திங்கள், 11 ஜூலை, 2016

விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை

மனிதன் உயர்வென் றவனே மதிப்பின்
இனிது மதுவாமோ இவ்வுலகில் தோழரே
நாய்பூனை சொன்னாலே நல்ல திலையேலோ 
காய்பழம் காணல் அரிது.  1

நாய்பூனை நல்லுரை தாரா நிலையாலே
வாய்திறந் தானே வழங்கிக்கொள் சான்றிதழைக் 
கூயுரைத்துக் கும்மாளம் கொட்டுகிறான் அங்கினிப்
போய்மறுக்க உள்ளார் எவர்.  2


விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை கேட்டுக்
கலங்குதல் மற்றும் களித்தலும் வீணே
நிலங்கவர் நெஞ்சத்தான் நில்லாத் திருடன்
நலம்பிதற்றல் நாணுத் தரும்.  3

பொருள்:


1.  இனிது மதுவாமோ   -   இனிமையானதும்   அதுவாகுமா ?
    நல்ல திலையேலோ -   நல்லது  இல்லையேல்;    ஓ -  அசை .
    காய்பழம் காணல்  -  ஏற்கத்  தக்கது ,  தகாதது  வேறுபிரித்து  அறிதல்.

2   தாரா -  தராத .
      கூய்  -  கூவி . 

3     நலம்பிதற்றல் - தன்னைத் தான் புகzந்து கொள்ளல்.  
      நாணுத்தரும்  -  வெட்கத் தக்கது . 


அகர ககர வருக்கத் திரிபுகள்

பல சொற்களில் 0கிரகம் என்றே முடிதலைக் கண்ட புலவர்கள்,, இவர்கள் எம்மொழிப் புலவர் ஆயினும், இறுதியில்  கிரகம் என்பதைத் தனிச்சொல்லாகப் பெயர்த்து எடுப்பதை ஒரு குற்றமாகக் கருதலாகாது. 

கின்று என்று ஓர் இடை நிலை இலது எனினும், அதற்கு ஒரு தனித்தன்மையை வழங்கி இடைநிலை என்று பவணந்தியார் அறிவித்திருத்தலைக் காண்கையில், இது தெள்ளிதின் போதரும்.  

இம்மேதைகளைப் பின்பற்றி நாமும் கிரகம் என்பதைத் தனிச்சொல் ஆக்குவோம்.

இரு + கு+ அம் =  இருகம் >  கிருகம்.   இருப்பிடம்.

பேச்சிலும் உலக வழக்கிலும் கிரகம்.

எமது சில இடுகைகளையாவது படித்தபின் இது புரியும் .

எனவே அகர வருக்க முதலாயின சகர வருக்கங்களாய்த் திரிதல்
போலுமே, ககர வருக்கங்களாகவும் திரியும் என்று வைத்துக்கொள்வோம். இதில் மோசம் போய்விடாது. இவ் வுத்தியையே சங்கத மேனிலையரும் பின்பற்றினரென்பது தெள்ளத் தெளிவாகிறது.

அகர  ககர  வருக்கத் திரிபுகள்  :  அகரம்  சகரமாதல்  இயல்பு.   சகரம்  ககரம்  ஆதலும்  இயல்பு.  அங்ஙனமாயின்  அகரம்  ககரம்  ஆதலும் உரித்தே ஆம்   

ஞாயிறு, 10 ஜூலை, 2016

நன்றி Gratitude

பலருக்கும் பாத்தூண் வழங்கிப் பயன்தரினும்
உலரும் பசியும்நீர் உற்றுழலும் பிற்பொழுதில்
நலம்பழ நாளெண்ணி நன்மனமே கொண்டுவந்து
நிலம்போலும் பேணஉமை நின்றிடு நன்றியர்யார்?

உரை:

பாத்தூண் : பகுத்து அளிக்கும் உணவு.
உலரும் பசி:  வயிறு உதடு முதலிய உலர்ந்துபோகும் பசி.
நீர் : நீங்கள்        பிற்பொழுதில் : பின்னாளில்/
நலம் பழ நாள் எண்ணி : முன்னாளில் செயத நன்மைகளை எண்ணிப்பார்த்து.
கொண்டுவந்து :  கொண்டு உவந்து;
நிலம்போலும்:  பூமியைப் போல் 
பேண உமை : உம்மைப் பேண ; உங்களைப் பாதுகாக்க‌
நின்றிடு நன்றியர்:  இருக்கின்ற நன்றியுள்ளவர் யார்,  யாருமில்லை