வியாதி எங்கின்ற
சொல்லை ஆய்வு செய்வோம்.
விர் > விரி.
விர் > விய்.
விர் என்ற அடிச்சொல்லிலிருந்து
விரி என்ற வினைச்சொல் பிறந்தது. இதை அறிந்துகொள்வதற்கு கடினப்படுதல் தேவையில்லை. எளிதாகவே
அறிந்துகொள்ளலாம்.
விர் என்ற அடிச்சொல்லிலிருந்தே விரல் என்ற சொல்லும் பிறந்தது. நீட்டவும் சுருக்கவும் ஆற்றல் பெற்ற விரல் என்ற
சொல், விர் என்பதனின்று தோன்றியிருப்பது, பொருத்தமே. மற்றும் விரி விரிதல் என்பனவோடு அதற்குள்ள தொடர்பும்
தெற்றெனத் தெரிகிறது. பெரும்பாலும் இடுகுறிப் பெயர் என்று இலக்கணியர் எண்ணிய சொல்லுக்கு
இப்போது ஒரு வெளிச்சம் உண்டாகிறது.
ஆசை என்பது மனத்தில்
தோன்றி ஒரு பொருள்மேலோ ஆள்மேலோ விரிகிறது. இது மனத்துக்கண் தோன்றி விரியும் எண்ணம்
ஆகும். எனவே விர் என்ற அடியிலிருந்தே அதற்குச்
சொல் உண்டாகின்றது. விர்> (விரு) > விரும்பு
என்று சொல் அமைகிறது. தாமும் தம் பெண்டு பிள்ளைகள்
மட்டுமில்லாமல் பிறருக்கும் உணவளிப்பது ஒரு மன விரிவும் செயல்பாட்டு விரிவுமாகும்.
இதற்கும் விர் என்ற அடியிலிருந்தே சொல் அமைந்தது.
விர்> விரு > விருந்து. இதில் து என்பது விகுதி. பெரும்பாலும் வீட்டிற்குப்
புதியவர்களே உண்ண வந்தனர். ஆதலின் விருந்து
என்பது புதுமை என்னும் கருத்தையும் உள்ளடக்கி விரிந்தது. பிறந்த குழந்தை புதுவரவு ஆதலின்
அதற்கு விருந்து என்ற சொல் பயன்பட்டது. “விருந்து வரும் பத்தா மாசத்தில்” என்ற மலையாளப்
பாட்டு கேட்டதுண்டோ? புது என்பதிலிருந்தே “புதல்வர்.
புதல்வி” என்றெல்லாம் சொற்கள் வந்தன. “நியூ
போர்ன்” என்ற ஆங்கில வழக்கையும் கவனிக்க.
இதனை விரிக்காமல்,
இடுகையைச் சுருக்குவோம்.
பின் விர் என்பதிலிருந்து
விய் என்பது விரிவு குறித்துத் தோன்றிற்று.
விர்> விய்.
இதிலிருந்து தோன்றிய
சொல்லே “வியன்” என்னும் சொல். “வியனுலகு” = விரிந்த உலகு. அடுத்து, வியாபாரம். இதில்
விய+பாரம் என்று இருசொற்கள் உள்ளன. பல இடங்களுக்கும்
சென்று விற்றலை வியாபாரம் என்பது குறிக்கிறது. பாரம் என்ற சொல்லும் பொருள்களைப் பரக்கக்
கொண்டுசெல்லுதலையே குறிக்கிறது. பர> பார்> பாரம்.அதாவது விரித்து வழங்கல். .பொருள்கள் பரப்பி வைக்கப்படுதல் பாரம் என்றே சொல்லப்படும்.
பரக்க வைக்கப்படுவன கனம் உடையனவாய் இருக்கும் ஆதலின், பாரம் என்பது “கனம்” “பளு” என்றும்
பொருள்படும். வியாதி என்பது பரவும் நோய். பிற்காலத்தில்
தொற்றிப் பரவாத நோய்களுக்கும் அது பொருள் விரிந்தது.
விற்றல் என்பதற்கு வில் என்பதே அடியாகக் கூறப்படினும், பேச்சு வழக்கில் "விய்" என்றே சொல்வர்.. விய் > வியா தொடர்பினை அறிக.
இவைபற்றிப் பின்பொரு
நாள் விரித்து விளக்குவோம்.