வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கணங்களின் அதிபதி கணபதி

ஏறினான் ஏணி  தன்னில்
என்றனின் முயற்சி  என்பான்
ஏறிட வழுக்கி வீழ்தல்
எவரது முயற்சி என்பீர்
காரணம் இலதென் பீரோ
கால்தளர் வெனச்சொல் வீரோ
ஓருமோர் கணத்தில் வந்த
ஒருவிபத் தெனவிள் வீரோ?

தொடைவலம் இழந்து போனால்
தொடரவும் முடியா தன்றோ?
தொடைப்பலம் உமதே என்றால்
தொலைந்ததும் வலிமை எங்கே?
உடையதை இழந்த பின்பே
உமதுசென் றதுவும் யாங்கு?
அடைந்தவை உம வென் றாலோ
இழந்தவை எவரின் செய்கை?

(கணங்களின் அதிபதியாம் கணபதி உங்கள் வலிமையைப்
பின்னிழுத்திருக்கலாம்......)

அவன்தந்த துன்றன் வலிவது  போயின்
எவன்போயிற்  றென்பது நாடு.

பொருள்:
--------------
உம -  உம்மவை.   உமது: ஒருமை. உம  - பன்மை.
எவன் - ஏன்
நாடு  -  சிந்திக்க .

அரம்பை

அரம்பை என்பது பல்பொருளொரு சொல். முன் இடுகையில்  அரம்பை என்பது வாழை(ப்பழம்) என்ற பொருளில் வந்தது. அரம்பை  ஒரு தேவலோக
மாதென்பது தொன்மம்   (புராணம் )  வழியாய் நாம் அறிவது ஆகும்.

அரம்பை என்ற சொல் அமைந்த விதம் காண்போம்.


அரு =  அரியது.  அருமை

அம்  =   அழகு.

பை =  பசுமை

அரிய, அழகிய, பசுமையான ஒரு பொருள் அல்லது பெண்.

பொருளென்று வருகையில் வாழை எனவும் 

பெண்ணென்கையில் தேவருலக மாதெனவும்

பயன்பாடு கண்ட சொல்.

இதுபின்  தன் தலையை இழந்து "ரம்பா" ஆகிற்று.

நீங்கள் செய்தகு ஆய்வு:  அவஸ்தான் மொழியிலும்
ஐரோப்பிய மொழிகளிலும் தேடிப்பார்க்க. இதன் மூலங்கள்
தமிழ்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

Forgetting One's Guru "ஆன்பாலும் தேனும்"

இது  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_17.html  இடுகையின் தொடர்ச்சி:


"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

பொருள்:

ஆன் பாலும் தேனும் :  பசுவின் பாலும்  தேனும்;
அரம்பை முதல் முக்கனியும்:   வாழைப்பழம் தொடங்கி மூன்று
வகைப் பழங்களையும்;   முக்கனி : மா, பலா, வாழை

தேம் பாய உண்டு :  இனிப்புச் சுவை மிகும்படியாக உட்கொண்டு;

தெவிட்டும்:   அது அப்போது  மேலும் உண்ணவியலாது போய்விடும்;
திகட்டும் என்றும் சொல்வர் .

வெண்ணெய் வரு சடையா :  திருவெண்ணெய்நல்லூரான் ஆகிய சடையப்ப வள்ளலே உன்னை:


கம்பன் :  கம்பனாகிய யான்;

இறக்கும்போதேனும் :  இறந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுமே

இனி :  இனிமேல். நினைவு என்பது இருக்குமாயின் இறந்த பின்னும்.

தீம்பாய் மறக்குமோ :  கெடுதலாக  மறப்பேனோ

என்றவாறு

ஆசிரியனை மறத்தல்  நன்றி கெட்ட செயலாகும்  என்பது கருத்து, இது  தீம்பு  என்று குறிக்கப்பட்டது .