வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அரம்பை

அரம்பை என்பது பல்பொருளொரு சொல். முன் இடுகையில்  அரம்பை என்பது வாழை(ப்பழம்) என்ற பொருளில் வந்தது. அரம்பை  ஒரு தேவலோக
மாதென்பது தொன்மம்   (புராணம் )  வழியாய் நாம் அறிவது ஆகும்.

அரம்பை என்ற சொல் அமைந்த விதம் காண்போம்.


அரு =  அரியது.  அருமை

அம்  =   அழகு.

பை =  பசுமை

அரிய, அழகிய, பசுமையான ஒரு பொருள் அல்லது பெண்.

பொருளென்று வருகையில் வாழை எனவும் 

பெண்ணென்கையில் தேவருலக மாதெனவும்

பயன்பாடு கண்ட சொல்.

இதுபின்  தன் தலையை இழந்து "ரம்பா" ஆகிற்று.

நீங்கள் செய்தகு ஆய்வு:  அவஸ்தான் மொழியிலும்
ஐரோப்பிய மொழிகளிலும் தேடிப்பார்க்க. இதன் மூலங்கள்
தமிழ்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

Forgetting One's Guru "ஆன்பாலும் தேனும்"

இது  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_17.html  இடுகையின் தொடர்ச்சி:


"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

பொருள்:

ஆன் பாலும் தேனும் :  பசுவின் பாலும்  தேனும்;
அரம்பை முதல் முக்கனியும்:   வாழைப்பழம் தொடங்கி மூன்று
வகைப் பழங்களையும்;   முக்கனி : மா, பலா, வாழை

தேம் பாய உண்டு :  இனிப்புச் சுவை மிகும்படியாக உட்கொண்டு;

தெவிட்டும்:   அது அப்போது  மேலும் உண்ணவியலாது போய்விடும்;
திகட்டும் என்றும் சொல்வர் .

வெண்ணெய் வரு சடையா :  திருவெண்ணெய்நல்லூரான் ஆகிய சடையப்ப வள்ளலே உன்னை:


கம்பன் :  கம்பனாகிய யான்;

இறக்கும்போதேனும் :  இறந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுமே

இனி :  இனிமேல். நினைவு என்பது இருக்குமாயின் இறந்த பின்னும்.

தீம்பாய் மறக்குமோ :  கெடுதலாக  மறப்பேனோ

என்றவாறு

ஆசிரியனை மறத்தல்  நன்றி கெட்ட செயலாகும்  என்பது கருத்து, இது  தீம்பு  என்று குறிக்கப்பட்டது .

இன்று அவன் அழைக்கின்றான்

நான் அழைத்தேன் ஒரு நிகழ்ச்சிக்கு;
அவன் சிரித்துக்கொண்டான்
ஆனால் அவன்  வரவில்லை;     இப்போது
இரண்டு மூன்று வேலைகள்
எனக்காகக் காத்துகொண்டிருப்பவை ;
அவற்றை நான் நாளைத்  தொடங்கவிருக்கிறேன்;
இன்று அவன் அழைக்கின்றான்
ஆனால் என் தோழி மூலமாக;
நேரடியாகக் கூப்பிடத்
தொடர்பு கிடைக்கவில்லை .என்கிறானாம்
அவனே இவன்
இவனுக்காக என் வேலைகளை மாற்றிவைக்க
என்னால் இயல  வில்லை ;
காரணம் இது மற்றவர்கள் தொடர்புடையது.
மூஞ்சியை இவன் இழுத்துக்கொண்டாலும்
நான்செய்வனவற்றை  எப்போதும்
தள்ளி வைத்துக் கொண்டிருக்க  முடியாதே
பிறர்க்கும் வேலை இருக்கும் என்பதை
இவன் உணராதவன்....
இவன் வேலை மட்டும்
இவன் விழித்திரையில்
இவனுக்கு வெளிச்சமாய்த் தெரிகிறது.