வியாழன், 29 டிசம்பர், 2016

ஆமைக்கு மறு பெயர்.

ஆமைக்குத் தமிழில் வேறு பெயர் உண்டா என்று நீங்கள் வினவியதுண்டா ?  ஆமை என்ற உயிரி வேறு; அறியாமை, ஒவ்வாமை, பொறாமை என்று ஆமையில் போய் முடியும் சொற்கள்
வேறு.பொறுமை மிக்கது ஆமை; அதற்கும் பொறாமைக்கும் ஒரு
தொடர்பும் இல்லை. முயலுடன் போட்டி போட்டு வென்ற புகழை
உடையது ஆமை என்பதும் நீங்கள் அறிந்ததே.

ஆமைக்குக் கடமம் என்ற இன்னொரு பெயருண்டு. மிக்கக் கடுமையான் ஓடுகளை உடையது ஆமை. ஆகவே அதற்கு மற்றொரு
பெயரை வைத்தவர்கள், கடு (கடுமை, கடியது)  என்ற அடிச்சொல்லினின்றும் ஒரு பெயரை அமைத்தது மிக்க அழகிதே
ஆகும்.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கடு + அம் + அம்.

அம் என்ற இறுதியைப் பெற்ற இச்சொல், அம் என்பதே இடைநிலை
யாகவும் பெற்றுள்ளது. சில சொற்கள் ஒரே இடைச்சொல்லை விகுதியாயும் இடைநிலையாயும் பெறுதலுமுண்டு.

சில சொற்கள் எழுத்துமுறைமாற்றாக வரும்.  எடுத்துக்காட்டாக,
விசிறி என்பது சிவிறி என்று வந்து, பொருள் மாறுபடாமலிருக்கும்.
இந்தக் கடமம் என்ற சொல்லும், கமடம் என்று எழுத்து முறைமாற்றி
வருதல் உண்டு. சொற்களும்கூட இரட்டைவேடம் அணிதல் உண்டு.

இன்னொரு எ‍~டு:  மருதை > மதுரை.  மருத நிலங்கள் சூழ்ந்த‌
நகர் என்பது பொருள். இங்ஙனம் பல உள .  முன்  எழுதிய நினைவு இருப்பதால்   தேடித் பார்த்தல் நன்று.

Since posts go missing often, editing will be done later. Cannot be helped.  Thank you.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



நத்தை என்பது..........

நத்தை என்பது ஓர் ஊரும் உயிரி.  இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டதென்பது எவ்வித ஆய்வுமின்றியே அறிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

நத்துதல் என்பது ஒட்டிக்கொண்டு இருத்தல்,  பிறவற்றை  அடுத்து வாழ்தல்  என்று பலபொருளைத் தரும்.  "பிறரை நத்தி வாழமாட்டேன்" என்ற வாக்கியம் காண்க.

நத்து + ஐ = நத்தை.

நத்தை என்பது தமிழ்ச்சொல், தவளை என்பதுபோல.

செடி,  மரம் என்று ஏற்ற எதிலும் ஏறி ஊர்வது  நத்தை. நீர் நத்தைகளும் உள .

புதன், 28 டிசம்பர், 2016

ஜெய லலிதா பொற்செல்வி

பாண்டியனின் மகள்போலப்
பைந்தமிழ்ப்பொற் செல்வியெனப்  
பணிந்துபலர்  உயர்ந்தேத்தப்
பார்புகழக் கோலோச்சி
மறைந்தஜெய லலிதா,      தன்னை ~~

ஈண்டுவளர்த் துயர்த்தியவர்
இருந்தாரேல் இக்கதியும்
எய்த லுண்டோ   என்றுகுரல்
எழும்பிடவே நன்றுபல
புரிந்தவரே முதல்வர்    முன்னாள்..



நல்லவரும் புகழ்கின்றார்;
நல்லதுமுன் செய்தவராய்
உள்ளசில நிகழ்வுகளால்
ஊரெதனைக்  கூறிடினும்
 நல்லோரே யாங்க     ளென்பார்,


எல்லவரும் புகழ்கின்றார்
என்றிடிலோ யார்க்குமொரு
மீட்பரெனத் திகழ்ந்தவரே
அவரெனவே தெளிவுறுத்தும்
வரலாறே        இதுவோ     பண்பால்..