சனி, 9 டிசம்பர், 2017

பூத்திருக்கும்போது சேர்த்துக்கொள்



பெண்டாட்டி பால்சீறிப் பேடிக்குப் போனக்கால்
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் --- என்றபடி
காத்திருக்கும் கட்சி எதிர்நிற்கும் பூவையே
பூத்தபோ தேற்றல் புரி.

இதற்குப்  பொருள்: (  உரை )

பெண்டாட்டிபால் -  ஒருவன் தன் மனைவியினிடத்து;
சீறி -  சண்டைபோட்டுக்கொண்டு;
பேடிக்கு - சரியான பெண்ணல்லாத ஒரு பிறவியைத் தேடி;
போனக்கால் -  சென்றானாகில்;
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் -  சென்றபோது
வரவேற்று ஒன்றாகி  மென்மை காட்டுவார்கள்;
என்றபடி -  இப்படி உலகம் சொல்வதுபோல;
கட்சி எதிர் நிற்கும் -  எதிர்க் கட்சிகள் முன்னணியில்
நின்றுகொண்டு;
காத்திருக்கும் - அவனை ஏற்றுக்கொள்ளக் காத்திருப்பர்;
பூவையே பூத்தபோது -  பூவே போன்ற அவன் மனைவி
ஏற்கின்ற நிலையை  மேவுகையில்;
ஏற்றல் புரி -  ஏற்றுக்கொண்டு செயல்புரி.

சில எதிர்க்கட்சிகள் பேடிபோல் செய்லாற்ற இயலாதவை;
விலகி நில் என்பது கருத்து.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

நீதி சான்று கட்சி



நாம் முன்  இடுகையில் நீ என்ற அடியிலிருந்து போந்த சில சொற்களை அறிந்து இன்புற்றோம். அந்த இடுகையை வேண்டுமானால் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.


நீ என்ற அடிச்சொல் நீக்கப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.
இப்போது இதே கருத்தை முன்னிறுத்தி நீதி என்ற சொல்லை ஆராய்வோம்.

நீதி சொல்பவன், எப்பக்கமும் சாயாமல் அல்லது கோடாமல் நடுநிலை நின்று ஒரு வழக்கையோ தருக்கத்தையோ ஆராய்ந்து தீர்ப்பைச் சொல்லவேண்டுமென்பது நீங்கள் அறிந்துவைத்திருப்பீர்கள். உங்களிற் பலரும் அதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராகவும் இருப்பீர்கள். இதில் ஐயமில்லை.

எனவே வழக்கில் உள்விழுந்து வாதங்களில் இழுக்கப்பட்டுவிடாமல், காய்தல் உவத்தல் யாதுமின்றி முடிவு சொல்வது அவன்றன் கடமையாகும்.   நீங்கி நின்று சான்றுகளை ஆராயவேண்டும்.

நீங்குதல் என்ற சொல்லினின்றே நீதி என்ற சொல்லும் அமைந்தது.
நீ > நீதி.

இங்கு தி என்பது விகுதி.

சான்று என்பது சாலுதல் அல்லது நிறைவு என்பதனடிப் பிறந்த சொல்.  சால்பு என்பதும் அவ்வடியிற் பிறந்ததே.

வழக்கில் கட்சிக்கார்ர்கள் இருப்பர்.  இரு கட்சிகளோ அல்லது அவற்றுக்கதிகமோ இருக்கும்.   கள் என்ற அடிச்சொல் ஒன்றுக்கு மேற்பட்டவை குறிக்கும் ஒரு அடிச்சொல்.

நரி > நடிகள்.  இங்கு  பன்மைப் பொருள் வந்தது.

கள் என்பதற்குப் பிற பொருளும் உள.  அவை ஈண்டுப் பொருந்தாதவை.

கள் + சி =  கட்சி ஆகும். ( பன்மை ஆகிய பிரிவினை).

ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்தாலோ குழுக்கள் இருந்தாலோ அதனில் ஒன்று கட்சி  ஆகும். மற்றொன்றுமாம்.   பின் விட்டுக்கொடுத்துப் போவதென்பது வேறு. பெரும்பான்மை போற்றுதலும் வேறு.

ஒரு கட்சிக்குள் ஒரு கருத்து நிலைநிறுத்தம் பெறுகையில் அதை ஏலாதோர்
உலகெங்கிலும் உளர் என்பதால் கட்சி என்பதன் பொருள் உணரப்படும்.

கள் +து =  கட்டு > கட்டுதல். ( ஒன்றின் மேற்பட்டன ஒன்றாக்கப் படுவது).

கட்டு > கட்டி.  (திரண்டிருப்பது).

ஆக, கட்சி எனின் தனி நிலையினர் ஒரு நிலையில் கோவைப்படல் எனலாம்.. எப்படிப் பொருள் கொள்ளினும் கள்+சி = கட்சி என்பது காண்க.

அறிந்து மகிழ்வீர்.


 அடிக்குறிப்பு:

நீதி நில் என்பதனடித் தோன்றிற்று என்ற கருத்தினர் உளர்.  நில்> நில்+தி>
நீதி என்பர்.  நீதிபதி நீதியுரை பகர்ந்தபின் அதுவே நிற்கும் (  மாற்றற்கரிய ) சட்டமாகிவிடுகிறது.  மக்களும் ஏற்றுக்கொள்வர். இவ்வகையிலும் இது
பொருத்தமாதலின் இது தமிழடிப்படையிலெழுந்த சொல்லே. இருபிறப்பிச் சொல். இங்கு லகர ஒற்று வீழ்ந்தது.

நீலம் என்பதும் நில்+அம் என்றமைந்ததே, நில் > நீ என்று நீண்டு லகர ஒற்று வீழாது விகுதி பெற்றது.  அடிக்கருத்து: கறை நீங்காமை.  கறு > கறை.  கறுப்பு நீலம் இரண்டுமடங்குவது.

வியாழன், 7 டிசம்பர், 2017

நீ என்னும் அடி





 நீ என்பது முன்னிலை ஒருமைச் சொல் என்பர்  இலக்கணியர்.  அதாவது முன்னிற்கும் ஒரு நபரைக்1 குறிக்கும்.


நீ  என்பது ஓர் அடிச்சொல்லுமாகும். அங்ஙனம் வருங்கால் அது  நீக்கப்பொருளை அடிப்படைக் கருத்தாகத் தருவது.  முன்னிலை ஒருவனை நீ என்னும் போதும் அதுவும் நீக்கப்பொருளே.  தன்னின் நீங்கிய பிறன் முன்னிற்போன் என்ற பொருளையது தரும்.

அடிச்சொல்லாய் அது விகுதி (மிகுதி)  பெற்று நீளும்.

நீ > நீங்கு > நீங்குதல்.
நீ>  நீங்கு >  நீக்குதல். (பிறவினை).

நாற்றமான பொருள்  தன்னின் நீக்கமடையும்.
நீ >  நீச்சு.   ( சு என்பது விகுதி).  பொருள்: நாற்றம்.
நீ > நீச்சு > நீச்சம்  ( விலக்கத்தக்கது. நாற்றம்பிடித்தது ).

நீச்சம் >  நீசம் > நீசன். இழிவானவன். 

நீசமடைதல்:   கோள் வலுவிழந்து, செயலிழந்து போதல்.
“கிரகம் நீசமடைந்த்து “ என்பர்.

நீரால் நீங்கிச் செல்லுதல் நீச்சல்.
நீ > நீந்து  > நீந்துதல்.
நீந்து > நீந்தல் > நீச்சல்.
நீந்து > நீச்சு ( நீந்துதல்).
(இது நீந்து :>  நீத்து  > நீச்சு எனவரும்.  த> ச திரிபு). இடைவடிவம் தவிர்க்கப்பட்டது)


நீஞ்சு > நீஞ்சுதல்.    நீஞ்சு > நீச்சு.

நீ > நீத்தல்.  ( உயிர் நீத்தல் முதலியவை)


 நீ என்ற சொல் பல சொற்களுக்கு அடியாக உள்ளது. சில இங்குச் சொல்லப்பட்டன.




1  நபர் <  நண்பர்  இடைக்குறை. இடைக்குறைந்தபின் ஆள் என்ற பொருளில் வழங்குகிறது.

Edited  8.12.2017.
An irrelevant paragraph found herein has been deleted.