வியாழன், 23 மார்ச், 2017

சாணக்கியன் வடதிசை...... சென்று....


முன் யாம் இப்படி எழுதியிருந்தோம்.:

 சாணக்கியன் வடதிசைச்  சென்று பணிபுரிந்த தென்னாட்டுப் பிராமணன் என்பது வரலாறு. அல்லது  கதை .  (எதுவாயினும் )  .  சோழ நாட்டினன் என்று சொல்லப்படுகிறது. இப்போது இவன் பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன்.  எத்தகு நுண்ணிய பொருளாயினும் அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் வல்லமையே  நுண்மாண் நுழைபுலம் என்று தமிழில் சொல்லப்படும். ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை காணவிழைந்தால் ஒரு சாணாக குறைந்து உள் நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும் நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.  
சாண்  ஒரு சாணாக;அக்குதல் : குறைதல்.அ  அன் என்பன சொல்லிறுதிகள்.
சாணக்கியன்   சாணாகக் குறைகின்றவன்.


எனினும்,  நீட்டமானவற்றைச் சாணாகக் குறைத்தவன் எனப்படுவதால், தென்னாட்டினன் என்றும் சொல்லப்படுவதால்,  வள்ளுவனே ஏன்
சாணக்கியன் என்ற பெயரில் வடதிசைச் சென்றிருக்கலாகாது  என்ற‌
கேள்வியும் எழுகிறது. வள்ளுவனும் சாணக்கியனும் முன்காலத்தில்
வாழ்ந்தவர்கள். அவர்கள் காலக் கணக்கெல்லாம் கருத்துரைகளே. கூற்றும் மறுப்புகளுமாய் உள்ளவை அவை.

நீண்ட கருத்துக்களையும் சாணாகக் குறைத்துக் குறளாக்கின பெரும்புலவனே வள்ளுவன். குறளும் ஒரு சாண் நீட்டுக்கு மேல்
போகாதவை எனலாம்.

செவ்வாய், 21 மார்ச், 2017

இலாகா அருமையான புதுச் சொல் how?

இந்தச் சொல் எப்படி உருவாயிற்று என்று இப்போது ஆய்வு செய்வோம்.

எடுத்துக்காட்டில் தொடங்குவது எளிதாய் இருக்கும்.  ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காட்டு விலங்குகளைக்  காப்பாற்ற ஆள்வோர் எண்ணுகின்றனர்.  அதற்காகச்  சில அலுவலர்கள், காவலர்கள் ஆகியோரை நே(ர் )மித்து  ஒரு சிறு அலுவலகம் அமைக்கின்றனர்.  அஃது ஒரு :காவல்  இல்லம் என்றால் அது பொருத்தம் ஆகும்.

ஒவ்வொரு காட்டிலும்  காவல் இல்லம் ஒன்று அமைத்து  ஒரு தலைமை அகம் ஓர்  நகரில் அமைப்பதானால் அது ஒரு "துறை" என்று இப்போது நாமறிவோம்.

கொஞ்ச காலத்தின்முன் துறை என்று இதைச் சொல்லலாம் என்பது அதிகாரிகள் சிந்தனைக்கு எட்டவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அவர்கள் அதற்கு ஒரு சொல் தேடினார்கள். ஒன்று  அமைத்துவிடலாமே என்று சிலர் ஓர் உத்தி (யுக்தி) செய்தனர்.

காவல் இல்லம் என்பதையே திருப்பிப் போட்டனர்.

காவல் ஆகும் இல்லம்.
கா -  ஆ -  இல்
இல் - ஆ -- கா
 இப்போது இலாகா  என்ற அருமையான புதுச் சொல் கிட்டிற்று.

Reverse formation!

இது என்ன "பாஷை" என்றவர்க்கு எதாவது சொல்லவேண்டியதுதான்.

முன்பே மொழியில் பின்னோக்கு அமைப்புச் சொற்கள்  உண்டென்பது தெரிந்தவர்தான் இதைப்  பின் நடைப் புனைவு செய்திருக்கிறார்.

இரகசியம் என்பதும் அப்படிப் போட்ட சொல் தான். இதை நான் முன் இடுகை ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.  There are quite a few of this sort.





மாலையில் கண்கள் தேடுகையில்...........

பொடிசெய்து வைத்தேன் முறுக்கினையான்;
குடிபெய   ராச்சிறு குருவிகளே
காலையில் வந்து கத்துகையில்
கைகளில் ஒன்றுமே இல்லையன்றோ!
மாலையில் கண்கள் தேடுகையில்
மயங்கும் வேளையில் அகன்றுவிட்டீர்!
நீல வான்வெளி வெற்றிடமாய்
நிலைத்திடப் போமோ வந்திடுவீர்!
ஞாலம் ஒலிபெற் றுயர்ந்திடவே
நாணா தென்னிடம் வந்திடுவீர்.