சனி, 30 டிசம்பர், 2017

சரக்கு என்பன உலர்ந்து கிட்டும் பொருள்கள்


இன்று சரக்கு என்ற சொல்லை ஆய்வுப்படுத்திப் பொருளறிவோம்.

இங்கு முதலாக வைத்துச் சிந்திக்கப்படுவது: சருகு என்ற சொல்:

சருகு என்பது காய்ந்த இலைகளைக் குறிக்கிறது.  இதில் கு என்பது சொல்லாக்க விகுதி.  அடிச்சொல்:   "சரு" என்பதே.

அகர - சகர வருக்கத் திரிபு

அகர வருக்கத்தில் உள்ளவை சகர வருக்கமாகத் திரியுமென்பதைப் பல இடுகைகளில் தெரிவித்திருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

எனவே சரு என்பதன் முன்வடிவம் அரு என்பது.

அருகல் (அருகு+ அல்)  என்பது: குறைதல்அணைதல், கிட்டுதல், சுருங்குதல் என்ற பொருள்களும் மற்றப் பொருள்களும் உடைத்தாம்.


நீர் குறைந்தாலே சுருங்குதல் உண்டாகும்.  காய்ந்த இலைகள் சுருங்கும்.  எனவே அருசரு > சருகு என்பது பொருந்துகிறது.

அரு: நீர் அருகுவதுமாம்.    அரு> சரு.  One of the meanings; this is then the point.

நீங்கள் நினைவிலிருத்த வேண்டியது:   அகர வருக்கமென்றால் அகரம் தொடங்கி ஒளகாரம் வரையுள்ள வருக்க எழுத்துக்களும் ஒலிகளும். வருக்கம் -  தொடர்வரு எழுத்து ஒலி ஆகியன.  சகர வருக்கமெனின் இங்கனமே கொள்க.
வரு > வரு+ கு+ அம் =  வருக்கம். தொடர்வருகைக்குரியது.

அரு > சரு > சருகு.
இங்கு  கு என்பது விகுதி.

சரக்கு

சரக்கு என்பது பெரும்பாலும் உலர்ந்த அல்லது காய்ந்த பொருட்கள்.
சரு >  சரு+ அ+ கு =  சரக்கு.
இதை வாக்கியமாக்கினால்,  காய்ந்து அங்கிருப்பது என்று வரும்.

அ =  அங்கு.
கு :  விகுதி.  சேர்விடம் குறிக்கும் சொல்லுமாகும்.

சரிதல் என்ற சரு என்பதனடி வினைச்சொல்லும் உதிர்தலையும் குறிக்கும்.  காய்ந்தது உதிருமாதலின், இது சரு என்ற அடியுடன் தொடர்பு உள்ள சொல்.  

சரு+இ = சரி > சரிதல்.  (வினையாக்கம்.)

ஓ.நோ: உது + இ = உதி + தல் = உதித்தல்.  
அது இது உது என்பவற்றுள் உது என்பது முன்னிருப்பது முன் தோன்றுவது எனக் காண்க.  

சரித்தல் என்பது வெட்டிவீழ்த்துதல் குறிக்கும்.  செடி கொடி மரங்கள்  வீழ்த்தியபின்  பெரும்பாலும் காய்ந்துவிடுதலால், இது முரண்படாச் சொல். மனிதத் தலையீட்டினாலன்றிக் கிடக்குமிடத்தில் காய்ந்துவிடுதலை அடையும்.

சருவுதல்:  சரிதலுமாகும்.

சரக்கு என்பது காய்ந்தபின் கிட்டுதலும் குறிக்கும். இதன் காரணம் சரிதல் என்ற தொடர்புடைய சொல், கிட்டுதல் என்ற பொருளுடையதாயுமுள்ளது.    

எனவே சரு என்பதனடிச் சொற்கள் யாவும் உலர்தல் தொடங்கி ஏனைப் பொருள்களால் ஒரு முரணற்ற தொடர்பினைக் காட்டுவன என்று உணர்க.  சருவுதல் என்ற சொல்லும் உள்ளது. சரிதல் கிட்டுதலென்பவையும் இதன் பொருளாம்.

ஆகவே அரு என்பது மூலமென்றும் சரு என்பது அடியென்றும் அறிந்து,  சரக்கு என்பதன் பொருளறிந்து இன்புறுக.

அரு, சரு என்பன உரிச்சொற்கள்.  பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் உரிமை பூண்டு வருவனவே உரிச்சொற்கள்.  அதாவது பெயரும் வினையும் தோன்றும் நிலைக்களனாகுபவை.
எடுத்துக்காட்டு:

பழ என்பதோர் உரிச்சொல்.
பழங்  கள் ( பழைய கள்)
பழ> பழு:  வினையாக்கம்  பழுத்தல்.  முன்னதான காய் பின்னர் தன்னிலை மாறுதல்.  கனியாகிறது.
பழ+ மை =  பழமை ( பழையதாகிவிட்ட தன்மை)  பெயராக்கம்.

பழ> பழி;  முன்னாளில் நடந்த கெடுதலைச் சொல்லி  பின்னாளில் மதிப்பைக் குறைத்துப்   பேசுதல்.  அடிப்படைக் கருத்து: பழமைச் செயல். கெடுதல் முன்னும் அதுபற்றிய தீமைப் பேச்சு பின்னும் வருவன.

சரக்கு என்பது இன்று விலைக்குரிய பொருளென்ற உலகவழக்கினால் ஏற்பட்ட பொதுப்பொருளைக் காட்டுகின்றது.  இது அதன் சொல்லமைப்புப் பொருளன்று.



(மறுபார்வை செய்யப்படும்.)


எழுதுகோல் தமிழ்ப் பெயர்கள்.

பேனா என்ற ஆங்கிலச் சொல்லே எழுத எண்ணும்
போதெல்லாம் எப்போதும் நம் தலைக்குள் தவழ்ந்து
உட்சென்றுவிடுகிறது.  அதை எழுதுகோல் என்று
நாம் சொல்வதும் எழுதுவதும் குறைவு.

எழுதுகோல் என்ற சொல்லைப் பார்க்குங்கால்
பேனாவுக்கு இன்னொரு சொல் தமிழில் கிடைக்கும்
என்று உங்களுக்குக் தோன்ற வில்லையல்லவா?

எழுதுகோலுக்குப் புதிய சொல் ஏதாவது
சொல்லலாம் என்று எண்ணுகிறீர்களா?  எழுத்தாணி
என்பது ஓலைச்சுவடிகளில் எழுதும் காலத்தில்
 பயன்பட்ட சொல்.

இறகி என்ற ஒரு சொல்லைத் தமிழாசிரியர்கள்
பயன்படுத்த முனைந்தனர்.  அப்போது  ஆங்கிலத்திற்கு
 நிகரான தமிழ்ச் சொற்களை முன்வைத்த சில
நல்லதமிழ் ஏடுகள் " இறகி"யைப் பரிந்துரை
செய்தபோதும் சில ஆர்வலர்களே அதனைப்
பயன்படுத்தி மகிழும் நற்பேறு பெற்றனர்.

இறகி என்பது  பேனா என்ற இலத்தீன்
மொழிச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பில்
இகரம் சேர்த்து அமைக்கப்பட்ட சொல்.
பென்னா என்ற கோழியிறகு  அல்லது அது
போல்வதோர் ஏனைப் பறவை இறகு.

தனித்தமிழாசிரியர் சிலரும் அதனைப்
புழங்கி மகிழ்ந்தனர். எழுதுகோல்கள் ஒருபுறம்
 கூரான எழுதுமுனை உடையவை.
இருபுறமும் எழுதுமுனைகளை உடைய
கோல்களும் வந்தன. அவை மிகுதியாகப்
பரவவில்லை.

மையை அடைத்துவைத்து எழுதும் மைந்நிலை
இறகிகளும் வந்தன.  பந்துமுனை
எழுதுகோல்களே இதுகாலை
மிகவும் பயன்படுபவை.

இப்போதெல்லாம் நான் எழுதுகோல்
 எடுத்துச் செல்வதில்லை. எதையும் குறித்துக்
கொள்ள  வேண்டுமென்றால் கைப்பேசியின்
உதவிகொண்டு அதை முடித்துக்கொள்வேன்.

எழுதுகோல்கள் முனை கூரானவை.
இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுத்
தமிழர்கள் "கூர்ச்சிகை" என்ற சொல்லை
எழுதுகோலுக்குப் பயன்படுத்தினர்.


இச்சொல்லின் சி என்பதும் கை என்பதும்
விகுதிகள். இது நல்ல தமிழானாலும், இந்த
நூற்றாண்டில் நாம் அதை முற்றிலும்
மறந்துவிட்டோமே.

ஆனால் இச்சொல் ஊசியையும் குறிக்கும்
என்பதும் இடம் நோக்கிப்
பொருளறிய வேண்டுமென்பதும்
நினைவில் வைக்கவேண்டும்.

என்றாலும் இந்த நூற்றாண்டில் ஊசிக்கு
நாம் கூர்ச்சிகை என்று சொல்வதில்லை
ஆகையால், அச்சமின்றி அதைப்
பயன்படுத்தலாம்.

பென்சிலுக்கு "  மைக்கோல் " என்பது
பொருத்தமான் பெயர்.

இறகியும் நன்று.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

பணம் பிடுங்கிய மஞ்சள்வேட்டிச் சாமியார்,



கிழவி  வனாவுக்கு சாமி கும்பிடவும் பூசைகள் செய்யவும் கொள்ளை ஆசை. ஒவ்வொரு பூசை நிகழ்ச்சியிலும் கடவுள் ஆங்கு வீற்றிருப்பதாகவே வனா நம்புவாள். யாரும் வீட்டில் பூசை செய்வதாகக் கூறி அழைத்தாலும் புடவை, வேட்டி. துண்டு சிங்கப்பூர் வெள்ளி ஐம்பது அல்லது நூறு மஞ்சள் குங்குமம் என்று அனைத்தும் வைத்து அந்த வீட்டு அம்மனுக்கோ மற்ற சாமிக்கோ சாத்துவாள்.  அதை சாமியின் முன்வைத்து அப்புறம் வீட்டுக்கார்ர்கள் எடுத்துக்கொள்வார்கள்..

சிங்குச்சாமி வீட்டில் நடந்த அம்மன் பூசைக்கும் வனா அதே மாதிரி செலுத்தினாள். சிங்குச்சாமிக்குப் பெரிய மகிழ்ச்சியாகப் போய்விட்டது. இது நல்ல பசையுள்ள கிழவி என்று வனாவைப் பின் தொடர்ந்தார்.

ஓரிரண்டு மாதங்களிலேயே சிங்கு இன்னொரு பூசை வைத்தார்.  அன்று வனாவை அழைத்திருந்தார். ஆனால் வனா போகவில்லை.  வேறு ஓர் அழைப்புக்குப் போய்விட்டாள். அன்று ஆக்கி வைத்ததெல்லாம் ஒரு வகையில் வீணாகிவிட்ட்தென்ற கவலை சிங்குச்சாமிக்கு.  போனமுறை போல காசும் காஞ்சிப் பட்டும் யாரும் கொடுக்கவில்லை.  வந்தவர்கள் பிரசாதம் (படையல்) சாப்பிட்டுவிட்டு கைவீசிக்கொண்டு போய்விட்டனர். ஒரு நூறாவது கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. பத்துக்காசு இருபதுகாசு தட்டில் வந்து என்ன பயன்?

இந்த நிலையில் இன்னொரு வீட்டில் ஒரு பூசை நடந்தது. அதற்கு வனாவை அழைத்திருந்தார்கள். வனா அங்கு போய் எப்போதும்போல் சாமிக்குக் கொடை அளித்தாள். பூசை முடிந்தது வாடகைக் வண்டிக்குக் காத்திருந்தபோது சிங்குச்சாமியும் அங்கு வந்து, நானும் வருகிறேன் என்று வந்த வண்டியில் ஏறிக்கொண்டார்.

வண்டி முதலில் வனாவின் வீட்டுக்குப் போயிற்று. வனா இறங்கிக்கொண்டு பயணத்துக்குக் காசு செலுத்த எண்ணி, சிங்குச்சாமியிடம் ஐம்பது வெள்ளியை நீட்டினாள்.  அந்தப் பயணத்துக்கு 15 வெள்ளிதான் வாடகை, அதுவும் சிங்குச்சாமி வீடு போகும்வரை அவ்வளவுதான் வரும்.  மீதம் 35 வெள்ளியை எதிரிபார்த்து வனா வண்டிக்கு வெளியில் இறங்கி நின்றாள். சிங்குச்சாமி (பைபை  என்று ) கையசைத்துவிட்டு, வாடகைவண்டியைத் தம் வீட்டுக்கு ஓட்டும்படி ஓட்டுநரிடம்  ஏவினார்.  வண்டியை ஓட்டிய சீனரும் அப்படியே ஓட்டிச் சென்றுவிட்டார்.

நான் கூப்பிட்ட பூசைக்கு வராமல் ஏமாற்றினாய் அல்லவா?  உனக்கு ஆப்பு என்ற படி சிரித்துக்கொண்டே  வீடுபோய்ச் சேர்ந்தார்.

எழுபது தாண்டிய கிழவி வனா பிள்ளைகளை வற்புறுத்திக் குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து, பணம் அவர்களிடமிருந்து பெற்று ,  இத்தகைய பூசைகளிலெல்லாம் கலந்துகொள்பவள். அவளுக்கு வேண்டிய பணம் எல்லாம் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பெற்றுக்கொள்பவை. ஒவ்வொரு பூசைக்கும் இவள் செலவு மட்டும் 200 வெள்ளிக்குமேல் போகும். கொடைவள்ளல் போல் வாரி வழங்குவாள். என்றாலும் சிங்குச்சாமி இப்படி நடந்துகொண்டது, இவன் காசுபிடுங்கி என்பதை அவளுக்கு நன்`கு அறிவுறுத்தியது.    

இன்னொரு சாமிக்குக் கைப்பேசியில் அழைத்து விவரத்தைத் தெரிவித்து  இப்படிச் சிங்குச்சாமி செய்துவிட்டான் என்றாள்.  அந்தச் சாமி,  நான் அவனைக் கேட்கிறேன் என்றார்.  வேண்டாம். இத்துடன் விட்டுவிடு என்று வனா சொல்லிவிட்டுக் கவலையாக இருந்தாள். உண்மையாகவே கேட்கத் தீர்மானித்து அப்படி சொன்னாரா?  அது சாமிகளுக்குத் தாம் தெரியும்.

சிங்குச்சாமியும் வீட்டில் பூசைகள் செய்து வருமானம் பெறுபவர். பக்திமான் போல் மஞ்சள் துண்டு வேட்டியுடன் எப்போதும் இருப்பவர்.
இப்படியெல்லாமா காசு பிடுங்குவது?  நன்`கொடை வாங்குவது மட்டுமின்றி, பூசைக்கு வருவதை எடுப்பது மட்டுமின்றி, வழியில் வருவது வராதது எல்லாவற்றையுமா பிடுங்குவது?

உலகம் பொல்லாதது.  அதில் சாமியார் வேடமிட்ட சிங்குச்சாமி சரியான காரியக்காரன் என்று உணர்ந்து அசந்துபோனாள் கிழவி வனா.

பதினைந்து வெள்ளிப் பயணத்துக்கு ஐம்பது வெள்ளி எடுப்பது எப்படி? அதிலும் சிங்குச்சாமி இலவசப் பயணி..... 

வேண்டாம் அம்மா! நான் பணத்தைக் கட்டிவிடுகிறேன்,  நீங்கள் போ`ங்கள் என்று சொல்வார் என்று வனா எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை.  மீதம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தாள். அதுவும் நடக்கவில்லை. இப்படியா ஆசை வைப்பது பணத்தின்மேல்?

யாரைத்தான் நம்புவது இந்த அறியாத நெஞ்சம்?  என்று உலகத்தை அறிய முனைந்தாள் வனா.

(பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும். )