வியாழன், 16 ஜூன், 2016

வெயில் விழைவு :LongSunnyDay

பன்னிரண்டு மணிநேரம் பகலவன் ஒளிப்புனலில்
பயின்றவெலாம்  மறந்திருந்தேன்;
என்னிரண்டு விழிகளும் இறைஞ்சிய போதெல்லாம்
இருந்தநிழல் விருந்துமுண்டேன்;
அன்னியமோ கதிரவனே அன்னியமோ  வெண்ணிலவே
அன்னியமோ உடுக்களெல்லாம்
பொன்னிறமே பட்டொளிரும் எழிலியொடு   தென்றலுமே
மன்னுயிர்க்கெல் லாமினிமையே.

கதிரோனும் மறைந்திட்டான் கவிமெல்ல  இனிப்பாடு
காதுணவு விழைகின்றன;
மதிதானும் மாருதமும் மலர்களிலே வண்டினமும்
மருவினிய மாலையழகில்!
இதுநாளில் யான்பெற்ற இன்பங்கள் யாவுமினி
என்றென்றும் எனதுமாகும்
மெதுவாக எழுந்திந்த  இடம்நீங்கு  வேன்விரைவும்
உதவாத இசைந்தநாளே.

வெயில் விழைவு 

செவ்வாய், 14 ஜூன், 2016

காணிக்கை

தெய்வம்  காக்கவேண்டும் என்ற  வேண்டுதலில் தரப்படுவதே காணிக்கை.

இது  கா + நிற்கை  என்பதன் மரூஉ  ஆகும்.

கா =  காவல்.  தெய்வக்காவல்.

நிற்கை =  நிலைபெற விழைதல் .

காநிற்கை >   காணிக்கை  என்று மாறிற்று.

காவலுக்காக வேண்டிக் கட்டப்பட்டது  காப்பு.  இப்போது அது வளையல் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.  

கச்சிதம்

இப்போது கச்சிதம் என்ற சொல்லைச் சந்திப்போம்.

இதிலுள்ள சிதம் என்பது சித்தம் என்பதன் இடைக்குறை.

சித்தம் : பொருள்  :  இது பல பொருள் உடைய சொல். என்றாலும் அவற்றுள் ஒன்றான "பக்குவம்" என்பதே இங்கு கொள்வதற்குரிய பொருளாம்.

அடுத்து  "கச்" என்ற முன்பாதிச் சொல்.

இது கழு என்பதன் தேய்வு,   எ‍‍  டு :   கழுமணி,   தூயமணி.

கழு > கழுவு:   தூய்மை செய்.


கழு + சிதம் =   கழுச்சிதம்>   கச்சிதம்.

எழுதருகை என்பது எச்சரிக்கை  என்று திரிந்தது போலும் இதுவாகும்.

எழு > எச்
கழு  > கச்.

இதுதான் திரிபின் கதை.   வரலாறு.

தூய பக்குவமானது என்பது பொருள்.