புதன், 18 அக்டோபர், 2017

வெண்ணிக்குயத்தியார் வீரப்பெண்மணி - புலவர்.(பறந்தலை)



வெண்ணிக்குயத்தியார்.  

 இப்பெரும்புலவர், பெண்பாலார் ஆவார்.  மாமன்னன் கரிகாலனைப் பாடியுள்ளார் ஆதலின்  இவர் அவன் காலத்தவர். அவனிடம் தோற்றுவிட்டுப் புறப்புண் நாணி வடக்கிருந்த சேரனுக்கு இரங்கிப் பாடினார்.  போர்களையும் வெற்றிகளையும் அவர் அதுகாலை பெரிதுபடுத்தவில்லை.

கரிகாலன் சிறந்த சோழ மாமன்னன். மலையைப் பெயர்த்தெடுப்பான். கடலைத் தூர்ப்பான். வீசும்காற்றைக்கூட வேறுதிசைக்கு மாற்றிவிடுவான்! அவனிடத்துத் தோற்றோடியவர் பலர். தோற்றபின் உலகில் ஆளவும் வாழவும் நாணியோர் பலர்.  ஆனால் இவையெல்லாம் இலக்கியம்போற்றிய சில இன்னிசைப்புலவர்களுக்கு இலுப்பைப்பழமாக இருக்கலாம். ஆனால் போரால் உயிரிழந்தோரும் உடைமை இழந்தோரும் உற்றார் உறவினரை இழந்தோரும் பலராயிற்றே! 

 தோற்றவர்களைப் பாடவேண்டும். தோற்றவர்களும் கெட்டவர்களில்லை. வெறுமனே தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள். கரிகாலனிடம் அவர்கள் போய்த் தொல்லையேதும் செய்தார்களில்லை. இதைப் போற்றும் அமைதி நோக்கு வெண்ணிக்குயத்தியாருக்கிருந்தது.

வெண்ணியில்தான் போர் நடந்தது.  போர் நடக்குமிடத்துக்குப் பறந்தலை என்பர். தலை என்பது இடம் என்று பொருள்தரும் சொல். அதை எடுத்துவிட்டால் மிச்சமிருப்பது பறம் அல்லது பற.  பற என்பது எதிரியை அடித்தல் என்று பொருள்பட்டிருக்க வேண்டும். எப்படி?

பறந்தலை - போர்க்களம்.
பறை = பறத்தல்.
பறம்புதல் =  அடித்தல்.
பறிதல் -  முன் செல்லுதல்.
பறித்தல் -  அழித்தல்; கொய்தல்.
பறைத்தல் -  அழித்தல், தேய்த்தல், நீக்குதல்.
பறைதல் (தன்வினை)-   பறைத்தல் (பிறவினை).
பறைந்தன =  அழிந்தவை.

இச்சொற்களில் போரில் எதிரியை வென்று அழித்தல் என்ற பொருள் சிதறிக்கிடக்கக்காணலாம். இவற்றை ஒருசேர நோக்கினால் பற என்பது முன்சென்று போரிடுதல் என்ற பொருள்  உடைய சொல் என்பது அறியலாம்.  காலக்கழிவாலும்,  எல்லா இலக்கியங்களும்    நமக்குக் கிட்டிவிடவில்லை என்பதாலும் எல்லாப் பொருள்களையும் நேரடியாக அறியமுடியவில்லை . சிதறிக்கிடக்கும் பொருளைக் கொண்டு பற என்பது போரிடுதல் என்று அறியமுடிகின்றது.

போர் நடந்த வெண்ணியையே ஊராகக் கொண்ட இப்புலவர், இப்பறந்தலைக்கு அடுத்து வாழ்ந்தவர் என்பது நன்-கு தெரிகிறது.  இவ்வீரப் பெண்புலவரைப் போற்றுவோம். பறந்தலை -  பொருளறிந்து மகிழ்வோம். 

Beware of virus supplying unnecessary dots to words herein. Ignore dots as appropriate.


செவ்வாய், 17 அக்டோபர், 2017

கரிகால் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய து. புறப்புண் நாணுதல்.



பண்டைத் தமிழருக்குப் போருக்குப் போய் முதுகில் புண்படக் கூடாது,  முதுகுப் புண் என்றால் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர்விடவேண்டும் அதுவே அதற்குப் பரிகாரம்.  புறமுதுகிட்டு ஓடுகிறவர்களே  முதுகுப் புண்படுவர். என்று கருதப்பட்டது.  ஓடாமல் நின்று போரிட்டு முதுகில் காயுமடைந்தவருக்கு (தம் வீரத்தை மெய்ப்பிக்க ))வழியில்லை. அவருக்கு மரணவாசல் (சாக்கதவு) ஒன்றே வழிதிறந்து நிற்கும்.

அற்றைப் பெருமக்களின் பொதுவான கருத்து இவ்வாறிருக்க, இதற்கு மாறாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்லும் புலவருக்கு மிகுந்த திராணி இருக்கவேண்டும். அத்தகு நுண்ணிய கருத்துடைத் திண்ணிய புலவர்தாம் வெண்ணிக்குயத்தியார் என்னும் பெருந்தமிழ் மலை. போரில் இணையற்ற வெற்றி அடைந்து ஓய்ந்து நுகர்ந்துகொண்டிருந்த மாமன்னன் கரிகாலன்.  --அவன் முன்னே வெண்ணிக்குயத்தியார் சென்றார். “உன்னினும் தோற்ற சேரனே நல்லவன்; புகழுக்குரியோன்” என்று துணிவுடன் கூறினார்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே!
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.
புறம் பாடல் 66.

நளி  -  நடு.. 
இருமுந்நீர் =  பெருங்கடல்.
நாவாய் – கப்பல்.
வளிதொழில் ஆண்ட -  கடல்மேலும் ஆட்சி செலுத்திய.
உரவோன் – மேலோன்.
மருக -  மருகனே;  வழிவந்தோனே.
களியியல் – மதம்பிடித்த.
கரிகால் வளவ -  கரிகால வளவனே;
அமர் -  போர்.
கடந்த – வென்ற.
அன்றே -  அல்லனோ.
கலிகொள் – செழிப்புடைய. 
யாணர் – அழகுடையவர் 
( மலிந்த ); யாண் -  அழகு.



வெண்ணிப் பறந்தலை – வெண்ணி என்னும் போர்க்களம்.
புறப்புண் – முதுகுப் புண்.  விழுப்புண் அல்லாதது.

அமர் என்பது சமர் என்றும் திரிந்து வழங்கும்.

இப்பாடல் வாகைத்திணை. அரச்வாகைத் துறை.  வாகைத் திணைக்குரிய பூ வாகைப்பூ.  இத்திணையில் அரசனின் இயல்பு எடுத்துக்கூறிப் பாடுதலே அரசவாகைத்துறை.

.

திங்கள், 16 அக்டோபர், 2017

STAGNANT DIRTY WATER IN TN PUBLIC HELP REQD




அழுக்கிருந்த இடத்திலெல்லாம் தேங்கி நின்ற
அதில்கொசுவை வளர்த்துவந்த டெங்கிக் காய்ச்சல்!
கிழக்கினிலிந்  தியக்குழும்பின் காலம் தொட்டுக்
கெடுவின்றி இருந்தநீரிற் பிறந்த தாமோ?.....
வழக்கமுற  வந்துவிட்ட கொசுவின் நீரை
வாரி இறைத் தால் நாற்றம் என்ப தாலே
தொழிற்கென்று தோன்றிவிட்ட தோழன் கூட
தோண்டிவீசி  னால்மயங்கித் துவண்டு வீழ்வான்.

செய்தி விளக்கம்:

தமிழ் நாட்டுப் பள்ளம் படுகுழிகளில் தேங்கிக் 
கிடக்கும் நீரையெல்லாம் வெளியேற்றினாலே 
டெங்கியை ஒழிக்கமுடியும் என்ற முடிவிற்குத்
தமிழ் நாடு அரசு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதற்கு மக்களின் ஒத்துழைப்புத்
 தேவையாகிவிட்டது என்^கிறது.......
முதல்வர் கூறியதாக வந்த தாளிகைச் செய்தி.

இதிலிருந்து பிறந்த கவி இது.

இப்படிப் பல கவிகள் எழுதினாலும் 
ஒன்றிரண்டையே வெளியிட்டுள்ளோம்.  
இது வேறு நாட்டில் நடப்பது.
நமக்குள்ளது "கலாசாரத் " தொடர்பே.  
இவற்றைத் திறந்த உள்ளத்துடன் படித்து
 இன்புறவும். ஏற்கவியலாப் போது
எடுத்துவிடுகிறோம் -  தெரிவித்தால்.

அல்லது வெறும் செய்தியாகப் பார்க்கவும்.....

"உலகெங்கும்" என்று வரும்போது,  பல 
நாடுகளிலும் சிற்சில இடங்களில் இப்படி 
இருக்கலாம்.  சில நாடுகளில் இவைபோல்வன 
குறைவு. தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகமாக
இருக்கலாம்.  அல்லது பிற நாடுகளிலுள்ளவை 
நமக்கு எட்டாமலும் இருக்கலாம். மக்கள் குப்பை 
போடாமலும்  அழுக்கைப் பொது இடங்களில் 
வீசாமலும்  இருக்கவேண்டும்.  பள்ளம் 
படுகுழிகளை மூடிவிட, 
மக்கள் அரசுக்கு உதவவேண்டும்.

எல்லோரும் நோயின்றி வாழவேண்டும்.