புதன், 8 நவம்பர், 2017

இன்று முழுதும் இந்த நாய்.......!



இன்றுமுழுதும் இந்த நாய் ஏனோ
உறுமிக்கொண்டே இருக்கிறது?
தின்றது நேற்றே இன்றில்லை என்ற
கிட்டாத நிலையினை வெறுக்கிறது!

சோற்றுத் தட்டையை உருட்டி விட்டது
சோர்வின்றிச் செருப்பைக் கடிக்கிறது.
நேற்றை நன்னிலை மீள்க மீள்கென
நெஞ்சம் வேகமாய்த் துடிக்கிறது.

பதவி இழந்திட்ட முன்னாள் அரசனின்
பரிதவிப்பு கண்ணில் தெரிகிறது
உதவி செய்திட உள்ளமும் சொல்லுது
உலகத் தியற்கையும் புரிகிறது. 

 குறிப்புகள்:

நேற்றே -  இங்கு ஏகாரம் இசைநிறை.
 
 



திங்கள், 6 நவம்பர், 2017

சில சோதிடச் சொற்கள். கிராம்பு. முதலியவை

கிரகம்


கிரகம் என்ற சொல்லை முன்பு ஆய்வு செய்திருக்கிறோம்.

அகர வருக்க முதலாய சொற்கள் ககர வருக்கமாகத் திரிதலுண்டு என்பதை நம் முன் இடுகைகளிலிருந்து அறிந்தின்புற்றிருப்பீர்கள்.

அவற்றில் சிலவற்றை இப்போது மறுநோக்குக் கொள்வோம்.

இரு+அகம் >  இரகம் > கிரகம்.

ஒரு கோள் அல்லது வான்பந்து  ( planet or star ) அகத்து இருக்கும் இடமே “இரகம்” ஆவது.    (இரு+ அகம் ). அது பின் கிரகம் ஆயிற்று அல்லது அங்ஙனம் புனைவுபெற்றது   இதை முதலில் பிறழ்பிரிப்பின்மூலம் அறிந்தனர், அல்லது மறுபடி கண்டுகொண்டனர். அதன்பின் பிற சொற்களையும் அதே பாணியில் அமைத்தனர்.

இராசி


இரு+ ஆசு + இ > இராசி >  ராசி.

ஆசு என்பது பற்றுக்கோடு.  பற்றி நிற்றலாகிய செயலும் தன்மையும்.   இது ஆதல் என்ற வினையினின்று பிறந்த சொல்லாகும்.  இப்படி ஒரு கோள் பற்றி நிற்கும் வீடு அல்லது இடமே இராசியாகும்.  அவ்விராசியில் நிற்கும் கோள் இராசிக்குடையவனானால் அவன் இராசிநாதன் எனப்படுவான்.

நாதன்


நாதன் :  தலைவன்.  நம் நாவினால் வணங்கிப் போற்றலுக்குரியோன் நாதன்.  நா - நாக்கு.  து -  உரியது குறிக்கும் சொற்புனை இடைநிலை.  அன் - ஆண்பால் விகுதி. நாது என்ற அமைப்பு, பிறமொழிகளில் நாத் என்று வெட்டுண்டு வழங்கும் .

நா+ து + அன் =  நாதன்.  (வலி மிகாது புணர்த்திச் சொல்லமைத்தல்.

நா+ து > நாத்து + அன் > நாத்தன் > நாதன் ( வல்லொலி  நீக்கம்). 

பிறமொழிகளில் வல்லொலியுடன் வழங்கும்.
எங்ஙனமாயினும் வேறுபாடில்லை,  மாறுபாடில்லை. 

இது கணியக்கலைச் சொல் அன்று எனினும் ஆங்கு மேற்கொள்ளப்பட்டு வழங்குவதாயிற்று.

காணாக் கிரகங்கள்


 கணியக்கலையில் 12 வீடுகளில் 9 கோள்கள் உள்ளன. சில சோதிடத்தில் 7 கோள்களே கூறப்படும். அவற்றை வைத்தே வாழ்வு முழுமையும் கணிக்கப்படும்.  இதற்குக் காரணம் இராகு, கேது என்பன நிழற்கிரகங்கள்.   கணித்து நோக்குங்கால் இன்னும் இரண்டு கோள்கள் இருந்தாலே கணிப்பு நிறைவாக இருக்கும் என்பதையும் அங்கனம் இல்லாக்கால் குறைவு தென்படுகிற தென்பதையும் கணிக்கலைஞர்கள் அறிந்துகொண்டு, எழுத்தியல் கணக்கில் (   algebra        ) செய்வதுபோல அறியாக் கோள்களுக்குப்  பெயரிட்டுக் கணித்துக்  கலையை நிறைவு செய்தனர்.   இஃது ஒரு நுண்மாண் நுழைபுலமே  ஆகும்.   இக்கலைஞர்களைப் பாராட்டவேண்டும். பின்னர் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டது நீங்கள் அறிந்ததே.

சில கோள்கள் நம் கண்களுக்குக் தெரிவதில்லை. அதனால் அவை இல்லை என்பது தவறு.  கணிதம் மூலம் அறிந்து பெயரிட்டதே சரி.
பின்னர் வான்நூலார் அறிந்தது நற்பேறு ஆகும்.

கேடு >  கேடு+து = கேடுது  > கேது (  டு  கெட்டது.  இன்னோர் உதாரணம்: தடுக்கை > தக்கை )

கேடு > கே > கேது எனினுமாம்.

ஒ.நோ:  மேடு > மே > மேசை (சை விகுதி) > மேஜை > மென்ஸா(இலத்தீன்)
இன்னும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் பரவிய சொல்.



இஃது இரண்டாம் எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி (மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம். (<தம்+திறம்).  இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேலே தரப்பட்டுள்ளது காண்க.

 கேது : கெட்ட கிரகம் என்ற நம்பிக்கையினாலே  ஏற்பட்ட  பெயராகலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாமற் கெட்ட கிரகம் எனினுமாம்.  கெடுதல் = விடப்படுதல், புலனாகாமை.

இர்-  இருள் என்பதன் அடிச்சொல். இதிலிருந்து இர்+ ஆகு = இராகு > ராகு என்றமைந்தது அருமை.  இருட்டுக் கிரகம். நிழற்கிரகம் என்றும் சொல்வர்.
இராகு :  இருளாவது.

இர் அடிச்சொல் புனைசொற்கள் -  எடுத்துக்காட்டுகள் சில


இர்> இர்+ஆம்+அர் > இராமர் > ராமர். அல்லது +~அன் :  இராமன்.
இர் > இரா > இராவண்ணன் > இராவணன்  ( இடைக்குறை)
இர் > இரா > இரா+குலன் > இராகுலன் ( இராப்போதில் கூட்டமானவர்கள், அவருள் ஒருவன்).
இர் > இரா+ ஆத்தா > இராத்தா > இராதா.  (௷லித்தல் விகாரம்.) > ராதா.
இர்> இராமி (இர்+ஆம்+இ) > ராமி  ( அபிராமி)

இர் > இரா > இரா+ திரி > இராத்திரி > ராத்திரி ( இருளாகிய திரிபு அல்லது
மாற்றம்.)

இவை இர் என்ற அடிப்பிறந்த, தமிழிலும் வழங்கும் சொற்கள்.

கிராம்பு


பறித்துச் சிறிது நேரத்தில் வாடி விடுவன பூக்கள். வாடாமல் இருப்பது கிராம்பு. 

இரு+ ஆம் + பூ =  இராம்பு > கிராம்பு.
இருக்கும் பூ -  வாடாமல் இருக்கும் பூ . இரு - இருத்தலுக்கு,  ஆகும் பூ.
ஆகும் > ஆம் (தொகுத்தல்)

அறிந்து மகிழ்க.

பிழைகள் தோன்றின் திருத்தம்பெறும்

ஞாயிறு, 5 நவம்பர், 2017

படுதல் படுத்தல் படம் சொற்கள் அமைப்பு

படுதலும் படுத்தலும்.

ஒரு முனையால் மட்டும் தொட்டால் அது படுதல். இது தன்வினை  எனப்படும்.  ஆனால் அகன்ற நெடிய பொருள் தன் முழுமைப் பக்கமும் மற்றொரு பொருளின் பக்கத்துடன் படுமாறு தொடுமாயின் அது படுத்தல் எனப்படும்.  ஒரு மனிதன் தன் முதுகுப் பகுதி அல்லது முன்பகுதி முழுமையும் பாயில் படுமாறு அதன்மேல் கிடப்பானாயின் அவன் அப்பாயில் படுத்துள்ளான் என்று சொல்வர்.  இங்கு படுத்தல் என்பது படு என்பதன் பிறவினையாகிறது.

அதாவது அம்மனிதன் தன் உடலைப் பாயிற் படும்படி கிட்த்துகிறான் என்பதாகும்.

படம்

இனிப் படம் என்பதைப் பார்ப்போம்.  இது படு+அம் என்று அமைந்த சொல்.  ஒரு பொருள் இன்னொரு பொருள்மேல் படுவதனால் அல்லது படுப்பதனால் ஒரு பதிவு உண்டாகுமாயின் அந்தப் பதிவே “படம்”  ஆகிறது.  இனி ஒன்றன்மேல் ஒரு பொருள் படிந்து ஒரு உருவோ பதிவோ உண்டாகுமாயின் அந்தப் படிவும் படமே ஆகும்.

அடுதலினின்று அடித்தல் என்பது இன்னொரு சொல்லாய்த் தோன்றியதுபோல்  படுதலிலிருந்து படிதல் என்பதும் படித்தல் என்பதும் தோன்றின. படி+ அம் என்பதும் படம் ஆகும்.  இது உருவம் படிதலையும் உள்ளடக்கும். 

இனி:

படி + அம் = படிவம் (வகர உடம்படு  மெய்)

படி + கு + அம் =  படிகம்  ( கு சொல்லமைப்பு இடைநிலை; அம் விகுதி)

படி என்ற  அடிச்சொல்லிலிருந்து இன்னும் பல புதிய  சொற்களையும் உருவாக்கலாம்.  இசைவான புதுப்பொருள் கிட்டினால் அப்போது அமைப்போம். நம்மிடம் ஏராளமான விகுதிகள் உள்ளன; ஒரு கவலையும் இல்லை.

இதையறியால் படம் என்ற சொல்லைத் தமிழன்று என்று ஒரு அகரவரிசை உடையோன் கூறியுள்ளது நேயர்கள் அறிந்ததே. அது உளறல்.