செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

நமச்சிவாய: எம் தாயுமானவன்.



சிவாய நம,  நமசிவாய என்பன சிவ வழிபாட்டில் முன்மை பெறு தொடர்கள்.  நம சிவாய என்பதை திருப்பிப் படித்தால் (பின் முன்னாக ), அது சிவாயநம என்றாகும்.

இவற்றுக்குப் பண்டிதன்மார் பலவாறு விளக்கம் கூறுவர்.  இவற்றுள் சில வழிபாட்டு முறைகள் பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையில் அறிந்து கூறப்பட்டவை. இவற்றை விளக்குவது அவர்களின் வேலையாதலின் அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

சிவவழிபாடு இப்போது பலவிடத்தும் பரவியுள்ளது.  ஒவ்வொரு தலத்திலும் நிலையிலும் ஒவ்வொரு பொருள் போதருவது இயல்பே ஆகும்.

நாம்  இப்போது நமசிவாய என்பதன் பொருளைச் சொல்லாய்வின் மூலம் தொடக்கநிலையில் நின்று ஆய்வு செய்யலாம்.

தொடக்கத்தில் சிவம் என்பது செம்மை, செவ்வொளி, தீ என்று பொருள்பட்டது.  சிவப்பு நெருப்பின் நிறம்.   சிவம் தீயுமாகும்  இது அக்கினி எனவும் படும்.

வரலாற்றில் வழிபாட்டு முறையில் வளர்ச்சி. ஏற்பட்டபின் சிவமே அம்மையும் அப்பனும் என்பது அறியப்பட்டது. அம்மையப்பன் என்ற குறியீடும் உண்டாயிற்று.
தாயும் அவனே தந்தையும் அவனே என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தாயுமானவன் என்ற பெயர் ஏற்படவும் காரணமானது.

இதை எப்படி நமசிவாய என்பதில் காண்பது.  அறிவோம்.
நம் +  அச்சி +  ஆயவன் =  நம் +  அச்சி + ஆயன். பின் வகர உடம்படு மெய் இணைந்து  நம் அச்சி வ் ஆயன் என்று வந்தது.

அச்சி என்பது அச்சன் என்பதன் பெண்பால் வடிவம்.  அச்சி என்றால் தாய்.   அச்சன் > அச்சி. மூத்தச்சி என்றால் மூத்த அம்மா.

அப்பன் >  அத்தன் > அச்சன் என்ற சொற்போலிகளை அறிக.  

இப்பெண்பால் வடிவம் ஆண்பாலிலும் வரும்.  உதாரணம்: அப்பச்சி.  (அப்புச்சி). ஒருகாலத்தில் பால் வேறுபாடின்றி இது வழங்கிற்று போலும்.

எனவே நமச்சிவாயன் என்பது "நம் அச்சி ஆயன்" என, நம்
தாயுமானவன் என்றும் பொருள்தரும் என்பதுணர்க. ஆயவன் என்பது இங்கு ஆயன் என்று குறைந்தது.
அச்சி என்பது முதற்குறைந்து "-சி" ஆகி, பறைச்சி, கள்ளச்சி, வாணிச்சி, செட்டிச்சி என்றெல்லாம் வருகையில், சி என்றபாலது ஒரு பெண்பால் விகுதியாகத் தேய்ந்துவிட்டது. சி - தி போலிகள். வண்ணாத்தி என்பது
காண்க. (சீனத்தி > சீனச்சி:   அத்தி > அச்சி என்பதும் ஆகும்).

எனவே, நமச்சிவாயன், நம் தாயுமானவன். இது பின் நமசிவாயன், நமசிவாய எனப் பொலிவு பெற்றது.

குறிப்பு:  விநாயகன் என்பதற்குப் பல பொருள் உரைக்கப்படினும்,  வினை+ ஆய்+ அகன் = வினாயகன் என்பது பொருத்தமாகத் தோன்றுவது ஆகும். வினைகளை ஆய்ந்து களைபவன் என்பது நேரடிப் பொருளாகிறது.
வி+ நாயகன் எனின், விழுமிய நாயகன் என்று பொருள்பட்டு, வினை தீர்ப்போன் என்ற பொருள்வரவில்லை என்பதுணர்க. அதுபோலவே
நமச்சிவாயன் என்பதற்கும் இங்கு உரைக்கப்பட்டவை
உண்மையோடுபட்டனவாகும்.
அகம் > அகன்; அகத்தினன்.
அகல் > அகன். அகற்றுவோன் என்பது பொருளாகத் தரப்படலாம். மதிவலம் > மதிவலன் என்பதுபோல.
(மதிவல்லவன் என்பது பொருளாக.)

 
;





சிறுவர் சிறுமியர் செந்தமிழ் கற்க...........



சிறுவர் சிறுமியர்  செந்தமிழ்  கற்க
எளிய முறையைக்  கைக்கொள் வதுவே
ஆர்வம் கெடாமல் அமைய உதவும்;
வேர்வை அடைந்து மிரள்வது நீங்கும்.
இருபதில்  ஆறு  கூட்டிய ஆங்கிலம்
உலகினில் எத்துணை எண்மை உடையது?
தமிழிலும் அத்துணை எண்மை உண்டே!
உயிர்மெய் விலக்கி விரல்விட்டுக் கூட்டினால்
அயர்வும் அச்சமும் தோன்றுமோ?
முப்பதின் மிக்கவை எப்படி?  இலவே!!

(இருபத்தாறு, முப்பது என்பவை எழுத்துக்களின்
மொத்த எண்ணிக்கை.) 
உயிர்மெய் என்பவை கலவை எழுத்துக்கள்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தமிழ்நாட்டுக்கு உச்சப் பாதுகாப்பு.... எப்படி?




அயலோரும்  அங்குவந்து  தங்கிடுவர் என்ற
அச்சத்திற்கு என்செய்வோம் நம்தமிழர் நாட்டில்?
புயலூரும்  முகில்மழையோ பகலோன்மற் றுள்ள
புதைமணலும் ஆறுகளும் தரும்பாது காப்பு
நயமாரும் பொருளல்ல நாடிவந்தார் தம்மை
நன்றாகக் கடிப்பதற்குக் கொசுப்படைகள் உண்டே!
இயவாரும்  இவைகொண்டு பயங்காட்டு போதும்
எதிர்நின்ற எப்படையும் ஓடிவிடும் காணே!

இயவு =  ஊர், காடு, வழி.