வெள்ளி, 9 ஜூன், 2017

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம் என்ற சொல்லை ஐந்தாண்டுகட்குமுன் இவண் பதித்திருந்தேன்.  அதற்கான விளக்கத்தில் பாதிக்குமேல் அழித்துவிட்டனர்.

போகட்டும்,  இப்போது அதனைச் சுருக்கமாகப் பதிவுறுத்துவோம்.

இதன் பழ வடிவம்: சமை தருப்பம் என்பது,

சமைந்த தருணம், அமைந்த வேளை என்றும் பொருள் கூறலாம்.

தருணம் என்பதும் தருப்பம் என்பதும் ஒன்றுதான், இவை  தருதல் என்பதை அடிப்படையாகக் கொண்டவை .

சூழ்நிலையோ இறைவனோ தந்த நேரம் அல்லது வேளையே தருணம்.

அதுவே தருப்பமும்  ஆகும்.

தரு+உண்+அம் = தருணம். உண் துணைவினை.
ஓர் உகரம் கெட்டது,

தரு+பு+அம் = தருப்பம்.

ஓர் "கிப்டட்"டைம்    gifted time என்க.

தருப்பம் என்பது வழக்கிறந்தது.

சமை+ தருப்பம் = சம்தருப்பம் = சந்தர்ப்பம் என்றானது.

இச்சொல்லை அணுகி நோக்க, அதன் பழம்பிறப்பு தெளிவாகிறது.

நல்ல அழகினை மறைத்தல் கைகூடுவதோ?

If not clear,please  register your comments for more explanation.

வியாழன், 8 ஜூன், 2017

மறையும் ஒலிகள் ‍ எழுத்துக்கள் --- வாத்து

சொல்லமைப்பில், சொல்லின் பகுதியில் உள்ள, அல்லது அமைத்தபின்
அச்சொல்லில் வருகின்ற ய‌கர ஒற்றுக்கள் இயற்கையாகவே மறைந்துவிடுகின்றன. இத்தகு மறைவு மக்கள் பேச்சில் ஏற்பட்டவை.
பெரும்பாலும்  மக்கள் நாவே , அந் நாவின் முயற்சிக் குறுக்கமே இதற்குக் காரணம். நன்கு சிந்திப்போமானால், ய‌கர ஒற்றுக்கள் இருந்து
அவற்றால் ஆகப்போவதும் ஏதுமில்லை. எனவே மக்களே சிறந்த
ஆசிரியர்கள் ஆகின்றனர். புலவர்கள் அவர்களிடமிருந்து இந்தகைய‌
சிக்கனத்தைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.


வாய் > வாய்+து+ அம் = வாய்தம் > வாதம்.: இங்கு ய் ஒழிந்தது.
 வாயினால் ஏற்படுவதே வாதம். அதிகம் பேசுவோனை "பெரிய‌
வாய்" என்பது வழக்கு. வாயாடி என்ற சொல்லும் இக்கருத்தையே
வலியுறுத்துவது. எடுத்துக்காட்டுகள் பல உள.

வாய்+தி =  வாய்த்தி > வாத்தி>  வாத்தியார் ( மரியாதைப் பன்மை).
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்று பொருள். மொழிகளில்
எழுத்துக்கள் ஏற்படுமுன், வாயினாலே மொழியறிவு புகட்டப்பட்டது.

உப+ அத்தியாயி = உபாத்தியாயி என்பது வேறுசொல். இதை ஏன் வாத்தியோடு போட்டுக் குழப்பவேண்டும்?

வாய் + து = வாய்த்து > வாத்து.  வாயினால் குவாக் குவாக் என்று
கத்திக்கொண்டிருக்கும்---- சில வீடுகளில் வளர்க்கப்படும் பறவை. காட்டு
வாத்துகளுமுள.

சாய்த்தல்:  சாய்+து+இ+அம் = சாய்த்தியம் = சாத்தியம்.
இது மரம் சாய்த்தல் திறமுடையார் கண்ட வெற்றியினின்று விளைந்த‌
சொல்லாகும்.  து, இ, அம் என்பன விகுதிகள். "சாய்த்துவிட்டீரோ" என்பான் தமிழன்.  அப்படியென்றால் வெல்ல முடிந்ததோ என்று
வினாவுவதாகும்.

சாய்+தி =  சாய்தி > சாதி > சாதித்தல்.
சாய்+து+அன்+ஐ = சாய்தனை > சாதனை. சாய் தவிரப் பிற விகுதிகளாம்.

வேய்+து+ அம் =  வேய்தம் = வேதம். (வேயப்பட்டது). யகர ஒற்று
மறைந்தது.


வாய்ந்தி  வாந்தி

வாய்+இன் +தி :  வாய்ந்தி >  வாயின் வழித் திரும்புதல்,  அதாவது
தின்ற உணவு.  இன் என்பதில் இ தொலையும். இன் என்பதில் ஒற்று
மட்டும் நிற்கும்.  தி:  விகுதியும் திரும்புதல் குறிப்பும் ஆகும்.
திறமையாக அமைக்கப்பட்ட சொல். தெரியாதான் இதைத் தமிழன்று
என்பான். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத,பிற்காலப் புனைவு.

பேச்சுத் தமிழ்த் திரிபுகள் மட்டும் உலகில் பல மொழிகளைப் படைக்கப்
போதுமானவை. இற்றை ஆய்வாளர்கள் இதனை முழுமையாய் இன்னும்
உணரவில்லை என்பதே உண்மை.

வேகமும் தீவிரமும்

உத்வேகம் என்ற சொல்லைப் பாருங்கள்; .

இதில் வேகம் என்பது தமிழ். உ என்பது சுட்டடி மூலச்சொல். உது: உந்து.   முன் செல்லும் வேகம்,  அதை உலகுக்கு அளித்ததும் தமிழே.

எதுவும் வெந்து சாம்பலாவதால் விரைவில் அழிந்துவிடும், எனவே
வேகுவித்தல் விரைவு குறித்தது. வேகு + அம் =  வேகம் ஆயிற்று.

நாளடைவில் இச்சொல் வேவிப்பதனால் மட்டுமின்றி எவ்வழியில் விரைவு நேரினும் அதைக் குறிக்கும் சொல்லாய் மாறியது.

தீயே விரைவுக்கு வழி என்பதைத் தீவிரம் என்ற சொல்லும் காட்ட‌
வல்லது.  இதன் முன் நிற்கும் சொல் தீ.  எந்த வாதமாக இருப்பினும்
பைய மெள்ள அணுகாமல் சுட்டுப் பொசுக்கும் வேகத்தில் செல்வதே
தீவிரம் ஆகிறது.விர் > விரை;  விர் >  விரம், விர்ரென்று போகிறான்
என்ற வருணனை விர் : விரைவு குறிப்பதே, விரைவு என்பதென்ன>
ஒரு மணிக்கூறினுள் முடிக்கத்தக்கதை ஒரு நிமிடத்தில் முடித்தால்
அதுவே விரைவுக்கு உதாரணம்,  எல்லா விரைவுகளும் காலச்சுருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை,

ஆங்கிலத்தில் உள்ள எக்ஸ்டீரிமிஸம் என்ற சொல் நுனிக்குச் செல்லுதல் என்று பொருள்படுவது, ஒற்றை ப் பிறனுக்குத் தெளிவுறுத்துவதில் முழு இட அளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆனால் மற்ற இடங்களினூடு செல்லாமல் நுனிக்குச்
சென்றுவிடுகின்றனர் அல்லது இறுதி நிலைக்கு ஏகிவிடுகின்றனர்
என்பது இதன் விளக்கம்,

எல்லாத் தீவிரவாதிகளும் எடுத்துக்கொண்டதை விளக்க ஒன்று காலத்தைச் சுருக்கிவிடுகிறான்; அல்லது இடத்தைச் சுருக்கிவிடுகிறான். அவன் சொல்வது சரியென்று ஏற்கும் வரை அவன் காத்திருப்பதில்லை.. அவனுக்கு அவன் கொள்கை உடனே ஏற்கப்பட‌
வேண்டும்.  இதையே இடச்சுருக்கமும் காலச்சுருக்கமும் காட்டும்
இச்சொற்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வேக‌ம் மற்றும் தீவிரம் என்ர சொற்ள் விளக்கப்பட்டன,