செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?


(புதுக்கவிதை )

மறதியால்   விளைந்த கேடு
மாநிலமேல்  ஒன்றா இரண்டா?

அலுவலகம் அடைத்தபின்,
அன்புள்ள என் வேலைத்தோழி
குலுங்கிச் சிரித்துக்கொண்டு
கூடவே வந்தாள்

அமர்ந்தாள்  என் உந்தில்.
அசத்தும் கதைகள் பேசிக்கொண்டே
அவள் வீடு  நோக்கி
முதலில்  ஓட்டினேன்  .
ஒரு பதினைந்து கல்தொலைவு சென்றபின்
இறங்கி அவள் வீடு  நோக்கிப்  போனாள் ..

அப்புறம் ஒரு பத்துக்
கல் தொலைவு.  ஓட்டினேன் .
என்  கைப்பேசி மணி அடித்தது.

"என் வீட்டுத் திறவுகோலை
அலுவலகத்தில் வைத்துவிட்டேன்  " என்றாள்.
"வெளியில் நிற்கிறேன்
"கதவு  திறக்க  நீங்கள்
உதவ வேண்டும் "  என்றாள்


அடி பாவி !
செய்யும் காரியத்தில்
சீரான கவனம் வேண்டாமோ?
உலகில் பலர் இப்ப்டி?
இப்ப்டிப் பெண்ணை எப்படி  ஏசுவது?

ஒரு மூன்று மணி நேரம்.
மீளாது ஒழிந்தது ....
பணமே  தேடினும்
மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?  *

----------------------------------

நேரம்  கழிந்தால் கழிந்ததுதான் காசைத்தான் 
யாரும் பெறல்மீண்டும் ஆம் !           (  நம்  குறள்  )


------------------------------------------------

பல மணி நேரம்  பாழான  நேர்வு 
பைந்தமிழ்ப்   பாடவும் ஏலாத சோர்வு ,


edited.  10.9.2016

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சிங்கைத் தேசிய நாளாம் ,,,,,

தூசியைத் தூய்மைக் கேட்டை த் 
துடைப்பதில்,  ஊழல் கூட்டிக்
காசினைச் சேர்க்கும் நீக்கம்
கடிந்திடும் கொள்கைப் போக்கில்,
நேசமெய்ம் மக்கள்  ஆக்கும்
நேர்மையில் ஓங்கும் சிங்கைத்
தேசிய நாளாம்  தேனும்
திறலொடு திரள்க பொங்கி.

இர் என்ற அடிச்சொல்லிலிருந்து

இர்  என்ற அடிச்சொல்லிலிருந்து இருள் இரவு இராத்திரி முதலிய சொற்கள்  விளைந்தனவென்பதை முன் ஒன்றுக்கு மேற்பட்ட இடுகைகளின் மூலமாக எடுத்துரைத்துள்ளோம்,  இராமன், இராவணன் என்ற தொடக்கத்துப் பலவும் இதிலிருந்தே தோன்றின என்பதும் விளக்கப்பட்டிருந்தது.

இர் என்ற அடிச்சொல் தமிழே. மேலும் இராமன் முதலிய சொற்கள் தமிழ் அடியிலிருந்தே திரிக்கப்பட்டன என்பதற்கு,  திராவிட அரசனாகிய மனுவின் முன்னோன் இராமன் என்று கம்பன் கூறியதையும் எடுத்துக்காட்டி இருந்தோம்.  இராமனும்  நீல நிறத்தவனே என்பதும் நீங்கள் அறிந்ததே. புதுச்சிலைகள் வெள்ளையாக இருக்கலாம்.

என்றாலும் இர் என்ற அடி தமிழன்று என்று கண்மூடிக்கொண்டு வாதிடுங்களேன். அது தமிழ்தான் என்பதற்கு இப்போது இன்னொரு சான்றினைப் பகர்ந்து மகிழ்வோம்.

இர் என்பது ஒளி இல்லாத நிலை.  ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் காணக்கூடியவை. தமிழ் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் இத்திறத்துத் திரிபுகள் காணலாம்.

இர் என்பதன் மூலம் இல். அதாவது ஒளி இல்லாத நிலைமை.  இல்-  இர்.

இல் ( இல்லை) என்பது தமிழாதலின்,  அதனின்று திரிந்து வந்த இர் என்பதும் தமிழே ஆகும் என்பது  சுருக்கமான சான்று ஆகும்.