திங்கள், 7 நவம்பர், 2016

வெ வேறு; வே வேறு

ஒரு சொல் "வெ" என்னுமெழுத்தில் தொடங்குகிறது. இன்னொன்று
"வே" என்று நெடிலில் தொடங்குகிறது.  வெ என்பது வேறு, வே என்று
நெடிலில் சொல்வது வேறு.  அதற்கும் இதற்கும் தொடர்பில்லை!!

இப்படி நம் வாத்தியார் சொல்லிக்கொடுப்பார், அதுவும் உங்கள் ஒன்றாம்
வகுப்பில். ஐம்பது ஆனாலும் அறுபது ஆனாலும் பலரும் இந்தப் பாடத்தை
மறக்கமாட்டார்கள். இவர்கள் நல்ல மாணவர்கள். வாத்தியார் சொன்னபடியே எதையும் உணர்ந்துகொள்பவர்கள். இவர்கள் கூட்டத்தில்
நீங்களும் இருக்கலாம்.

நீங்கள் சொல்வீர்.  வெ வேறு; வே வேறு.

எந்தக் காலத்திலும் இவை ஒன்றாக மாட்டா.

அலசி ஆய்ந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆவல் ஆவா. அவா

பல மொழிகளில் குறில் நெடில் என்பன இல்லை. அவை அங்ஙனம்
உணரப்படவில்லையே தவிர, பேசுகையில் குறில் நெடில் ஓசைகள் இயல்பாகப் பலுக்கப்படுகின்றன. மாய், தாய், லோங் என்று நெடில்
முதலாக வரும், சிலவற்றில் குறில் தனியாகக் குறிக்கப்படுவதில்லை.
எனினும் பேசுகையில் குறில் நெடில் இருக்கும்.

நெடில் குறிலாகிய சொற்களை முன் இடுகையில் கண்டோம்.  அறிந்து
இன்புற்றிருப்பீர்கள் என்பது எம் துணிபு ஆகும்.


இனி ஆவல், அவா என்பனவற்றைக் கவனிப்போம். இவ்விரண்டும் ஒருபொருளன என்பது நீங்கள் அறிந்ததே/

இதன் வினைச்சொல்  ஆவு என்பதாகும்,  இப் பகுதி இதுகால தனியாக‌
வழங்கவில்லை. நீ தொலைக்காட்சி பார்க்க  ஆவுகிறாயா என்று யாரும்
பேசுவதைச் செவிமடுத்ததில்லை. இப்படி ஒரு காலத்தில் தமிழர் பேசினர்
என்று தீர்மானிப்பதில் தடையேதுமில்லை.

ஆவு + அல் = ஆவல் ஆகிறது. ஆவலென்பது இன்னும் வழக்கில் உள்ளது.
ஆவினான், ஆவுகின்றான், ஆவுவான் என்பன காணக்கிடைத்தில. இவற்றை நாம் எழுத்திலும் பேச்சிலும் மறந்தோம். அதனால் இல்லை. ஆவுதல்  நிகண்டுகளில் மாத்திரம் உள

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.

நில் >  நிலா.
உல் > உலா.
கல் > கலா ( கற்றல்).
பல் > பலா  ( பல சுளைகள் உடைய பழம் ).

விழை >  விழா.
புழை > புழா. (மலையாளம்)
 கடு >  கடா.
துல் > துலா.

இங்ஙனம் வினை பெயர்ச் சொற்களிலும்  ஆ விகுதி வரும்.

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.


ஆவு + அல் =  ஆவல்.
ஆவு + தல் =  ஆவுதல்.
ஆவு + ஆ =  ஆவா.  இது பின் அவா என்று குறுக அழகுபெறும்.

ஆ விகுதி பெற்றுக் குறுகியதே  அவா என்று முடிக்க.

சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கம்பெற மொழியில் வசதிகள்
இருப்பினும், இவ்வாறு முடித்தல் போதுமானது.





ஞாயிறு, 6 நவம்பர், 2016

நெடில் முதலான .......... குறில் முதலாகி

நெடில் முதலான சில சொற்கள் விகுதி ஏற்றபின்  குறில் முதலாகி
விடுகின்றன. அப்படிச் சில சொற்களை நாம் முன்பு கண்டோம்.  அந்த‌
விதியை மீண்டும் நினைவு கூர்ந்து அவ்வறிவைத் திறப்படுத்திக்
கொள்வோம்.

சாவு என்பது வினைச்சொல். இதனோடு அம் விகுதி வந்திணைந்தால்
சாவு+ அம் =  சவம் என்றாகிறது. அது இறந்த உடலைக் குறிக்கிறது.

தாவு என்பது வினைச்சொல். தாவுதல்.  இதனோடு விகுதி சேருமாயின்
தாவு+ அளை =  தவளை ஆகிறது.  தாவளை என்னாது தவளை என்றே
வரும்.  அளை என்பது கலக்குதல் என்றும் பொருள்படும்.  தாவிச் சேற்றினைக் கலக்கும் தவளைக்கு இது ஏற்ற விகுதியாகிறது.

வாய்ப்பக்கம் கூம்பியும் அடி சற்று அகலமாகவும் இருப்பது குவளை,
கூ+ வளை = குவளை ஆயிற்று.  கூ > கூம்பு. குவளையின்  உரு இப்போது மாறி யுள்ளது.

இதேபோல்  கூம்பு + அம் =  கும்பம் ஆனது.  கூ> கு ஆனது.

கூடி வாழ்வதே குடும்பம்,   கூடு+ பு + அம் =  குடும்பம். கூடு என்பது
குடு ஆகி, மகர ஒற்று புணர்ச்சியில் தோன்றி, பு விகுதிக்கு முன்னின்று
இன்னோசை தந்தது.  விரு+பு ‍> விரும்பு போல. வினையிலும் பெயரிலும் இன்னோசை விளைக்க இது தோன்றும். இது பரவலாகக்
காணப்படுவதாகும்.  கொடு+ பு = கொடும்பு போல.  இங்ஙனம் பலவாகும்.