வெள்ளி, 10 நவம்பர், 2017

சகுனம் என்பது ....



இப்போது நாம் சகுனம் என்ற சொல்லை அணுகுவோம்.

இந்தச் சொல்லின் முன் வடிவம் சொகினம் என்று இருந்தது.  இந்தச் சொல் பேச்சு வழக்கிலோ எழுத்திலோ அண்மையில் காணப்படவல்லை. இதன் திரிபாகிய சகுனம் என்பதே யாண்டும் எதிர்கொள்ளப்படும் சொல்லாகும்.

ஆய்வு செய்வதாயின் நாம் முந்து வடிவத்தையே கவனிக்கவேண்டும்.

சொகினம் என்பதும் முதல்வடிவன்று.   இதன் முதல் “சொல்கினம்”  என்பது.
பல சொற்களில் காணப்படுவதுபோல் இச்சொல்லிலும் ஓர் ஒற்று அல்லது மெய்யெழுத்து வீழ்ந்தது.

 சொகினம்.<  சொல்கிணம் < சொல்கிணை.

ணகரம் னகரமாய் மாறி அம் விகுதி பெற்றது.

கிணை என்பதொரு பறை.  இதை யடித்துக்கொண்டு பாடி நன்மை தீமைகளைத் தெரிவித்தனர்,  பெரும்பாலும் இவை புகழுரைகளாகவே இருக்கும்.

“சகுனம் சொல்லுதல்” என்பது வழக்கு.  சகுனம் என்று சொல் அமைந்தபின் கிணை அடித்தல் இல்லாதவிடத்தும் இது பயன்பட்டது.   எடுத்துக்காட்டு பல்லி சகுனம். 

விளக்கம்: 
மனித வாழ்வில் முன்மை இடர்ப்பின்னலாக இருப்பது எதிர்காலத்தை அறிந்துகொள்ளமுடியாமைதான்.  ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு கவிஞர் :  “ நாடகமே உலகம், நாளை நடப்பதை யாரறிவார்? “ என்று ஒரு பாட்டை எழுதினார்.  என்றாலும் நாளை நடப்பதை அறிந்துகொள்ள மனிதன் பல கருவிகளைத் தேடி உதவிபுரிய வைத்தான். அவற்றுள் சோதிடம், சகுனம், ஆரூடம் என்பனவும் அடங்கும். நேற்று நடந்தவற்றை வைத்து நாளை நடப்பனவற்றையும் அறிய முற்படுகின்றனர்.   இவற்றுள் முழுப்பயன் அளிப்பன  எவையும் இல்லை.  எல்லாமும் ஓரளவுக்குத்தான் அறிந்துகொள்ளத் துணைசெய்வனவாய் உள்ளன. பறையடித்துக்கொண்டு வீடுவீடாகப் போய்ப் பாடி வீட்டிலிருப்போனைப் புகழ்ந்து பொருள்பெறுவது பண்டைத் தமிழகத்தில் நடந்தது. இவர்கள் நன்மை வரவையும் தீமை வரவையும் பாடிக் கூறினர் என்றாலும் பெரிதும் நன்மையையே முன்னுரைத்துப் புகழ்ந்தனர் என்று அறிக.    

வியாழன், 9 நவம்பர், 2017

கேடு > கே, அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பித்தல்



முன் ஓர் இடுகையில் கேது என்ற கிரகப் பெயர் அமைந்த விதம் தெளிவாக்கப்பட்டது.   

மெய்யுணர்வை அல்லது ஞானத்தை வழங்குபவன் கேது ( என்னும் கிரகம் ) என்பதறிக.  ஒரு சில இடர்களாவது வந்தாலன்றி மனிதற்கு அறிவு தோன்றுமாறில்லை.  எல்லாமே இன்ப மயமாக இருந்துவிட்டால்,   சிந்திப்பதற்கும் மெய்யுணர்வினை அடைவதற்கும் நேரமும் இருக்காது, வாய்ப்பும் இருக்கமுடியாது. மனிதற்கு அதனாலேயே இடர்களும் அவை கடக்கும் முயற்சிகளும் உருவாகுகின்றன. 

சோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் அது கூடும் இடத்திற்கேற்ப நன்மை விளைத்தலுமுண்டு; தீமை விளைத்தலுமுண்டு. ஆனாலும் சில,  சனி  போல தனி வன்மை உடையனவாய் கெடுதல்செய் கோள்களாய் உணரப்படுகின்றன.

கெடு > கேடு (முதனிலை திரிந்த தொழிற்பெயர் ) > கே >   கே( அடிச்சொல் )  +   து (விகுதி) > கேது என்பது முன் இடுகையில் உணர்த்தப்பட்டது -  மறவாதீர்.

இஃது இரண்டாம் எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி (மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம். (<தம்+திறம்).  இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேசை என்பதும் கூறப்பட்டது.

இப்போது இன்னும் சில சொற்களை ஆய்வு  செய்து இந்த அறிவினை விரித்துக்கொள்வோம்:

கெடு> கேடு > கே.
(சு விகுதி இடைநிலையாய்ப் பெறல் )

கேசரம்:
 
கே > கேசு > கேசு + அரு + அம்> கேசரம்.

கெடுதற்கு அரியது /அரியவை.  இவையாவன: பூந்தாது,  குங்குமப்பூ, மயிர் (உதிர்ந்தாலும் வாடிப்போகாமை ), பொன் (துருப்பிடிக்காமை),  மாதுளை,(எளிதிற் கெடாதது ) . வண்டு;(மலரோடு ஒப்பிட வண்டு வாடாதது),  மகிழமரம். (இனிய மணமுடைமை, கேடின்மை).

எனவே  கேசரம் என்ற சொல் அமைந்தது கேடின்மை அல்லது கெடற்கருமை விதந்து காட்ட 
.
கேசவம் என்ற சொல்:

கே >  கேசு  ( சு விகுதி )  + அவம்.

அவம் என்பது இங்கு “அற்றது “ என்ற பொருளில் வருகிறது.   அவி+அம் = அவம்.  அவி = அழி.

இதன் பொருள்:  பொன்வண்டு,  நறுமணம், நிறை கூந்தல்

இவை கேடற்றவை என்பது இச்சொல்லின் பொருண்மை.

கேடு அவிந்தது என்றால் கேடு இல்லையானது என்று
பொருள்.

கேட்டை,  கேதம்

கேட்டை:  < :  கேடு +ஐ.    கெடுதலான நட்சத்திரம் என்பது.  கெட்டவனும் ஒரு நல்லது செய்வான் எனவே கெடுதல் முற்றிலுமன்று.

கேதம் :   கெடுதல்;   சாவு.  இது கேது என்ற சொல்லின் விகுதியேற்ற நிலை.

இன்னும் சில உள்ளன.  அவை பின்னர் காண்போம்.

புதன், 8 நவம்பர், 2017

கள்ளப்பணத்துக்கு நல்லபணம் பரிமாற்ற நடவடிக்கை


 கள்ள நோட்டுகள் பெரும்பாலான நாடுகளில் சரளமாகப் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அவை இந்தியாவில்தான் கோலோச்சிவந்துள்ளன என்று அறிந்தோர் கருதுவதுண்டு,  சபரிமலைபோலும் இடங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நாணயம் மாற்றிக்கொண்டு செல்வோர் என்ன மாதிரி நோட்டுகளைக் கொண்டு செல்கிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான். ஒரு நோட்டு கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று நாமறியமாட்டோம் அன்றோ?  அது நிபுணர்களுக்கே வெளிச்சம்.

பாகிஸ்தானில்மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட அச்சுக்கூடங்களில் அவை அச்சிடப்பட்டு  நேப்பாளம்வழியாக இந்தியாவுக்குள் விடப்படுகின்றன என்பது முன்னர் வந்த செய்தி.  இந்தியாவில் அவை பரவி, தீவிரவாதி முதல் அரசியல் கட்சிகள் வரை யார் கையிலும் தவழ்ந்துகொண்டிருந்தன என்று ஒரு செய்தி வந்ததும் உண்மை.

சில குறிப்பிட்ட தொகை நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு அவற்றை வாங்கிகளில் இட்டால் அரசு அவற்றை நல்ல பணமாக ஏற்றுக்கொள்ளுமென்பது  எடுக்கப்பட்ட நடவடிக்கை.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கூற்றுப்படி இது கள்ள நோட்டை வாங்கிக்கொண்டு அதற்குப்பதில் நல்ல நோட்டுகளை மக்களுக்கு அளிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தெளிவுசெய்தனர். அப்படியானால் திட்டத்தில் ஒன்றும் குறையில்லை.

இதில் வந்த பிரச்சினை என்னவென்றால் அரசு ஒரு காலக்கெடு விதித்ததும்  அந்தக் கெடுவுக்குள் வங்கிகளால் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கிக்கொடுக்க முடியவில்லை என்பதும்தான்.

காலக்கெடு விதிக்கவில்லையென்றால் நடவடிக்கையால் ஒரு புண்ணியமுமில்லை. முன் கூட்டியே அறிவித்துவிட்டுச் செய்தாலும் பெருந்தொகையில் கள்ளப்பணம் வைத்திருப்பவர்களைத் தப்புவதற்கு வழிசெய்ததுபோல் ஆகிவிடும்.  விரைந்து ஒரு காலக்கெடுவுக்குள் முடித்தால்தான் அது நல்ல நடவடிக்கையாக அமையும்.

இந்த நடவடிக்கை வங்கிகளை நம்பி இருந்த காரணத்தால் தொல்லைவிளைந்தது.  ஏனோ அவற்றால் விரைந்து சேவையளிக்க இயல வில்லை. ஆனால் வேறு வழியும் இல்லை.

முன் கூட்டியே வங்கிகளுக்குத் தெரிவித்து அவற்றைத் தயார்ப்படுத்துவது இயலாத  காரியம். திருட்டுத்தனமான வேலைகளில் யாரும் ஈடுபட்டு நடவடிக்கையை முறியடிக்கலாம்.  வங்கி ஊழியராயினும் யாராயினும் இதில் விதிவிலக்கு இல்லை. 

ஒரு தொல்லையும் இல்லாத நல்லவழி எதுவும் இல்லை.

தீவிரவாதிகளை முறியடிக்காவிட்டால் அவர்களால் அழிவு ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. கள்ளப்பணத்தை அனுமதித்துக்கொண்டிருந்தால் அவர்களை எந்தக் காலத்திலும் முறியடிக்கமுடியாது.
அரசியல்வாதிகள் ஊழலால் தேர்தலில் வெற்றிபெறுவதைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகிவிடும்.

அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டால் பொருளியலும் சீர்குலையும்.  அதனாலும் கள்ளப்பணத்தைக் கட்டுப்படுத்தவேண்டியுள்ளது.

வங்கிகளால் அரசுடன் நடைபோடமுடியவில்லை என்றாலும் அதனால் மக்களுக்குத் தொல்லை என்றாலும் இதற்கு வேறுவழி எதுவுமில்லை.
ஆகவே மோடி செய்த்து சரியென்றுதான் சொல்லவேண்டும். 

பிற்சேர்க்கை:

https://www.ndtv.com/india-news/demonetisation-anniversary-pm-narendra-modis-popularity-endures-in-part-because-of-demonetisation-1772087 

அந் நாட்டிலுள்ள செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்து மேலே சுட்டப்படுகிறது.

ஆண்டுக்குப் பத்து இலட்சம் வேலைகளை உருவாக்கித் தள்ளுவதற்கு மோடி என்பவர் மந்திரவாதி அல்லர்,   அவரிடம் மந்திரக்கோல் ஒன்றுமில்லை.  பேச்சுவார்த்தைகள் மூலம் வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தேவையான இதமான சூழ்நிலைகளை உருவாக்கித் தரலாம்.  முதலீட்டார்களின் சொந்தத் திட்டங்களும் செயல்பாடுகளும் அரசில் இல்லாதவர்கள் செய்யும் அட்டகாசங்களும் அவர்கள் வரும் விரைவைக் குறைக்கக்கூடும். சமையல்காரனுக்குப் பக்கத்திலிருப்பவர்கள் தொல்லை கொடுக்காமல் இருந்தால்தானே கொழுக்கட்டை ஒழுங்கான முறையில் சட்டியை விட்டு வெளிவரும்.  இத்தகு சுமைகளையும் எந்த நாட்டுத் தலைவரும் பொறுத்துக்கொண்டே செயலாற்றவேண்டியுள்ளது. பாவம்!