செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கட்சி ( கள் என்ற அடிச்சொல்)

கள் என்ற அடிச்சொல்லுக்குப் பல பொருள் உள. இவற்றுள் கட்டுதல், இணைத்தல், ஒன்று சேர்த்தல் என்பதுமொன்று. இஃதோர் முன்மை பொருந்திய பொருளாகும். இதைச் . சற்றே சுருக்கமாகக் கவனிப்போம்.

கள் >  கட்டு.  கட்டுதல்.   கள்+ து =  கட்டு.
கள் >  கட்டு >  கட்டி.  ஒன்றாக இணைந்திருப்பது.
கள் >  கடு:   ஒன்றாக இணைந்திருப்பதனால் " கடுமை" உண்டாகிறது.
ஒப்பீடு :  பள்  -  படு  பள்ளம்  படுகை  
கள் >  கடு > கடன்.  கட்டவேண்டியது கடன்.    "கட்டுதல்" போன்ற பிற நடவடிக்கைகளும் அடங்கும்.

கள் > கட்சி.  கள்+ சி.   பலர் ஒன்றாகக் கட்டப்பட்டதுபோன்ற  நிலை.
இது கொள்கைக் கட்டாகவே பிறவாகவோ இருக்கலாம். சி என்பது விகுதி.

கள் >( கழ) >  கழகு >  கழகம்.  பலர் சேர்ந்திருப்பது. இது கட்சியாகவோ சூது மூலம் கட்டுண்ட நிலையாகவோ இருக்கலாம்.

கள் >(  கழு) >  கழுத்து.   பல தசை நார்களும் அரத்த நாளங்களும்
கட்டப்பட்டிருப்பது.

கள் > கள்ளம்.   கட்டப் பட்ட உரை/ செயல் . பொய்

இன்னும் பல/ அவற்றைப் பின்னொரு நாள் காணலாம்.

இந்த இடுகை மூலம் கள் என்ற அடிச்சொல்லின் ஒரு பொருண்மை
தெளிவாகிறது. நேரம் கிட்டுகையில் விரித்துச் சொல்வோம் . 

முன்னாள் அதிபர் நாதன் மறைவு இரங்கல்

இன்னுமினி பொன்னாட்கள்   இங்கிருப்பார் என்றிருக்க‌
விண்ணிற்சென் றேய்ந்திட்டார் வெற்றித் திருமகனார்
நாதன்சிங் கப்பூரின் நல்லார்தம் உள்ளமெலாம்
மேதகவாய் வாழுவார் மேல்.

இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

பொருள்:

இன்னும் :  வரும் காலத்தில்  ;
இனி  :  இனிக்கின்ற
பொன்னாட்கள் :  நோயற்ற  நாட்கள்
இனி பொன்னாட்கள்: இனிக்கின்ற நோயற்ற நாட்கள்  இது வினைத்தொகை .
ஏய்ந்திட்டார் :  இயைந்திட்டார்  அல்லது இணைந்திட்டார்
மேதகவாய் :  உயர் நிலையில்



ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

வாந்தி (யகர ஒற்று மறைவு )

அறிஞர் தீ என்ற சொல் எப்படி உண்டானது என்று ஆய்ந்தனர், முடிவில்
தேய்தல் என்ற கருத்திலிருந்து அது வந்தது என்று கண்டனர். கற்கள் தேயுங்கால் வெப்‍‍பமும் தீயும் உண்டாகிறது. மரங்கள் தேய்ந்தும் காடுகளில்
தீயுண்டாகிறது என்றும் சொல்வர்.

தேய்தல் > தீய்தல் என்று சொல்லமைந்தது. தீய்ந்து சாம்பலாயிற்று என்பது
காண்க. தீய் என்பது பின் தீ ஆயிற்று.  (வினையிலிருந்து  போந்த பெயர்ச்சொல் )

தீய் > தீய்பு > தீபு+அம் = தீபம். யகர ஒற்று மறைந்து, பு அம் விகுதிகள்
பெற்றுச் சொல்லானது.

யகர ஒற்றுக்கள் இடையில் நிற்கையில் சொல் நீட்சி பெற்றால் அவை மறைதல், முன் பல இடுகைகளில் விளக்கப்பட்டது.

இன்னோர் எடுத்துக்காட்டின் மூலமாய் இதனை விளக்கலாம்.

தின்றது வாய்வழியாகத் திரும்பி வெளிவருவது வாந்தி என்றனர்.

வாய் + தி > வாய்ந்தி > வாந்தி.   (  இங்கு யகர ஒற்று  மறைந்தது )

தி என்பதை விகுதியாகவும் திரும்பிவருதற் குறிப்பாகவும் மிக்கத் திறமையுடன் அமைத்தனர்.

வாந்தியை வாயால்எடுத்தல் என்பதுண்டு.

யகர ஒற்று  மறைவுக்குப் பிற காட்டுகள்

தீய் > தீய் + பு = தீய்ம்பு > தீம்பு
காய் > காய்+பு > காய்ம்பு > காம்பு.  (காயுடன்  இணைந்தது )
தோய் > தோய்+ பு > தோய்ம்பு > தோம்பு. (துணி முதலியன தோய்த்து
வைக்க உதவும் பெரிய கொள்கலம்)  (தானியங்கள் ஊற வைக்கும் கலம் )
பாய் + பு  =   பாய்ம்பு  > பாம்பு     ( மு வரதராசனார் )

காய் > காய் + து +  அம் =  காய்ந்தம் >  காந்தம்,  உள்ளில் தீ இருப்பதாக எண்ணப்பட்ட இரும்பு, காந்துதல். இதுவும்  பகுதியாகலாம் .

இவற்றில் யகர ஒற்றுக்கள் மறைவினைக் கண்டுகொள்க.   


ஆங்கிலத்தில் உள்ள டேய் என்னும் நாள் குறிக்கும் சொல்லும்
நமது சொல் தான். காரணம் அது 'டா" என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து புனையப்பெற்றது. டா என்பதோ எரிதல் என்று பொருள்
படும் சொல். டா> டியெஸ் (இலத்தீன்) > தெய் ( பழைய பிரிசியன்)
என்பன தொடர்பு உடையவை. டியெஸ் அதில் தொடர்பில்லாதது
என்றனர் ஆய்வாளர் சிலர். ஆனால் இவை எல்லாம் தேய் > தீ
என்ற தமிழினின்றும் பெறப்பட்டவை. இதில் நான் எடுத்துக்காட்ட விழைந்தது, டே (day ) என்ற ஆங்கிலத்தில் யகர ஒற்று இன்னும் இருக்கிறது
என்பதுதான்.

தொடர்புடைய இடுகைகள்:

தாதி  :   https://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_3978.html
இடையில் யகர ஒற்றுக் கெடுதல்  https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_89.html

derivation words meaning mother:
https://sivamaalaa.blogspot.sg/2014/02/derivations-of-words-meaning-mother.html