வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சிங்கைநகராம் இழைப்பதெலாம் வென்றி

அடுக்குமாடி வீட்டினிலே  சிங்கைநகர் மேவி
அமைதியாக வீற்றிருந்தேம் அங்குபல குப்பை
எடுக்கும்வேலை ஆற்றுகிற பளுவுந்து  வந்தே
ஏற்றபடி  அழுக்கவற்றை ஏற்றியகன் றார்கள்
நடுப்பகலோ காலையதோ  மாலயதோ என்று
நாடுவதும் இல்லையது தூய்மையொன்று நோக்கம்!
விடுப்பினிலே வேலையரும் விலகிநிற்பதுண்டோ ?
வினைசெயலே தலைக்கடனே வேறுளதோ   வியப்பேம்

உலகினிலே தூய்மையதாம் உற்றஒரு   கடனாய்
உழைப்பதுசிங் கைநகராம் இழைப்பதெலாம் வென்றி.

தூய்மை வாழ்க

குறிப்புகள்:

இருந்தேம்  ( இருந்தோம்  வியந்தோம்  :  ~ஓம் என்பதினும்  ~ஏம்  என்று  முடிவது  பொருத்தம் )

பளு வுந்து  :  லாரி .

வென்றி =  வெற்றி  
இச்சொல் வென்றி என்றும் வரும்.

 

வியாழன், 20 ஏப்ரல், 2017

பன்னீரா ? எடப்பாடியா?

உயரப் பறந்தது தேன்சிட்டு;
உயர்ந்து சென்றது வான்முட்ட!
அயர்ந்தன மற்றப் பறவைகளே.
அரசனும் ஆனேன் நானென்றது.

தமிழகத் தரசோ யாரென்பதை
தாமிகப் பறந்து கூவுமவர்
அமையும் பன்னீர் தெளிப்பவரோ?
அவர்முன் அமர்ந்த பாடியரோ?

இன்னும் சின்னாள் பொறுத்திருந்தால்
எதற்கும் விடையும் கிடைத்துவிடும்.
மன்னர்  இவரென் றறிந்தபடி
மாலை இலைநீர் அருந்திடுவீர்.

இலைநீர் ‍  : கொழுந்து இலைநீர், (தேயிலை நீர்)
















 

அக அத்தி அகத்தியர்

அத்தி மரம்தான் பெரும்பாலும் பாம்புகள் முட்டையிடும் இடமென்று
பாம்புபற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றித் தெரிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.

அகத்தியரின் வீட்டுக்கருகிலே ஓர் அத்திமரம் இருந்திருந்ததென்பாரும்
உண்டு. இதற்குத் தனிப்பட்ட ஆதாரம் ஏதுமில்லை.  அகத்தியர் என்ற‌
சொல்லை அடிப்படையாக வைத்தே இது சொல்லப்படுகிறது.

அகத்தியர் உண்மையில் "அக அத்தியர்" என்றனர் இவர்கள். அவர்
வீட்டிற்கருகிலே ஓர் அத்திமரமாம்.

மக்கள் அதை அவ்வீட்டுக்குரிய அத்தி என்ற பொருளில், அக அத்தி
என்றனர்.  அவ்வீட்டில் வாழ்ந்த குள்ளமுனி, அகத்தியர் எனப்பட்டார்.

எதுவும் இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளின் முன் நடந்ததை
எப்படி அறிவது?  நேற்று நடந்ததற்கே ஆதாரம் கிடைக்காமல்
மனிதர்கள் திண்டாடுகிறார்கள்!