திங்கள், 3 அக்டோபர், 2016

கண்டதோர் கொள்கை

கண்டதோர் கொள்கை ஒன்றே
கருதுமோர் உண்மைக் கொள்கை
என்பதோர் படியில் நின்றே
எனைத்துமே போற்றிக் கொண்டு
மன்பதை அனைத்தும் பின்னே
மடங்காது வருக வென்பான்
ஒன்பதில் ஒன்று நீங்கின்
உன்கழுத் தறுத்தல் நீங்கான்.

தீயினில் விரைந்து  வீயும்
ஆயவை  அனைத்தும் போலே
தீவிரம் அதனில் மாயும்
ஆய்விலர் கருதும் யாவும்.
தாவுறும் அனைத்தும் நன்மை
தாவில  அனைத்தும் புன்மை
மேவின புரட்டிப் போட்ட
மிகைபடு பிழைக்கும் செல்கை .     

தீவிரம்  விலகிச்  செல்வீர்
தீவினை கடன   கற்றல் ;
நாவினில் பிழைத்த  லின்றி
நல்லன கடைக் கொள்    வீ ரே;
தேவினை  அடைந்தோன்  போலும்
பாவனை  புனைதல்  தீதாம் ;
ஓவமே  பலரும்  கூடி
ஒத்திருந் தகலுள்  போற்றல் .


 குறிப்புகள்:

கண்டது:  கண்ணாற்  கண்டதும்  மனத்தாற்  கண்டதும்  ஆகியவை;
அவன் காணாத  கொள்கைகள் பல உலகில் உள என்பது  கருத்து.

ஓர்  கொள்கை:   வினைத்தொகை;   ஓரும்  கொள்கை .  ஓர்தல் :  மூளையில்  தோன்ற   அறிதல் .

ஒன்றே  :   மட்டுமே.

கருதுமோர்   உண்மை:    அவன்  ஏற்கத்தக்க  ஒரே  உண்மை.

என்பதோர்  படி:   பிடிவாதமாகிய  ஒற்றைப் படி.

எனைத்துமே -   எதையாகிலுமே.    பிற  குப்பைகள்  பலவற்றையும் .

தா  :   குற்றம்.

செல்கை  :  போம் வழி .

கடன  கற்றல்:   கடன்  அகற்றல்  =   அகற்றல்  கடன் .

பிழைத்தல் :  பிழை படுதல் .

தேவினை  =  கடவுளை.

ஓவம் :   ஓவியம்.


சனி, 1 அக்டோபர், 2016

வருந்தா நிலமேல் வாழ்விதுவே !

வீட்டின் நாளைத் தலைவர்யார்
விரிந்த கவலை நாம்கொள்ளோம்!
கூட்டில் கிழடும் இறந்திட்டால்
குருவிகள் கவலை கொள்வதில்லை!
நாட்டின் தலைமை நன்பொருளாம்
நாளும் அதையே சிந்தனையாய்
ஏட்டில் பேச்சில் விரித்திடுதல்
இற்றை உலகின் செய்ம்முறையே.

இற்றை இயற்கை நாளையையே
என்றும் கவலை கொள்வதில்லை.
மற்றைப் பொருளில் மனம்செல்ல‌
மனமாய்ப் பொருளும் அதற்கில்லை
இறந்தான் எனவே நாம்கவல‌
எழுந்தான் பகலோன் முனம்போலே!
வரந்தான் கடவுள் தரவில்லை
வருந்தா நிலமேல் வாழ்விதுவே ! 

சட்டாம்பிள்ளை.

சட்டாம்பிள்ளை.

தமிழறிஞர்கள், இச்சொல்லை ஒரு மரூஉ என்று கருதுவர். அதாவது சட்ட நம்பிப் பிள்ளை என்பதே மருவி  சட்டாம்பிள்ளை என்று வந்தது என்பர்.
சட்டநம்பி(ப்பி)ள்ளை  >  சட்டாம்பிள்ளை.    முதலில் இரு பிகரங்களில்
ஒன்று மறைந்து,  பின் சட்டநம் என்பது சட்டாம் என்று திரிந்தது.  தம்பி என்பது தம்பின் என்பதன் கடைக்குறை;  இதேபோல் நம்பி என்பது நம்பின் என்பதன் கடைக்குறை.

சட்டம் + பிள்ளை =  சட்டாம்பிள்ளை;   இதில்  டகரம்  நீண்டது  ( திரிதல் )  என்பதும்  ஆம் .   குளத்தங்கரை  என்பதைக்    குளத்தாங்கரை  என்று நீட்டினாற் போலும் ,

இத்தகு திரிபுகளால்  தமிழ் புதிய சொல்லுருவங்களைப் பெற்றதுடன் வளமும் அடைந்தது என்று கூறவேண்டும். மொழிகள்  திரிந்தமைவுகளே எனல் அறிக.

எந்தச் சொல்லும் திரியாமல் இருக்குமாயின்  சொற்கள் பல்கியிருத்தல் இயலாமை காண்க.  தோன்றல் திரிதல் கெடுதலும்  குறைப்படுதல்களும்  இவ் வளம் உய்த்தன.

நம்பி என்பதன் பெண்பால் வடிவு  நங்கை என்பது. இச் சொற்களில் போதரும்
நம்,  தம் என்பன தம் அடி நாட் பொருளை  நாளடைவில் இழந்தன. போலும்.

சட்டம்  என்பது ஈண்டு  ஒழுங்கு  குறித்தது.  இதன் மற்ற பொருள்களை முன் இடுகைகளில்  குறித்துள்ளோம். அவை :  

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_85.html

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_28.html