வியாழன், 9 பிப்ரவரி, 2017

அயர்தல்அசதி அசா அசத்துதல் .

அயர்தல் என்பது நல்ல தமிழ். அயர்ந்து உறங்குகிறாள் என்று சொல்வதுண்டு.  பேச்சில், யகரத்துக்குச் சகரம் வரும். அது வாடிக்கையான திரிபு. பல சொற்களில் வரும் என்று முன்பு எழுதியுள்ளோம். பல அழிந்துவிட்டாலும், மறந்திருக்க மாட்டீர்கள்.

அயர்தல் > அசர்தல்.  அசந்து தூங்குகிறான் என்பர்.  அயர் > அசர்.
அசர்ந்து என்பதில் உள்ள ரகர ஒற்று மறைந்து, அசந்து என்று பேச்சில்
வருகிறது.

ஒரே அசதியாக இருக்கிறது என்பார்கள்.  ஆக, அயர்> அசர் > அச > அச+ தி (விகுதி) > அசதி ஆகிறது.  அயர் என்ற முதற்சொல்லினின்று
திரிந்திருப்பினும், அசர்தி என்று வருவதில்லை. ரகரத்துக்கு
வேலையில்லாமல் போய்விடுகிறது.


திரிபுகளே இல்லையென்றால்,  பல சொற்களும் பல இனமொழிகளும்
தோன்றியிரா என்பதைச்  சிந்தித்து உணர்க.

அச என்பது அத்துடன் நின்றதா?

ஓர் ஆகார விகுதி பெற்று,  அசா என்று ஆனது. அச + ஆ = அசா.
ஆ விகுதி வந்த சொற்கள் பல. ஓர் உதாரணம். கல் (படித்தல் )+ ஆ
கலா. (கல்வி).  பல்+ ஆ = பலா (பல சுளைகள் உடைய பழவகை, அது காய்க்கும் மரம்)  என்பதும் இன்னொரு காட்டு ஆகும்.

அயர் > அயா > அசா என்று காட்டினும் அமையும்.

அயர்  >  அயர்த்து  (பிறவினை ) >  அசத்து .

மிகக் சிறந்த ஒன்றைப் பார்த்து  நம்மால் முடியுமா என்று "அயர்வு "  கொள்ளும்படி  செய்தல் .  அசத்துதல் .

தமிழ் நாட்டின் முதலமைச்சர் யாரோ?

தமிழ் நாட்டின்  முதலமைச்சர்  யாரோ  என்றால்
தமிழ் நாட்டில் தேர்தலின்றே  இல்லா நாளில்
அமைப்புவிதி யாதென்றே  அண்மி  நோக்கி
அதன்படியே ஒருவரையே அமர்ந்து வார்கள் .
எமைஎடுத்துக் போடுமென்றே இருவர் நின்றால்
என்செய்தல் என்பதற்கும் விதிகள் உண்டு.
நமை ஈர்க்கும்  இச்செய்தி நயந்து கேட்போம் 
நமக்கிதிலே செவிக்கொன்றே நாட்ட ம்  ஆமே.  

வலிமிக்கும் . வலி மிகாதும் வரலாம்: "அகண்"

இப்போது ஒரு சொல்லை  ( "அகண்" என்பதை )   அணுகி ஆய்வோம்.

இச்சொல் இப்போது பேச்சு வழக்கில் இல்லை. யாம் பேச்சில் என்று
குறிப்பிட்டால், அது ஏறத்தாழ 50 ஆண்டுகட்குமுன் வழங்கியதாக‌
நம்பப்படுவனவற்றையே குறிக்கும். இன்றையப் பேச்சுவழக்கில் என்று
எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களே விரவி வருகின்றன. ஆக ஆங்கிலத்தையா ஆராய்வது?

அகண் என்பதில் "கண்" இடம் என்று பொருள்படும்.  அதன்கண், இதன்
கண் என்று வரும் இலக்கியவழக்குகளில்,  அவ்விடத்து, இவ்விடத்து
என்று பொருள்படுகின்ற நிலையில், கண் என்பது இடம் என்பதை
உணரலாம்.  முதற்கண் வணக்கம் என்ற தொடரில், முதலிடத்ததாக‌
என்று பொருள்.

ஆயிடை என்பது அவ்விடத்து என்று பொருள்தரும். இது குறுகும்போது அவ்விடை, அவ்விடம் என்று வரும்.  ஆ என்பது
அ என்று குறுகுதல்போல்,  ஆகண் என்பது அகண் என்று குறுகிற்று.

இதில் கவனிக்கத்தக்கது, ஆ+கண் > அகண் என்று வர, அக்கண் என்று வலிமிகவில்லை.

சொல் படைப்பில், வலிமிக்கும் வரலாம். வலி மிகாதும் வரலாம்.
வலி என்பது வல்லெழுத்து.