வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அடிச்சொல்: கள் (பன்மை விகுதி).

தற்காலத் தமிழில் "கள்" விகுதி பன்மை குறிக்க மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலத்தில், கள் என்னும் பன்மை விகுதி அஃறிணைப் பொருள்களுக்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் மிக அருகியே பயன்படுத்தப்பட்டது என்று சொல்லவேண்டும்.
ஒருமை பன்மை (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) என்னும் பால் இருந்தது என்றாலும் கள் விகுதி அஃறிணைக் குரியதாய்க் கருதப்பட்டது. ஆகவே தொல்காப்பியரிடத்துப் போய் "அவர்கள்" என்றால் அது தவறு, இலக்கணம் பிழைத்தது என்று கூறிவிடுவார். அவர் என்பதே பன்மை. அவர்கள் என்பது அஃறிணைக் குரிய கள் விகுதி உயர்திணையிற் புணர்த்த இலக்கண வழு. இந்த இலக்கணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கள் விகுதி உயர்திணையிலும் சற்றே   பரவிவிட்ட காலத்தில் திருவள்ளுவர் வாழ்ந்தார். ஏனென்றால்"பூரியர்கள் ஆழும் அளறு" என்பதுபோலும் கள் விகுதி உயர்திணையில் புணர்த்திப் பாடினார். முதலாவது "பூரியர்" என்றாலே பன்மை. அதற்குக் கள் விகுதி தேவை இல்லை என்பது ஒன்று. இரண்டாவதாக பூரியர் என்பது உயர்திணை. அதற்கு அஃறிணை விகுதி பொருத்துதல் ஆகாது என்பது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்விதிகள் நெகிழத் தொடங்கிவிட்டன என்பதை மொழிவரலாற்றின் மூலம் அறியலாம்.
சில சொற்களின் பயன்பாடுகள் நூலின் காலம் அறிய உதவுக்கூடுமென்பதனை அறிந்தின்புறுக. இது பற்றி பின் கூடுதலாக‌ அறிந்துகொள்வோம்.









சூது.

ஒருவன் சூதாடத் தெரிந்தாலே அதில் ஈடுபடமுடியும்.  இல்லாவிட்டால்
தோற்றுப்போய்த்  தன் செல்வங்களை இழந்து தவிக்க நேரிடும். தான் செய்யும் ஒவ்வொன்றையும், தான் ஏற்கனவே தன்னுள் சேமித்து வைத்துள்ள  திறனுக்கு ஏற்றவாறும்  புதிய நிலைகளில் நன்கு ஆலோசித்தும் விளையாடுதல் வேண்டும். எனவே நன்கு சூழ்ந்து செய்வது சூதாயிற்று.
சூழ்தல்  ஆலோசித்தல். வேண்டியாங்கு திறனுடையாரிடம் கலந்து சிந்தித்தும் செய்தல். மேலும் விளையாடும்போது சுற்றியமர்ந்து விளையாடுதலையும் குறிக்கும். ,

சூழ் என்பது சூ என்று கடைக்குறையும்.

கடைக்குறை மற்றுமோர் எ - டு :  வீழ் (தல் )  >  வீ  ( தல் )

"   ஈ யாது  வீ யும்  உயிர் தவப்  பலவே "  (ஒளவை ,   புறம் )

சூழ் > சூ >  சூது.

து விகுதி பெற்ற பெயர்ச்சொற்களை நினைவு கூர்க. எடுத்துக்காட்டு:
கைது.  (கைக்குள் வருதல்.  அகப்படுத்துதல்).  விழுது . கொழுந்து .எனப் பல .


புதன், 24 ஆகஸ்ட், 2016

பலி - பரி



இப்போதெல்லாம் பலியிடுதல், பலிகொடுத்தல் என்ற தொடர்கள் அடிக்கடி
செவிகளை எட்டுகின்றன. சிலவிடங்களில் நரபலி பற்றிய செய்திகளும்
கிடைக்கின்றன. திறமாக உசாவியறிந்து எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய‌
காவலர்கள் கதைகளும் உலா வருகின்றன.

பலி என்கையில், தலையை வெட்டிக் கொல்லுதலே எடுப்பாக முன் நிற்கின்றது. நண்ணிலக் கிழக்கிலும்  (Middle East ) இது பரவலாக நடைபெறுதல் இணைய மூலம் அறியப்படுகிறது.

பலி என்ற சொல் உண்மையில் பரி என்பதன் திரிபு ஆகும். பரி என்றால்
வெட்டுதல் என்று பொருள். பரிதல்,பரித்தல் ‍ வெட்டுதல், அறுத்தல்.

ரகரம் லகரமாவது தமிழிலும் பிறமொழிகளிலும் உண்டு. ரகரத்தைப்
பலுக்க நாக்குத் திரும்பாமல், அதை லகரமாக வெளிப்படுத்தும் பிறமொழியளரும் பலர். ரகர எழுத்துக் குன்றிய மொழிகளும் உலகில்
உள. ஆர் என்று உச்சரிக்க‌ இயலாமல் அதை ஆர என்று இழுப்போரும்
பலர்.இங்கு அவர்களைப் பழிப்பதற்காகக் கூறவில்லை. ரகரமும் லகரமும்
ஒன்றுக்கொன்று பரிமாற்றம் பெறத்தக்கவை என்பதை, ஆணியடித்ததுபோல் இறுக்கிப் பிடித்தபடி உணரவேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம். ஒலிகளின் உச்சரிப்பில் மனித நாவு அப்படிச் செயல்படும் தன்மையை உடையது, அவ்வளவே. ரகர லகரத்தைத் தெளிவாக உச்சரிப்பதால் நாம் அவர்களைவிடக் கெட்டிக்காரர்கள் என்பது பொருளன்று.

ஒலி நூலில் ர‌கரத்தை முந்தியது லகரம் என்பதற்குத் தமிழில் அகச்சான்றுகள் உள. வள்ளல் என்ற சொல்லைப் பாருங்கள். வள்ளன்மையுடையோன் வள்ளன் / வள்ளர் என்று வரவேண்டுமே. ஏன் சொல் அல் விகுதி பெற்று முடிகிறது? காரணம் அன், அர் இவற்றை முந்தியது அல். தோன்றல் என்ற தலைவரைக் குறிக்கும் சொல்லும் அப்படிப்பட்டதே ஆகும். இது நிற்க.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் > சிதம்பரம் என்றாகியது. இதில்
லகரத்துக்கு ரகரம் வந்தது. இப்படிப் பட்ட பரிமாற்றத் திரிபுகளைக் கண்டு
கொள்க. கோடரி > கோடாலி என்பதும் காண்க. போக்கிலி > போக்கிரி
மற்றொன்று. பக்கத்தில் யாருமில்லாத தனியன் தான் பக்கிலி > பக்கிரி.
பக்க இலி > பக்கிலி > பக்கிரி (மரூஉ). (பக்கவடை> பக்கோடா போன்ற திரிபு). நிலம்+தரம் = நிலந்தரம் > நிரந்தரம். ( நில் ‍ பகுதி).

எனவே பலி <> பரி தொடர்பு தெளிவாகிறது. பரித்தலே பலியாம்.  Not Bali.  
வெட்டுதல் பரி  என்பதன் பொருள்.  பிற பொருள் தொடர்பற்றவை.