழகிய பாடலைப் பாடி மகிழ்வோம்.  பாடற் பொருள் உணர்வோம்.

பாடல்:
 
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வரக் கூவாய். (2)



---பாடல் 545 நாச்சியார் திருமொழி.  

ஆழ்ந்த பொருளுடையது இப்பாடல்.
வருமாறு:

"மன்னு  பெரும்புகழ் மாதவன் -   நிலைபெற்ற விரிந்த புகழையுடைய கண்ணன்;
மாமணி வண்ணன் -  பெரியோன்  நீலவண்ணன்;
மணி முடி மைந்தன் -   மணிமுடி தரித்த (என்) இளவரசன்;
தன்னை உகந்தது காரணமாக  -   அவனை விரும்பியது காரணமாக;
என் சங்கு இழக்கும் வழக்குண்டே;-  யான் என் கிடைத்தற்குரியவற்றை   விட்டு விலக  ( துறக்க )   வேண்டும் என்னும் வாதம்  உள்ளபடியால்;
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே - புன்னை மரத்தில் வளரும் குருக்கத்திக் கொடியின்(  மஞ்சள் ) பூக்கள் மலர்ந்த  பொந்தில் குடியிருக்கும் குயிலே;



பன்னி யெப் போது மிருந்து விரைந்தென் பவளவாயன் வரக் கூவாய்-  பலமுறையும் எப்போதும்  மிழற்றிக்கொண்டிருக்கிறாய் ;  என் கண்ணன் உடனே வரும்படியாகக் கூவுவாய்.

"சங்கு என்னும் மேலோட்டினுள் பொருந்தி இருக்கும் உயிரி  (பிராணி ), அவ்வோட்டினால் பாதுகாப்பாக வாழ்கிறது.  உள்ளே இருந்துகொண்டே வேண்டியன அதற்குக் கிடைத்து உயிர் வாழ்கிறது.  யானோ கோவிந்தன்மேல் கொண்ட ஆசையினால் இப்போது  எனது பாதுகாப்பினை  இழக்க நேரிடும் என்ற வாதமும் எதிர்வாதமும் ("வழக்கு")  நடைபெறுகிறது.  புன்னை மரத்தில் வளரும் குருக்கத்தியோ பாதுகாப்பாக மரத்தைச் சுற்றி ஏறிப் படர்ந்து     நிற்கிறது. மஞ்சள்  (காவி)  மலர்களைக் காட்டுகிறது.   கிளியே நீ  உன் புன்னைப் பொந்தில் இருந்துகொண்டு பாதுகாப்பான சூழலில் பலமுறை எப்போதும் கூவிக்கொண்டிருக்கிறாய்.  இத்தகைய பாதுகாப்பு எனக்கும் தேவை ஆயிற்றே. நீ இப்போது நான் காதலிக்கும் மன்னனை இங்கு உடனே வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

"அவன்  சங்கு அவனிடத்து இருக்கிறது; அதை நான் விரும்பினேன்.  அதனால் என் சங்கை (கூட்டை அல்லது வீட்டை ) நான் இழக்கும் நிலையில் உள்ளேன்.  அக் கோவிந்தனை அழை .

நீ கூவினால் போதுமே!    அவன் வந்துவிடுவான். ( அதாவது தூது செல்ல வேண்டியதில்லை ) என்றபடி.

அவனே புன்னை மரம்;  நானோ அம்மரத்தைச் சுற்றி நிற்கத் துடிக்கும் எளிய கொடிதான்.  "

மஞ்சள் மலர்    நாச்சியார்  யாவும் துறந்து நிற்பதைக் காட்டுகிறது.  அம்மையார்  ஒரு  காவி மலர்க்கொடி. கல்வி கேள்வியிலும் அப்படி

ஆண்டாள் பெருங்கவிஞை என்பதற்கு இப்பாடலொன்றே போதுமே.

ஆண்டாளின் பாடல்கள் சங்கப் புலவர்தம் பாடல்கள் போலவே உள்ளன, (இது விருத்தப்பா என்பது தவிர )

வழக்கு உண்டே என்று மட்டும் நம் இறைப்பாவலர் தெரிவிக்கிறார்.  குடும்பத்திலும் உறவினருள்ளும் எல்லோரும் இத்துணை மும்முரமான இறைப்பற்றை ஏற்றுக்கொள்வது உலகியலில் காணற்கரியது.  ஆடவன் அண்டுவதை ஏற்றுக்கொள்ளாத பெண்  ஆண்டாள். இந்த உயர்நிலை காமுகராலும் உலகியலில் அமிழ்ந்துகிடப்போராலும் உணரமுடியாதது ஆகும்.

பட்டினத்தார் வரலாற்றில் அவர் துறவை ஏற்றுக்கொள்ளாத உறவினர் பல தொல்லைகளை விளைவித்ததையும் அவர் பின்னர் : " தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும் "  என்று சபிக்க வீடு பற்றி எரிந்ததையும் அறிக. 

மெய்ப்பு: 07102023 2233

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மறக்கவொண்ணா வேய்வு.


 வேய்வு.

கூரையை வேய்தல் போல் வேய்வது வேய்வு. ஆனால்
மிக்க எளிதாய் அமைந்த வேய் > வேய்வு என்ற சொல் இப்போது நம்மிடை வழங்கவில்லை.

அதற்குப் பதிலாக அதிலிருந்து திரிந்த வேவு என்ற சொல் இருக்கிறது. பண்டை நாட்களில் எங்கு என்ன நடக்கிறதென்று கண்காணித்தவர்கள் தம்  மேல்அடையாளத்தை மறைக்கும் தலையுறை, சால்வை, மேல்துணி,  பரவாடை (பாவாடை) முதலியவற்றைக் கட்டிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து மிகுந்தன கண்டறிந்தனர்!!

வேவுபார்த்தல்

அதாவது யாம் சொல்லவருவது:  அவர்கள் வேய்ந்துகொண்டு வேய்வு> வேவு பார்த்தனர்.  நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்   யகர ஒற்றுக்கள் மறையுமென்பதைப் பன்முறை பழ இடுகைகளை நோக்கின்  கூறியுள்ளேமென்பதை ஈண்டும் மீண்டும்  உள்ளவும் சொல்லவும் கடன்பட்டுள்ளேம். நீங்கள் தமிழைச் சுவைத்துப் படிக்கவேண்டுமென்பதே எம் நோக்கமாகும். நம்பாமல் வேறு எதிர்வாதங்களை வைத்தாலும் அப்படியும் தமிழைக் கற்றே அவற்றை முன் வைக்கமுடியுமாதலின்  அவ்வழியிலும் பண்டிதன்மை பெற்றுவிடுவீர். வாழ்க.

ஒற்றுக் கெடுதல்:  ( ஒற்று - மெய்யெழுத்து ).   ய்.

வேய்வு > வேவு.
வாய் > வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார்!!
தாய் > தாய்தி > தாதி.
பொய்ம்மெய் > பொம்மை
நெய்த்தோலி > நெத்திலி

பதிலெழுத்துத் தோன்றுதல்:

வாய்மை> வாய்த்துவம் > வாஸ்தவம்   - யகரம் தொலைந்து ஸகரம் நுழைந்தது.

உயிர்மெய்: யகர சகரத் திரிபு:

இதிகாயது > இதிகாயம் > இதிகாசம் (ய -  ச).    ( இது + இங்கு+ ஆயது = இது+ இகு+ ஆய(ம்) >  இதிகாசம்.  இங்கு = இகு : இடைக்குறை).

ஆகாயம் > ஆகாசம்.  (ய-ச).     ஆ: ஆதல், வினைச்சொல்.  காய்: காய்தல், ஒளிவீசுதல்.

 மெய்யெழுத்துகள் விளைத்த கசப்பு:

புள்ளிவைத்த எழுத்துக்களால் ஓலைகள் கிழிய, புதிய ஓலைகள் ஏற்பாடு செய்யவேண்டியதானது. கல்லில் எழுதும்போதுகூட, சில்லுப் பெயர்ந்து போய்த் தொல்லை விளைந்தது.  ஒற்றுக்களைக் காப்பாற்ற எழுத்தாளர்கள் பட்ட கட்டுத்துயர் கொஞ்சமா நஞ்சமா?  எப்படித் தப்பிப் பிழைத்தோம். சீனாவில்போல தூரிகைகளால் எழுதின், வட்டெழுத்துக்களுக்குப் பதில் கீற்றெழுத்துக்களல்லவோ ஆட்சிசெய்திருக்கும்?

வேய்> வேய்+து+அம் = வேய்தம் > வேதம்.
(தமிழமைப்பு வேதமென்னும் சொல்)
வித் > வெத் > வேதா  (சங்கத அமைப்பு)!!

ஓரே ஒலியில் சொற்களை அமைத்தலும் இயலும்.

வேய் > வேய்ந்தன் > வேந்தன் (முடி வேய்ந்தவன்).

பெண்ணும் ஆடை அணிகளையெல்லாம் அணிந்து கொண்டு நின்றாள்.  வேய்ந்துகொண்டு நின்றாள்.

ஓர் ஆணிக்கு இரண்டு ஆணிகளைக் கூந்தலில் சொருகிக்கொண்டு நின்றாளோ?  இரு+ ஆணி = இராணி ஆகவில்லை. ஈராணியும் ஆகவில்லை.

வேய் > வேயி > வேசி  (ய- ச ) போலி)   ஆனாள்.

ஆதிப்பொருள் - நன்றாக உடுத்துக்கொண்டு அழகாக நின்றவள் என்பதுதான்.
நாற்றம் என்பது மணம் குறித்து இப்போது தீய நாற்றம் குறித்ததுபோல வேயி என்பது தன்னை விற்பவளைப்  பின்னர்க் குறித்தது.  பொருளிழிதல் இதுவாகும்.

இனிய அணிகளும் மினுக்கும் உடைகளும் அணிந்தவள் என்ற காட்சி மறைந்தது. 

பெண்ணுக்குக் குமுகம் அளித்த பரிசு இதுவோ?

பிழை பின் திருத்துவோம்.
பிழைகள் பற்றிய குறிப்பு : முன் இடுகை காண்க.

மேலும் வாசிக்க:

http://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_10.html 





ஆலோசனைச் சொல் ஆலமர அருமை

ஆலோசனை என்பது ஆய்வுசெய்து ஆனந்தமடையத் தக்க சொல்.

ஆல மரம் தமிழர் வாழ்வில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள மரமாகும்.  முழுமுதற் கடவுளான சிவபெருமானும்  ஆல் அமர் கடவுள் (ஆலமர் கடவுள்) என்று சிறப்பிக்கப்படுவோன் ஆவன்.  சிவ என்பது செம்மை குறிப்பது. செம்மை என்பது ஒரே பொழுதில் சிவப்பாகிய நிறத்தினையும் நேர்மையாகிய குணத்தினையும் குறிக்கவல்ல சொல்லாம் என்பது நீங்கள் அறிந்ததே ஆகும்.

பல பெருங்கோயில்களின் தொடக்கம் மர நிழலில் அமைந்தது என்பது வரலாறு கூறும். முருகப் பெருமான் கோயிலாகிய மலேசியாவின் மரத்தாண்டவர் ஆலயம் ஒரு மரத்தடியில் அருள்பாலித்த கடவுட்கு எழுந்த புண்ணியத் தலமாகும். இன்று அது பெருந்தலமாய்க் காட்சிதருதல் மகிழினிய நிகழ்வினதாகும். சென்று ஆங்கு வணங்கி யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  சிவம் வேறு முருகன் வேறு அல்லவென்பது அருணகிரியார் அருள்மொழியாகும்.

இத்தகு ஆலமரத்தடியில் அமர்ந்தே பண்டை மக்கள் சிந்தனைகளில் ஈடுபட்டனர்.  இந்தப் பண்டை நிகழ்வையே ஆலோசனை என்ற சொல் இன்றும் காட்டுகிறது.

ஆலடியில் ஓய்ந்து சிந்திக்க.  ஓய்தல் = சிந்தித்தல்.  ஆய்ந்து ஓய்ந்து சிந்தித்து என்ற தொடரையும் கருத்தில் கொள்க.

ஓய்தல் . வினைச்சொல்.
ஓய்+  அன் + ஐ =  ஓயனை.
ஓயனை > ஓசனை > யோசனை.

யகர => சகரத் திரிபு.  ஒ.நோ:  வாயில் -  வாசல்.  நேயம் > நேசம். தோயை > தோசை.  காய்> காய > காச நோய். (  உடல் காயும் நோய்).   வேய் > வேயி > வேசி.   எனப்பலப்பலவாம்.

காய (காய்தல்) எச்சவினை, உடல் காய்ச்சலையும் இளைத்தலையும் ஒருங்கு குறிக்கவல்ல குறியீடாகிறது என்பது காண்க. காய்ந்தது சுருங்கும்.

அகர வருக்கம் யகர வருக்கமாம்.  ஆனை = யானை.
ஆலமரத்தடியில் யோசனை நிகழ்த்துதலே ஆலோசனையாகும்.
ஆல் யோசனையே ஆலோசனை.  முன்மைச்சொல் ஓசனை. மரம்: ஆல்.

அறிந்து மகிழ்வீர்.

This document may have some unwanted autocorrect errors and dots self-generated after posting. This can only be corrected after a lapse of time after the activity becomes “spent”.  Regrets.