இனிச் சாரணர் என்ற
சொல்லின் அமைப்பையும் பொருளையும் அறிந்து இன்புறுவோம்.
இது இரண்டு துண்டுச் சொற்களை இணைத்து எழுந்த சொல் ஆகும்.
எனினும் இது ஒன்றும் புதிது அன்று. சங்க காலம் தொட்டு வழங்கி வருவதாகும்.
சார் : இது சார்தல், சேர்ந்திருத்தல் என்ற பொருளுடையதாம்.
அணர்: இது அணவுதல் தொடர்பான
சொல்லினின்றும் தோன்றுவது.
அணவல்: அண+ அல் =
அணவல்; அணவு+ அல்= அணவல் எனினுமது.
இதன் பொருள் கிட்டுதல்,
பொருந்துதல், நெருங்குதல்.
அணத்தல் - தலையெடுத்தல்,
மேலெழுதல், ஒன்றுசேர்தல், பொருந்துதல்.
அணர் - தலையில் பொருந்தியிருப்பதாகிய மனிதன் அல்லது விலங்குகளின்
மேல்வாய்.( கீழ்வாய் அசையும், மேல்வாயுடன் சேரும், விரியும் தன்மையுடையது. ) மேல்வாய்
அசையாமல் இருப்பது. ஆகவே அணர் எனப்பெயர் பெற்றது.
அணவுதல் - அணத்தல்;
புணர்ச்சி.
அணாவுதல் - சேர்தல்.
இன்னும் உளவெனினும்
இவை போதுமானவை. இங்கு போந்த பொதுவான கருத்து: :
பொருந்தியிருத்தல்.
சில எழுத்தாளர், “பிராமணர்”
என்ற சொல்லை விளக்கினர். அவர்கள் பெரும்
+ அணர் = பெருமணர்> பிராமணர் என்று தெரிவித்துப் பொருள்கூறினர். பிரம்மத்தை அணவினோர்
என்று பொருள்கூறினவர்களும் உளர். இவ்விளக்கத்திலிருந்து
“அணர்” என்பதன் பொருளை அறிந்துமகிழலாம்.
ஆகவே பெருமானாகிய
இறைவனை அணவியவர்கள் என்று கோடலும் பொருத்தமாகிறது.
எனவே சார்+ அணர் எனின், சார்ந்து நின்று செயல்புரிவோர் என்பது பொருளெனல்
இப்போது புரிந்திருக்கும்.
சாரணர் என்பதன் பொருளுணர
இவை போதுமானவை.
நாகர்களை “ நக்க சாரணர்” என்றார் சீத்தலைச் சாத்தனார் ( சங்கப்
பெரும்புலவர்).
Scouts எனப்படுவோரையும் "சாரணர்" எனப்படுதல் உண்டு. இந்த ஆங்கிலச் சொல்லை இப்படி மொழிபெயர்ப்புச் செய்தோர் பாராட்டுக்குரியோர் ஆவர். சாரணர் பள்ளிகளையும் நிறுவனங்களையும் ஒருவாறு சார்ந்து இயங்குவோர் ஆவர்.