சனி, 25 ஜூன், 2016

சிவ- போத 11ம் பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

இது சிவஞான போதத்தின் பதினோராம் பாடல்.
முதலில் இப்பாடலின் பொருளினைப் புரிந்துகொள்வோம்.

காணும் கண்ணுக்கு ‍: காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு;

காட்டும் உளம்போல் : காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல;

காண உள்ளத்தை : காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை;

கண்டு : தானேயாகக் காட்சி பெற்று;

காட்டலின் : காணும்படி காட்டின காரணத்தால்;

அயரா அன்பின் : சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு;

அரன்கழல் செலுமே: சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.


இங்கு உளம் அல்லது உள்ளம் என்பது உடலின் உள் நிற்கும் ஆன்மா
என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்பதறிக. உள்ளம் என்பது இடைக்குறைந்து உளம் ஆயிற்று. ஆன்மா இல்லாத வெற்றுடலில் கண்கள் இருப்பினும் அவை காணும் தகுதி அற்றவை. கண் ஒன்றைக் காண, அதை அக்கண்களுக்கு விளக்கி இது இன்ன பொருள் அல்லது இத்தன்மைத்து என்று காட்டுவது உள்ளிருக்கும் ஆன்மாவே ஆகும். இதையே "காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்" என்றார் போதத்தின் ஆசிரியர்.


வீடு எதையும் அறிவதில்லை; அதனுள் வாழும் மாந்தனே வீட்டினுள் யார் வந்தார் யார் சென்றார் எது இருக்கின்றது என்று அறிவதைப் போலவே உடலும் ஆன்மாவும் ஆகும்.


காணுமுள் ளத்தைக் கண்டு காட்டலின் : இந்த அடியில், வரும் சீர்களை, கா/ணுமுள் .. ளத்/தைக்....கண்/டு.... காட்/டலின் என்று பிரித்துப் பார்த்தால், உள்ளதை என்ற சொல் உள்ளத்தை என்று வந்தாலே பாட்டின் அடி நான்கு சீர்களாய் நிறைவு பெறும் என்பதால்
உள்ளதை என்பது உள்ளத்தை என்று ஒரு தகர ஒற்று மிகுந்து வந்தது.
இதனை வகையுளி செய்து அறிந்துகொள்க. உள்ளது என்பது என்றும் எங்கும் உள்ளதாகிய சிவத்தை. சிவமில்லாத இடமொன்றில்லை. சிவம் இல்லாத காலமொன்றில்லை. ஆதலின் உள்ளது சிவம் ஆகும்.
ஐ வேற்றுமை உருபு.


இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டுமென்பார், அயரா அன்பின் என்றார். சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும் ,

அவன் கழல் ‍: இறைவன் திருவடிகள்.

செலுமே: செல்லுவான் என்பது.

இறைவன் -  அதாவது  சிவம்,  எங்கும் நிறைந்தது;  இதனை  வியாபித்திருக்கிறது என்பர். வியன் -   விரிவு.   விய >  வியாபித்தல். ஆன்மா உடையோன்  அதனைக் காணலாம்.  பற்று வளர்ந்து முற்றிட வேண்டும். முற்று >  முத்து >  முத்தி .  இது திரிந்து முக்தி ஆகும்.  முது > முத்து >  முத்தி > முக்தி  எனினுமாம் .  பற்றுமுதிர்வே  முத்தி . சீவர்கள்  அல்லது ஆன்மாவுடன்  கூடி  நிற்போர்   முத்தி    பெறுதல்  -  சீவன்முத்தி  ஆகும்.  ஜீவன்முக்தி என்றும் சொல்வர்  ஒருவன் தன்னை அதற்குத் தகுதிப் படுத்திக்  கொள்வது  பற்று முதிர்வினாலேயாம். இதன் பின்பே கண்கள் காண்பன வாகும் . 






வெள்ளி, 24 ஜூன், 2016

ராகம் என்ற சொல்

இன்னிசை  பாடுதல் ஓர் அரிய திறன் என்று பண்டை மக்கள் கருதினர் என்பதை, ராகம் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.இப்படிச் சொல்லமைபு 1ஆய்வறிஞர் பல உண்மைகளை அறிந்து கூறலாம்.  இதன் மூலம் பண்டைக் கருத்தமைதிகளை நாம் உணர முடியும்.

பாடறிவு2 ஓர் அரிய திறனாதலின், இக்கருத்திலிருந்தே அதற்குரிய சொல்லையும் அமைத்தது நல்லறிவே ஆகும்,

அரு + ஆகு+  அம் =  அராகம்.

அரு + இ = அரி(து)  எனல்போலவே  அரு+ ஆ = அரா (கு, அம்) ஆகுமென்பது அறிதல் வேண்டும்.

இது முற்காலத்தில் கலிப்பாவின் ஓர் உறுப்பாக இருந்தது.  கலிப்பாவின் முன் பகுதிகளை வேறு பாணியில் பாடி, அராகம் என்ற உறுப்பின் இடத்திற்கு வந்தவுடன் இன்னொரு விதமாக இனிமை தோன்றப் பாடுவர் என்று தெரிகிறது,  அவர்கள் பாடிய   பதிவுகள்  இப்போது இல்லாமல் போனது நம் பாக்கியக்குறைவே ஆகும். அதாவது கெடுபேறு ஆம்.

அரங்கன் என்ற சொல்   இடைக்குறைந்து  ரங்கள் என்று நின்றது போலவே அராகமும் ராகமாகி  இசைவிதம் குறிக்க வழங்கப்படுகிறது.

முத்தமிழில் இசைக்கலை ஒழிந்து, அதன் சிதறல்கள் இன்னும் நம்மிடைக் குமிழ்த்துக்கொண்டுள்ளன.

குறிப்புகள்:

1சொல்லமைபு   -  சொற்கலை .  சொல்லமைப்பு -   ஒரு சொல் அமைந்துள்ள விதம்,   தமிழ்ச் சொல்லமைபு  என்பது  வேங்கடராஜலு  ரெட்டியார் எழுதிய ஒரு நூலின் பெயர்  

2பாடறிவு   பாட  அறிந்திருத்தல் .

கொலையும் காரணங்களும்

கொலைகள்  பலப்பல  கூறுவர்ஏன்  என்றுபல
கூறாது  மறைவுண்ட  ஊறுதளம்  உண்டுபல
கலையும்  இதுவாமோ கருத்துயர்ந்த மாந்தனுக்கே  
கண்டொழி   தண்டனையும் மரணமென விண்டதுவே

கொலைகள்  பலப்பல -  உலகில்  நடைபெறுங் கொலைக்குற்றங்கள்  அதிகம் .
கூறுவர்ஏன்  என்றுபல -  காரணங்கள்  பல  கூறுவர்  ஆய்வு செயதோர் .
கருத்துயர்ந்த மாந்தனுக்கே  -  பகுத்தறிவுள்ள மனிதனுக்கு
கலையும்  இதுவாமோ  -  காரணங்கள் உரைப்பதுவும்  ஒரு கலைதான் .அன்றோ ?
கூறாது  மறைவுண்ட  -  காரணம் கூறாது மறக்கப்பட்டு நம்  நினைவிலிருந்து
அகன்று போன ;
ஊறுதளம்  உண்டுபல  -   இக்கொலை  நிகழ்வுகள் எழும்      நிலைகளும் '  சார்புகளும் பலவாகும்;
மரணமென விண்டதுவே  ‍ மரணம் என்று சொல்லப்பட்டதுவே;
கண்டொழி   தண்டனையும்  ‍  அவற்றை கண்டுபிடித்து ஒழிக்கும் தண்டனையும் ஆகும் .

But critics have argued that even in countries where death is the only sentence for murder,  it has not been proven to be a deterrent! This the author is aware but not taking any stand on it.