திங்கள், 30 ஜனவரி, 2017

இயற் சொற்களும் பிற சொற்களும்.

ஒரு சொல் எந்த மாற்றமும் இன்றி இருக்குமாயின் அதை இயற்சொல்
என்று சொல்லவேண்டும்.  அச்சொல், மாற்றங்கள் இன்றி இயன்ற சொல்லா என்பது ஆய்வு செய்வோனின் முடிபு பற்றியது ஆகும். மாற்றங்கள் எவையும் புலப்படாத காலை அவன் அதை இயற்சொல் என்று வகைப்படுத்துவான்.

வடசொல் சொல் என்ற சொல்வகை ஒன்றைத் தொல்காப்பியனார்
கூறியுள்ளார். வட என்ற பெயரெச்சம், வடக்கு என்பதில் கு என்ற‌
இறுதி விகுதியை நீக்கி நின்ற மிச்சச்சொல்லாக இருக்கலாம், வட‌
வேங்கடம் என்ற வழக்குமிருப்பதால், வேங்கடத்துக்கு வடக்கிலிருந்து
வந்த சொல் என்று பொருள்கூறலாம். அங்ஙனமாயின் அது தெற்கில்
வழங்காத‌ சொல்லாகவோ அல்லது அருகியே வழங்கிய சொல்லாக‌
சொல்லாகவோ இருக்கக்கூடும். சமஸ்கிருதம் என்ற மொழியானது
எங்கும் வழங்குவதாய் உள்ளபடியால், அதை வடமொழி என்றது
பொருத்தமாகத் தோன்றவில்லை. தொல்காப்பியனார் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழிப்பெயர் இன்மையாலும் அது எழுதாக் கிளவி என்றும் குறிக்கப்பெற்றுள்ள படியாலும் இன்று சமஸ்கிருதம் என்பதுதான் வடமொழி என்று முடிவுசெய்ய இயல்வில்லை. சமஸ்கிருதம் வடமொழியன்று அது எங்கும் எதிர்கொள்ளப்படும் மொழி என்றுதான் முடிவுசெய்யவேண்டும். சொற்கள் பலவற்றையும்
ஆயுங்கால் தமிழ் மூலங்களே தென்படுவதால் அத்தகு சொற்கள்
வடமொழிக்குரியவும் ஆகாதவை; சமஸ்கிருதத்துக்குரியவும் ஆகாதவை. மேலும் வடம் என்பதும் வட என்று எச்சமாகும். எனவே
கயிறு, மரம் என்றெல்லாம் பொருளுடைய வட என்பது மொழி
என்ற சொல்லுக்கு அடையாக வருங்கால் கயிறுபோல் இழுக்கப்பட்ட‌
சொல் என்றோ மரத்தடியில் வழங்கிய சொல் அதாவது இல்லத்தில்
வழங்காத சொல் என்றோ பொருள்படவும் கூடும். எனவே வடசொல்
என்று எந்தச் சொல்லும் வகைப்படுத்த இயலாததாக உள்ளது. மேலும்
வடக்கு நீங்கிய ஏனைத் திசைகளிலிருந்து வந்ததே திசைச்சொல் எனின் திசை என்பது கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நிலப்பகுதிகளிலிருந்து வந்த சொல் என்று பொருள்படும். அது எந்தச்
சொல் ?

இயற்சொல் திரிசொல் என்பன திரிபும் திரிபின்மையும் பற்றிய‌
பகுப்பாதலின் இவை ஒரு சொல்லின் தோற்றம் பற்றிய பகுப்பு,
ஆனால் திசை என்பது தோற்றம்பற்றிய தாக இல்லை.  வழங்கும்
இடம்பற்றிய தாக உள்ளது. திரிந்தாலும் திரியாவிட்டாலும் இயற்சொல் திரிசொல் என்பன செந்தமிழ் நாட்டில் வழங்குபவை
ஆதலின் வடசொல் திசைச் சொல் 1 என்பன செந்தமிழ் நாட்டில் வழங்காதவை எனலாமோ? என்பதும் ஆய்வுக்குரியதாக உள்ளது.

இதுபற்றிப்  பின் உரையாடுவோம்.

இயற் சொற்களும்  பிற சொற்களும்.

1 கோடிட்டவை  திருத்தம் பெற்றன.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கதம்பம்

கலத்தல் என்பது, வேறுவேறான பொருட்களை
ஒன்றுசேர்த்துவைத்தல் என்பது உங்களுக்குத் தெரியும். கலத்தல் என்பது இரண்டுவகை என்று உணரலாம். நாம் கலந்து வைப்பதும் அது தானே கலத்தலும் என இரண்டு.  சாக்கடை நீரில் (சாய்க்கடை> சாக்கடை , அதாவது சாய்வாகக் கடைசிப் பகுதிக்குச் செல்லும்படி அமைக்கப்படுவது) குடிநீர் கலத்தல் என்பது தானே கலத்தல் எனலாம்.
(யாரும் போய்க் கலக்கவில்ல.)

கலத்தல் என்பது சண்டையிடுதல் என்றும் பொருள்படும். இந்தப் பொருளில் இருவேறு கோட்டியினர் (இப்போது கோஷ்டி) ஒருசாராரை இன்னொரு சாரார் அணுகி அடித்துக்கொள்ளுதல். கலகம், காலாய்த்தல், கலவரம் (கல+ அர்+ அம் அல்லது கல+ அரம்) என இதில் விளைந்த‌ சொற்களும்  உள.

கலத்தலில், பூக்களைக் கலத்தலும் ஒரு திறமைதான்.  இங்கு
கல > கல + பு + அம் > கலம்பம்  என்று முகிழ்த்து, கதம்பம் என்று
திரிந்துவிடுகிறது. கதம்பம் எனினும் கலப்பு ஆகும்.

கல> கல+ ஆவு + அம் > கலாவம் > கலாபம் எனவரும்,
மயிலிறகில் நிறங்கள் கலத்தல். அது ஒரு தனிவகைக் கலப்பு.

மண் கலத்தலும் இன்னொரு கலத்தல். கல+ அ +  அம் என்பது
யகர உடம்படு மெய் பெற்று, கல+ ய் + அ + அம் = கலயம்
ஆகிக் கலசம் ஆனது. ய ‍ >ச இயல்பான திரிபு.

இதை முன் எழுதியதுண்டு.

அறிஞர் பிறரும் சிலவற்றை விளக்கியுள்ளனர்.

சனி, 28 ஜனவரி, 2017

பரிதிமால் கலைஞரும் நூல் அரங்கேற்றமும்

வடகரை என்ற ஊரில் ஒரு நிலக்கிழார்
\(ஜமீந்தார்) இருந்தார். இவர்
பெயர் இராமச்சந்திர நாயுடு என்பது. 
தனித்தமிழ்ப் புலவரான பரிதிமால் கலைஞர்
 என்னும் சூர்யநாராயண சாஸ்திரியார், குளந்தை வடிவேலன்
பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றும் பொருட்டு இந் நிலக்கிழாரைக் காணப் பெரியகுளம் என்னும் ஊருக்குச் சென்றார். பரிதிமால் கலைஞர் தம் வேலை முடிந்ததும் உடனே திரும்ப எண்ணினாலும், நிலக்கிழார் அன்பின் காரணமாகவும் தமிழ்ச்சுவை மேலும் பருக விழைந்ததனாலும்  விடைகொடுக்கவில்லை.  சிலகாலம் தம்முடன் தங்கி இருக்கும்படி வற்புறுத்த, வேறுவழியின்றிப்     பரிதிமால் கலைஞரும் அங்கேயே சிறிது நாட்கள் தங்கிவிட்டார்.

போன பரிதிமாலர் காலம் தாழ்த்தியதைக்
 கண்ட அவர்தம் மாணாக்கர்
சலசலோசனர் ஒரு பாவின் மூலம்
 தம் ஆசிரியருக்கு விரைவில்
திரும்பவேண்டியதன் தேவையை உணர்த்தினார்.
அப்பாடல் வருமாறு:

செல்வமலி குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச்
செல்வலெனச் சென்றாய்; தேசிகவான் ‍‍‍=== கல்வி வயின்
போந்தவன் தாழ்ப்பப் புலம்புகொண்டு இல்கணுறை
ஏந்திழையை நேர்குவல்யான், எண்.

இதன் பொருள் வருமாறு:

செல்வமலி : செல்வச்செழிப்பு மிக்க;
குளந்தைச் சேயின் : குளந்தை வடிவேலனின்
தமிழ் விரிப்ப : பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்ற;
செல்வல் என : போகின்றேன் என்று சொல்லி;   
சென்றாய் : போனீர்கள்
 தேசிக வான் கல்வி வயின் போந்தவன் : இத்தகைய‌ உயர்ந்த கல்விச்சேவை மேற்கொண்டு சென்ற நீங்கள்;
தாழ்ப்ப :வருவதற்கு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதால்
புலம்பு கொண்டு:துன்பம் மிகுந்து;
இல்கண் உறை : வீட்டில் இருக்கின்ற;
 ஏந்திழையை : (உங்கள் ) மனைவியை
நேர்குவல் யான் : யான் குறிப்பிட விரும்புகிறேன்;

எண் : நினைத்துப் பாருங்கள் என்றபடி.

குளந்தை :  இது  பெரியகுளம் என்ற ஊரைக் குறிக்கிறது..

தேசிகம் - ஒளி, பொன், அழகு.


"பல்லினைத் தேசிகம்"  (சீவக.சிந்தா. 1480)


ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது;  ஆசிரியர் குடும்பம் பற்றிய அக்கறையும் மாணாக்கருக்கு இருந்தது.  பரிதிமாற்  கலைஞர் சென்றது  தம் ஆசிரியரின் ( (மதுரைச் சபாபதி  முதலியார் ) நூலை அரங்கேற்றுவதற்கு என்பதையும் நாம் மறக்கலாகாது.  பரிதிமாலருக்கு  தமிழ்க் கவலை.

பரிதிமால் கலைஞரும்  நூல் அரங்கேற்றமும்  \\

This post has some formatting errors which cannot be rectified.

We shall try some time later.