திங்கள், 10 ஏப்ரல், 2017

சேர்மி நேர்மி சோர்+தன்+ஐ


சேர்+ ம் + இ = சேர்மி என்பது சேமி, சேமித்தல் என்று வினையாகும்.
ஒரு புதிய சொல்லை உருவாக்கிய பின், இடையில் நின்று சொல்லை
நீட்டமாக்கிக் கொண்டிருக்கும் ரகர ஒற்றை நீக்கிவிடுதலென்பது ஓர்
இயல்பான திரிப்பு முறையாகும். ரகர ஒற்று நின்று ஆகப்போவது
ஒன்றுமில்லை; சேர் என்பதே பகுதி அல்லது முதனிலை என்பதை
விளக்க உதவலாம். சொல் எப்படி உருவாயிற்று என்பதைப் பேசுவோன்
அறிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தறிவிப்பதே பேசுதலின் தலையாய நோக்கு ஆகும்.

வழக்குக்கும் வாய்ப்புக்கும் மலாய், ஆங்கிலம் என்பவை எப்போதும்
பேசுவோனிடத்துத் தயார் நிலையில் உள்ளபடியால், பேசுவோனிடம்
அதிக முயற்சியையும் கருத்துத் தடைகளையும் வேண்டும் சொற்கள்
நளடைவில் நகர்ந்துபோய்விடும். இதனாலே, திரிபுகளுக்கு இதுகாலை
ஒரு தேவை உண்டென்றும் கூறலாம். பேசுவோனிடம் நெருக்கடி கொடுத்து மொழியை வளர்த்துவிடமுடியாது. ஊக்குவித்தல் என்பது
வேறு. பல திரிபுகள், சொற்களை எளிதாக்குபவை.

சேமித்தல் என்பதுபோல் அமைந்ததே நேர்மித்தல் > நேமித்தல் என்பதுமாகும். நேராக அழைத்து ஒருவனை ஒரு வேலையில்
வேலையிற் பணித்தல் என்பது ஆதி வழக்கமானாலும் இப்போது
பணிப்போலை மூலம் நேமித்தல் பெருவழக்கு ஆகும். இதுபற்றிய‌
எம் பழைய இடுகைகள் அழிந்தன.

சோதனை என்பதும் ஒரு சிற்றூர் வழக்கு. சோர்(தல்) என்பதினின்று
தோன்றியது இதுவாகும். ஒரு சோதனையானது, தன்னைச் சோர்வடையச் செய்துவிடும்.

சோர்+தன்+ஐ > சோ+தன்+ஐ = சோதனை.
அல்லது:

சோர் > சோ.
சோ+ தன் + ஐ = சோதனை.

தன் என்பது "தன்" என்ற முழுச்சொல்லாகவிருந்தாலும், து+அன் என்பதன் திரிதலாக இருந்தாலும், விளைவில் மாற்றம் இல்லை.

தன்  -  இடை நிலை;  ஐ  : விகுதி.






ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்.  (சிங்கப்பூர் 6.4.2017)

இக்காலத்தில் ஒரு நல்ல வயதை எட்டுமுன்னரே மறைந்துவிடுவோர்
பலராவர். மேலும், நோய்களின் எண்ணிக்கையும் மிகுந்தள்ளது. இந்த நிலையில், பழங்கால முறைப்படிச் சத்துணவை உண்டு  உடலை நன்கு நலம் பேணி, நீண்ட நாள் வாழ்ந்துள்ளார் பூரணவடிவு அம்மையார்.

இவருக்கு ஏழு பிள்ளைகள். ஆண்கள் ஐவர்; பெண்கள் இருவர் ஆவர்.

இட்டிலி, வடை, சிலவகை அப்பங்கள், உளுந்துக் கஞ்சி என்று
செய்து உண்பதுடன் பிறருக்கும் கொடுப்பவர்.  அன்பு  கெழுமிய உள்ளம் படைத்தவர் .

இவர் உடற்பயிற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும்
சமையல் வேலைதான். இறுதி நாட்களில், பணிப்பெண் உதவியை
ஏற்றுக்கொண்டார்.

பின்னாட்களில் இனிப்பு நீர் நோய் ஏற்பட்டு, கட்டுக்குள் இருந்ததாகக்
கேள்வி. இப்போது மாரடைப்பு ஏற்பட்டு   மறைந்துவிட்டார்.

இவருடைய மகன்களில் ஒருவர், முருகையன். முரு ஆட்டோ ட்ரேடிங்
(முரு உந்து வணிகம்)  என்ற நிலையத்தை நடத்திவருகிறார். சிங்கப்பூரில் உந்து வண்டி வணிகம் செய்பவர் இந்தியருள்   இவர் ஒருவரே.   இந்தியர் பிறரை இத்துறையில் காணமுடியவில்லை .

அன்புடையோரும் ஆதரவாளரும் பெருந்திரளாக வந்திருந்து அம்மையாரை
வழியனுப்பி வைத்தனர்.

பூரணவடிவு அம்மையார் ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை
வேண்டிக்கொள்வோமாக.

நாரணன் சிவனொடு வீறுடை அம்மனின் நல்லருள் பெற்றுயர்ந்த‌
பூரண வடிவெனும் பொற்பெயர் பூண்டவர் புன்னகை என்றுமுள்ளார்;
ஊருணத் தந்து தான்பிற குண்பவர் உள்ளில் விரிந்த அன்பு;
வேறுல கெய்தினர் வேண்டுவம் சாந்தியை விழைவம் அவர்பெறவே.





சனி, 8 ஏப்ரல், 2017

கம்பர் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்தில் தோன்றியவர்



இனி, உவச்சன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.
இச்சொல் ஓச்சன் என்றும் வழங்குகிறது.

இந்த இரு வடிவங்களுள் எது முன் அமைந்தது என்று காணவேண்டும்.ஆனால் இதைத் தீர்மானிப்பது கடினமே.

 இதற்குள் புகுந்து இடர்ப்படாமல், இரண்டையும் முதலாகக் கொண்டு
ஆராயலாம்.

உவச்சன் என்பதை  உவ + அச்சன் என்று பகுத்துக் காணின், உவ =
முன் நிற்கும்;  அச்சன் = ஐயன்; தந்தை போன்றவன் என்று பொருள் வரும். உவ+அச்சன் = உவச்சன்; இங்கு ஓர் அகரம் கெட்டது. உவ என்ற (சுட்டடிச் ) சொல்லின் இறுதி அகரம் கெட்டதா? அன்றி, அச்சன் என்பதன் தலை அகரம் கெட்டதா என்று ஆராய்தல் தேவையில்லை.
அதைப் பண்டிதன்மாருக்கு விட்டுவிடுவோம்.

இனி ஓச்சன் என்பதை முந்து வடிவாகக் கொண்டு, ஆய்வு நிகழ்த்தலாம். ஓச்சுதல் என்றால் : எறிதல், ஒட்டுதல், செலுத்துதல், உயர்த்துதல், ஓங்குதல், பாய்ச்சுதல்,  மற்றும் வீசுதல் ஆகும்.  எனவே இறைவனை, இறைவியை உயர்த்திப் பாடுதல், ஓசைப்படுத்தல் என்பதாம்.  ஓசு என்ற‌
என்ற வடிவம் ஓச்சு என்பதன் இடைக்குறை . இது பெயர்ச்சொல்லாக,
கீர்த்தி (சீர்த்தி ), புகழ் என்றும் பொருள்.  ஓ > ஓசு > ஓசை என்பதும்
கருதத்தக்கது.

ஓச்சர் என்பார் பிடாரி கோயிற் பூசாரிகள். அவர்கள் ஒரு குலமாகச்
செயல்பட்டுத் தொழிலீடுபாடு கொண்டிருந்தனர்.  பிடார் என்ற சொல்லுக்குப் பீடு பெருமை என்பது பொருள்.  இது பீடு + ஆர் + அன் என்று உருவாகி, பீடாரன்> பிடாரன் என்று குறுகி அமையும் சொல்.

பெருமையுடையோன்  . இது பாம்பு பிடிப்போன், குறவன், வைத்தியன்
என்று குறிக்கும். பாம்பு பிடிப்பது, ஓர் அசத்தும் தொழில். வைத்தியமும்
இன்றியமையாத தொழிலே.

எனவே பிடாரி ( பீடுடைய பெருமாட்டி ) என்பது ஒரு சிற்றூர்த் தெய்வம்.  இங்குப்  பூசாரிகளாக வேலை செய்தோர் ‍‍உவச்சர்கள் அல்லது
ஓச்சர்கள்.

கம்பர் பெருமான் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்திற் தோன்றியவர். பிடா ரி
வழிபாட்டினர் இராம பத்தர்களாயும் இருந்தனரா என்று தெரியவில்லை. கம்பர் இராம பத்தப் பாடுநரானது மேலும் ஒரு காவியத்தைத் தமிழுக்களித்தது

----------------------------------------------------------------

பீடு என்பதன் அடியாகத் தோன்றிய ஒரு  தொன்மச்  சொல் பீஷ்மன் என்பது என்று முன்னரே இடுகை தந்துள்ளோம்.

பீடு+ மன் ‍= பீடுமன்; இயல்புப் புணர்ச்சி. பீடு‍= பெருமை; மன் = மன்னன். ஆகவே பெருமைக்குரிய மன்னன். காரணப் பெயராகிறது. இது டுகரத்தைக் களைந்த நிலையில் ஷ் என்ற எழுத்து நுழைக்கப்பட்டு, பீஷ்மன் ஆகும். ஓரெழுத்து மாற்றத்திலே சொல்லை அமைத்தது திறனே ஆகும்.

புதிய சொற்களை எப்படி அமைப்பது என்பதைப்  பெரும்புலவன் வால்மிகி
யிடத்து ம்  மற்றும் வேத வியாசனிடத்தும்   கற்றுக்கொள்ளவேண்டும்.



.You may refer to other works on the history of uvachchars. We are only concerned here  with word
derivation.

Edited.