வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரிந்து இடும் பரிச்சை (பரீக்ஷா)


இன்று பரீட்சை என்ற சொல்லின் அமைப்புக் காண்போம்.
இப்போது இச்சொல்லின் பயன்பாடு குறைந்துவருகிறது. இதற்கு நல்ல இணையான சொல்லாகத் தேர்வு என்ற சொல் வழங்குகிறது.

பரிதல் என்றால் யாது பொருளென்று முதலில் காண்போம். இது தமிழ்ச் சொல். அன்பு, அறுத்தல், இரங்குதல்,ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல், பற்று வைத்தல்,  பகுத்தறிதல் என்பன இச்சொல்லின் பொருளாகும்.

இற்றைத் தமிழன் இதனெல்லாப் பொருள்களிலும் இதைப் பயன்படுத்த அறிந்திராவிட்டாலும், பரிந்துரை என்ற சொல்லையாவது அறிந்து பயன்படுத்தவல்லனாம். “ரெக்கமண்ட்” என்ற ஆங்கிலத்துக்கு ஈடாக இதைப் பயன்படுத்துவான்.

இதனை இதற்கு ஏற்றுக்கொள்க, அல்லது இவனை இச்செயலுக்கு அல்லது பதவிக்கு ஏற்றுக்கொள்க என்ற பொருளில் பரிந்துரை என்பது வரும்.

பரீட்சை என்பது இரு சொற்களைக் கொண்டு அமைந்ததாகும்.  பரிதலும் இடுதலும் அவை.

ஒரு கேள்வியைத் தேர்ந்து எடுக்கிறார் ஒருவர். பல கேள்விகள் உலகில் உள்ளன. அவற்றுள் ஒன்றை அவர் எடுக்கிறார்.  இந்த ஒன்றை அவர் வெட்டி எடுக்கிறார். இதற்குப் பதில் சொல் என்`கிறார். அதாவது நீங்கள் பதிலுரைக்க உங்கள்முன் இடுகிறார்.  இப்படி வெட்டி முன் இடுவதுதான் பரிந்து இடுதலாகும்.  பகுத்தறிந்து இடுகிறார் எனலும் ஆகும்.    பரிதல் சொல்லின் ஏனைப் பரிமாணங்களையும் விரித்துப் பொருத்தலாம். கேள்விக்குப்  பதில் ஒரு மரத்துண்டை உங்கள் முன் வைத்து இதைத் தூக்கு பார்க்கலாம் என்றும் கேட்கலாம்.  பரீட்சை என்பது கேள்வி பதில் பொருந்தியதாக மட்டும் உலகில் இருப்பதில்லை.

இடு  என்பது சை விகுதி பெற்று இடுச்சை ஆனது. பின் இது “ இட்சை” என்று திரிந்துவிட்டது.  இச்சை எனினும் அதுவே.  பரி + இடு + சை >  பரி+ இ(டு)+ சை > பரிச்சை > பரீச்சை> பரீட்சை.

பரிச்சை என்ற ஊர்ப்பேச்சுச் சொல் டுகரத்தை முற்றிலும் விலக்கி நிற்க, அதன் திருத்தமாகிய பரீட்சை என்பது டகர மெய்யெழுத்தையாவது உள்ளடக்கி நிற்பது மகிழ்ச்சிக்குரியதே எனலாம். டுகரத்தின் சுவடாவது தெரிகிறதே.

இச்சை என்ற விருப்பம் குறிக்கும் சொல், இடுச்சை என்று தோன்றி டுகரத்தை முற்றிலும் கெடுத்து இச்சை என்றானது காண்க.  நம் மனத்தை எதில் இடுகிறோமோ அதன்பால் நாம் இச்சை கொள்கிறோம்.

இட்டம் என்ற சொல்லும் இடு+ அம் = / என்று புணர்ந்து இட்டமாகிப் பின் இஷ்டமான கதையை முன்பு ஓர் இடுகையில் விரித்து வரிசெய்ததுண்டு. அதாவது விவரித்ததுண்டு.

இடை டுகரம் மறைதலை இங்குக் காண்க.

கேடு > கே > கேது.  ( கெடுதல் செய்யும் கோள்)
கேடு > கேதம்.  (துக்கம்).  அதாவது உயிர்க்கேடு.

 ஊர்ப்பேச்சுச் சொல் பரிச்சை  தான்.

விரும்பி இடப்படுவது பரிச்சை அல்லது பரீச்சை.இதன் கொடுந்திரிபு பரீக்ஷா.


பின் சந்தித்து உரையாடுவோம்.


 

புதன், 13 டிசம்பர், 2017

பொருளும் அழகும் கவித்தது கவி.



தமிழில் கவ்வுதல் என்றால் அகப்படுத்துதல், வாயினால் பற்றிக்கொள்ளுதல். 

கவ்வு என்பது வினைப்பகுதி,. மேலிருந்து ஒரு பொருளை மூடிக்கொள்ளுதலுக்குக்  கவித்தல் எனப்படும்.

ஏதேனும் ஒரு பொருளை உட்படுத்தி, அதன்மேல் வரணனைகளையும் கருத்துகளையும் கொண்டு மூடினால் அல்லது போர்த்திவைத்தால், அப்பொருளைக் கவித்துவைத்தோம் எனலாம்.

நிலவே நிலவே ஓடிவா என்றால் நிலவு என்ற பொருளின் மேல் வருதலாகிய கருத்தினைக் கவித்தும் குவித்தும் மேல்விரித்து உட்பொதிந்தும் வைக்கிறோம் என்று பொருள்.

இப்படிக் கவித்தலைத்தான்  கவி என்கிறோம். கவி > கவிதை.  இங்கு தை என்பது விகுதி.  

தை என்பது பொதுவாக ஒரு விகுதி. வினைப்பகுதியையும் பிற சொற்களையும் சென்றிணைந்து புதிய சொல்லை அமைக்கும்.

கவ்வுதல், கவித்தல் தொடங்கிக் கவடு (கபடு) உட்படப் பல கருத்து விரிவுகளை உள்ளடக்கிப் புதிய சொற்களை மொழிக்கு ஈந்தது கவ்~ என்ற அடிச்சொல். திறன்மிக்க இவ்வடி  பிறமொழிகளையும் வளப்படுத்தியது, நெல்லுக்கு ஓடியது புல்லுக்கும் ஊட்டம் தந்ததுபோலாம், இது பிற ஆதாரங்களுடன் கூடி நின்று தமிழின் தொன்மையை விளக்கவல்லது.

கவை முதலிய சொற்கள் தமிழில் உள. அவற்றை ஈண்டு விரிக்கவில்லை.
இனிச் சொல்லமைப்பினைக் கவனிப்போம்.

கவி > கவிதல்
கவி > கவித்தல்.
கவி > கவிதை.

பொருளின்மேல் அழகு கவித்தல்; சிந்தனை கவித்தல். எண்ணங்களை விரித்து அடக்குதல். வார்த்தைகளைப் போர்த்தி மூடுதல்.

தை விகுதிச் சொற்கள்.   காழ் > கழுதை;   பழ > பழுதை.   வன > வனிதை.   புன்> புனிதை ( புனலால் தூய்மை பெற்றவள்); (புன்>புனல்) . தேவு > தேவதை;  அகம் > அகந்தை.

இவை மொழியிற் பலவாம்.

ஒரு பொருண்மேல் மனம் கவிந்து சொற்கள் இயைந்து வெளிப்படுதல் - கவிதை.  கவி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.

கவிதை, பாக்கள் சிறந்த மொழி தமிழ்.  கவிதைச்சொல் பிறமொழிகளிலும் 
 சென்று வழங்கியது தமிழிற்குப் பெருமை ஆகும். 

 இதை இன்னொரு முறை வேறு கோணத்தினின்று காட்டுவோம், வாய்ப்புக் கிட்டுகையில்.

will edit. Some dots have appeared in unwanted places
These will be later corrected.



திங்கள், 11 டிசம்பர், 2017

கஞ்சாவும் தமிழ்மொழியும்.



கஞ்சாவைக் குறிக்கும் சில தமிழ்ச் சொற்களைப் பார்த்தோம். கஞ்சா என்ற சொல்லின் அமைப்பைக் காண்போம்.

கஞ்சா என்பது செடியில் கிடைப்பதாயினும், அது தமிழருக்கு வந்து சேர்ந்தது காஞ்ச நாராகத்தான். இதைப் பெரும்பாலும் புகைத்தனர். இவர்களிற் பலர் நல்ல பணவசதியுள்ளவர்கள். அந்தக்காலத்தில் சாமியார்கள் சிலரும் புகைத்ததாகத் தெரிகிறது. சட்டங்கள் கடுமையாக இல்லாத காலமது.

இதனைப் புகைக்காமல் வேறு வழிகளிலும் நுகர்ந்தனர்.

இவற்றை விரித்து எழுதியோர் உரைகளைப் பார்த்து மேலும் அறிக.

காஞ்ச நார் > காஞ்ச  > கஞ்சா 

திரிந்த சொல்லாம்.

காஞ்ச என்பது பேச்சுவழக்கு.  எழுத்தில் இது “காய்ந்த” என்ற எச்சவினையாகும்.

மந்திர மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் கஞ்சாவிற்கும் தொடர்பில்லை. இது ஆலயப்பொருளுமன்று. இது தமிழில் அமைந்து பின் பிறமொழிகட்கும் பரவிற்று.

இந்தி வழியாக ஆங்கிலத்தில் பரவிற்று.  இச்சொல் இந்தியிலிருந்து சமஸ்கிருதம் மேவிற்று. பழைய சமஸ்கிருத அகராதிகளில் கஞ்சாப் பெயர்கள் கிட்டவில்லை.

பல பிறமொழிப் பெயர்களும் இங்குக் கிடைக்கும்:

 https://en.wikipedia.org/wiki/List_of_names_for_cannabis



சமித்து,  சிலுகை, கோளா (கஞ்சா உருண்டை), கோரக்கர்மூலி,  ஏகவுண்டை,
மதயந்தி, பங்கியடித்தல், பூங்கஞ்சா என்பனவும் சில பெயர்கள்.  கோழிமலத்தில் கஞ்சாச் செடிகள் ந  ன் கு வளருமென்பர்.  இது கோழிக்காரமெனப்படும்.
 



-----------------------------------------------------------

தமிழில் வினை பெயராகும்போது நெடில் குறிலாகும்.  அன்றியும்  வினைமுற்றாகுங்கால் நெடில் குறுகும்.  பல்வகை எடுத்துக்காட்டுகள்:

காண் > கண்.   வினை பெயராகும்போது  குறுகிற்று. இது விகுதி ஏற்கவில்லை.
சா>  சாவு > சாவு+அம்  = சவம்.  சாவு என்பது இன்னொரு விகுதி பெற்றுக் குறுகிற்று.
வா> வருவாய் ,   வா> வாராயோ.   காண் > கண்டனர்.  வா> வந்தது.

குறில் நெடிலாவது;   செய் > சேவை.
மிகுதி  > மீதி.  பகுதி > பாதி. செய்>செய்தி>சேதி.

குறிலாதல்:

காய் > காய்ச்சு.
காய் > காய்ஞ்சி > கஞ்சி.

நெஞ்சில் ஈரமில்லான் கருமி:

காய் > காய்ஞ்சன் > கஞ்சன்.

வாயினால் அன்பொழுகப்  பேசுவது வாஞ்சை.

வாய் > வாய்ஞ்சை > வாஞ்சை.  இங்கு குறுகவில்லை. யகர ஒற்று மறைந்தது, 

கள் என்ற அடியிலிருந்தே காளி என்ற சொல் பிறந்தது. கள் என்பதற்குக் கருப்பு என்றும் பொருளுள்ளது. இது நெடிலாக்கம். கள் என்பதிலிருந்து கள்ளர் என்ற குலப்பெயர் தோன்றியதென்பார் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் என்னும் தமிழ்ப்பேராசிரியரும் மணிமேகலைக் காப்பிய உரையாசிரியரும்.  இங்குச் சொல் திரிபின்றி இயல்பானது.