வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ரத்து : விவாகரத்து (maணவிலக்கு)



ரத்து என்ற எங்ஙனம்  புனைவுண்டது என்பதை முன்னர் விளக்கியுள்ளேன. அந்த விளக்கக் குறிப்பினைத் தேடிக்கொண்டிருப்பதைவிட, தலையிலிருந்து தரைப்பலகைக்கு  floorboard  நேரடியாகச் சிந்தனையை  இறக்கிவிடலாம்.
இறுதல் =  முடிதல்.
இறு + து(விகுதி) = இறு + அத்து (சாரியை)  + து,
=  இறு + அத்(து)  + து  = இறத்து.    முடிவு என்று பொருள்.

இச்சொல் இறு என்பதில் தோன்றியது என்பதற்கு இது போதுமானது. இங்கு அத்து என்ற சாரியை வந்ததா அல்லது   புணர்க்குங்கால் ஓர் அகரம் தோன்றிற்றா என்ற வழக்காடுதல் தேவையில்லை.

அஃது  இலக்கணமே குறிக்கோளாய் நிற்பார் மேற்கொள்க.

இப்போது மன்நிறைவின்பொருட்டு, இது போலும் து-விகுதி பெற்றமைந்த
வேறு சில சொற்களைக் காண்போம்.

வரு + து  =  வரத்து   (போக்குவரத்து). இங்கு முதனிலை ஈற்றில் நின்ற உகர உயிர் அகரமாகி புணர்ச்சியில் ஒரு தகர ஒற்றுப் பெற்று ( த் )  சொல் அமைந்த்து.

விழு > விழுது:    இங்கு விகுதி புணர, அப்புணர்ச்சியில் ஒற்றுக்கள் எவையும்
தோன்றிற்றில.

கை + து =  கைது   ( இங்கும் எழுத்தெதுவும் தோன்றவில்லை ).

குரு + து =  குருத்து.  (  த்  தோன்றியது ).
இங்கு குரு என்பது பகுதி.  இதனை:க்   குருகு, குருந்தம்,  குருப்பு, குரும்பை, குருளை,  குருள்தல் முதலியவற்றால் அறியலாம்.  குரு என்பதை வினையாகக் கண்டிலம்.  ஆதலின் அதை ஓர் உரிச்சொல் என்று கொள்ளுதல் வேண்டும்.

இதுகாறுங் கூறியவாற்றால்,  இறு > இறத்து போலும்  வடிவங் கொள்ளும் சொற்கள் உள என்பது பெறப்படும்.

இறத்து என்பது பின் அடைந்த திரிபுகளாவன:

இறத்து >  இரத்து  > ரத்து.(headless)

இறுதல் என்பது முடிதல் என்று பொருள்படும் ஆதலின், ரத்து என்பதும்
அப்பொருளையே அடைந்தது.

இதிலிருந்து  விவாகரத்து   (  மணவிலக்கு ) முதலிய கூட்டுச் சொற்கள் தோன்றின.

பிற்குறிப்பு:

விவாகம் என்பது முன்னரே விளக்கப்பட்ட சொல்: அதைச் சுருக்கமாக இவண் குறிப்பிடுவோம்.  வி = விழுமிய;  வா=  வாழ்க்கைக்கு ;  (ஆகும்) > ஆகம்: ஆகும் வழி.  ஆகு+ அம் = ஆகம்.   விவாகமானது இல்லற வாழ்வில் ஆடவர் பெண்டிரை இருத்தி விழுமிய வாழ்வினை ஆக்கும் ஓர் முக்கிய நிகழ்ச்சி ஆகும்,

விவா என்ற இலத்தீனும் தமிழிலிருந்து பெறப்பட்டது.

 


வியாழன், 7 செப்டம்பர், 2017

மலேசியா சாபா : வெஸ்ட்லேக் லிம்பாங்கில் பிடிபட்ட பெருமுதலை

http://www.thestar.com.my/news/nation/2017/09/03/giant-crocodile-caught-in-limbang/~/media/4ad0eb62ad554bdabb196471bfd242aa.ashx

http://www.thestar.com.my/news/nation/2017/09/03/giant-crocodile-caught-in-limbang/~/media/4ad0eb62ad554bdabb196471bfd242aa.ashx

இந்தப்  பிடிபட்ட பெருமுதலையின் படத்தை  மலேசிய ஸ்டார் தாளிகைப் பக்கத்தில் கண்டுகளிக்க, மேற்கண்ட தலமுகவரியைச் சொடுக்கவும்.

இதைப்பற்றி மகிழ்ச்சியாக யாமெழுதிய சில வரிகள் நீங்கள் பாடிக்களிப்பதற்கு:



நாடிவந்    தொருமுதலை ---  அந்த
நகரத்துக்  கடையினுள் புகுந்ததுவே;
ஓடிவந்  திட்டவர்க்கு  -- கிடைத்த
ஒருபெரும் களிப்புறு திருநாளதே.

ஆற்றிலும் கடலிலுமே  --- மனிதரை
அண்டா திருந்த வாழ்க்கையிலே,
ஆற்றவும் சலிப்பானதே --- அதை
மாற்றி அமைத்திட நகர்சென்றதே.

பத்தடியின் நீண்டது  --- மிகப்
பரியதென் றனைவரும் பார்த்தனராம்;
சுற்றித் தளைத்தனர்காண் --- அதைச்
சுருட்டி எடுத்தனர் வனம்செலவே.

மனிதநே யம்மிக்கதால் --- இந்த
மாநகர் மக்களோ டிருக்கவந்தேன்;  
எனக்கும் விடிவில்லையோ -- முதலை
இப்படிக் கலக்க  முடன்சென்றதே. 

இது முதல்போட ஒப்பாத முதலை.  அதனால் கடைப்பங்காளிகள்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.




புதன், 6 செப்டம்பர், 2017

சங்கம் தமிழ்ச் சொல்லா?



தங்கு-வும் சங்கு-வும்.

இதன் பிறப்பை அறியவிரும்பினால், மிக்க எளிதாகவே அறிந்துகொள்ளலாம். தங்கு  என்பதில் இருக்கும் முதல்   “தம்” என்பதாகும்.  தன் என்பதோ தம் என்று திரிந்து பன்மை காட்டியது. தொடக்கத்தில் பன்மை யாக அமைந்தது பின் பணிவுப் பன்மையாக ( மரியாதை ) மாறியமைந்தது. எவ்வகைப் பன்மையாகினும்  பன்மையே யாகும்.

ஒன்றுடன் இன்னொன்று  சேர்ந்தாலே பன்மை. இதற்குத் “தன்”னுடன் இன்னொரு “தன்”  இணைந்து தம் ஆகவேண்டும்.  மொழிவரலாற்றின் பிற்பகுதி நிகழ்வுகளின் படி "தம்" மரியாதைப் பன்மையாக உருமாறித் தன் முழுப்பன்மைத்தன்மையை இழந்ததனால், "~கள்" விகுதி இணைக்கப்பட்டது.  தங்கள் ஆயிற்று.  ~கள் விகுதி உயர்திணையில் வந்திணைவது பண்டை வழக்கன்று.
தான் (தன் ) ஒரு வீட்டிலிருந்தால் அவ்வீட்டில் இன்னொரு தான் (தன்) வந்திணைந்து,  தம் ஆகிய நிலையிலே,  இவ்வசைவு குறிக்க “கு”  இணைக்கப்பட்டது.  கு என்பது நகர்வும் அடைவும் காட்டும் சொல்.  “சென்னைக்கு”   “மதுரைக்கு”  “பூண்டிக்கு” என்று,  பேச்சு நிகழுமிடத்தினின்று இவ்விடங்களுக்குக் செல்லுதலையும் சென்றடைதலையும் “கு” என்ற சிறு சொல் குறிக்கிறது. இப்பொருளிலேதான், தன்னுடன் இன்னொரு தன் இணையத் தம் ஆகி அவ் வியங்குதல் குறிக்க கு இணைந்து “ தங்கு”  என்ற சொல் அமைந்தது.

தகரத்தில் தொடங்கியது  சகரமாகத் திரியும். இதைப் பல இடுகைகளில் தெரிவித்துள்ளோம்.   தசை > சதை என்பது ஓர் எளிய உதாரணம்.1    சனி கிரகத்துக்கு தனி என்ற சொல்லிலிருந்து பெயர் அமைந்தது.   தனி> சனி.  சனி என்பது பிடித்தால் விடாத தனிச்சிறப்புடையது என்பர் கணியர் (சோதிடர்).  கருப்பு நிறமாதலின் காரி என்பதும் பண்டைப் பெயராகும்.    ஆக,  தனி > சனி என்பதறிக.

இப்பெற்றியினாலே  தங்கு என்பது சங்கு என்று மாறியது.   சங்கு என்பது ஒரு கூடு.  அதில் ஓர் உயிர் கூடி வாழ்கின்றது.   ஆகவே,   தம் > சம் > சங்கு ஆனாது. புலவர் கூடி அரசனுடன் வைகிய இடம் சங்கம்  ஆயிற்று.. சின்னாட்களாவது தங்கி அரசுவிருந்துண்டு பரிசில் பெற்றுச் செல்லும் கூட்டம்  சங்கம்.  புலவர் பலர்  அங்கேயே தங்கிச் செல்ல,  சிலர் நிரந்தரமாகத் தங்கினர்.    மாங்குடி மருதனார் (சங்கப்புலவர்)  போல. உலகமொடு நிலைஇய   பலர்புகழ் சிறப்பின்  புலவர்கள் அவர்களாவர்.
இற்றை நிலையில் "சங்கம்" என்ற்பாலது  தேசிய சேவை செய்துவரும் சொல்.
இது நம் பழம்பெருமையின்  இன்னும் மாறாத அறிகுறியாகும்.

வேறு சொற்களுடன் அடுத்துச் சந்திப்போம்.

----------------------------------------
1. (  உது + ஆர் + அணம்..  உது = முன் நிற்பது;  ஆர்தல் = நிறைதல் ; அணம் = ஓர் தொழிற்பெயர் விகுதி ).  

கள்ள மென்பொருள் நுழைத்த பிழைகள் திருத்தப்பட்டன..
அவை மீண்டும் வந்து இடுகையில் மாற்றங்களை விளைவிக்கலாம்.
இன்று 9.5.2018 

சில மாற்றங்கள் கள்ள மென்பொருளால் உண்டாக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியமைத்துள்ளோம். இன்று 7.9.2018.   இன்று எம் உலாவி ஓடவில்லை யாதலால் அது பழுதுபார்க்கப்பட்டு "விண்டோஸ்" அமைப்பும் பின்மைத்திருத்தம்  restore  செய்யப்பட்டுள்ளது.