சனி, 7 மே, 2016

சி போதம் பா 10. முன்பார்வை.

இது சிவஞான போதத்தின் 10‍வது பாடல்.

அவன் தானே ஆகிய அந் நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மல மாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது பாடல்.

அவன் தான்  என்பன விளக்கம்.

இப்பாடலின் அவன் என்றது இறைவனை.  அவன் ஒருவனே. அவன்
இறைவன்.  ஒருமை ஆதலின் ஒருமைக்குரிய அன் விகுதி கொண்டு
கூறப்படுகிறது.  அஃதன்றி  அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை. அவனுக்குப் பால்  (ஆண்/ பெண் வேறுபாடு) இலது. அன் விகுதி வரக்காரணம் மொழிமரபு.


தான் எனறு அடுத்து ஓதியது  ஆன்மாவை. மனிதர் பலர் இருப்பினும் ஒன்றின் மேற்பட்ட பல இருப்பினும்,  ஒவ்வோர் ஆன்மாவும் இறையுடன் தனித்தனியே கவரப்படுவது ஆகும்.  ஒவ்வோர் ஆணியையும் காந்தம் தனித்தனி கவர்வது போன்றதே இது. தனி என்ற ஒரு பிரிவு தவிர, இறைக்கும் ஆன்மாவுக்கும்  வேறு பிரிவினை இல்லை. வேறு அடையாளங்களும் இல்லை.
அவன் என்னும் இறைக்கு வேறு அடையாளம் இலதுபோல, தான் என்னும் ஆன்மாவுக்கும் வேறு அடையாளமோ குறிப்போ இலது. வேறு அடையாளங்கள் எவையானாலும் அவை இந்த அவன்‍  தான்
உறவில் கண்டுகொள்ளப்படாதவை.  எனவே சிவ ஞானத்தில் அவனும் தானுமே.  ஞானம் என்பதில் அவன் ‍ ஞான் ( அவன், தான்). உண்மையில் அவன் என்பது அன்,  இது ஆண்பாலில் விகுதியாய் வரும்.  இதன் பாலியன்மை மாறவே, அன் எனற்பாலது  அம் என்பது ஆகும்.  ஆகவே ஞான் + அம்  =  ஞானம் ஆகின்றது. உலகிலும் அப்பாலும் ஞானும் அம்மும் ( அவனும்)  அன்றி வேறில்லை. இதுவே உண்மை.

சி போதம் பா 10. முன்பார்வை.-  அடுத்த இடுகையில் தொடரும்.


வெள்ளி, 6 மே, 2016

8 successful years ஒசாமாவை ஒழித்தவர் ஒபாமா

ஆரவாரம் இல்லாது சேர்த்த வெற்றி
அடுக்கினவர்  அழகுசெய உலகு ஒபாமா!;
ஊருகூறும் ஒற்றுமையை உலகி யைபை
ஒதுக்காமல் யாவரையும் அணைத்துச் சென்றார்
பேருவர வேண்டுமென்ற நோக்கம் தோய்ந்த‌
பெரும்போர்கள் எவற்றையுமே துவக்கி  னாரோ?
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை
சேராமல் தம் நாட்டைக் காத்த மேதை.

ஒசாமாவை ஒழித்தவராம் ஒபாமா ஓயார்
ஒன்றொன்றாய்த்   தீயாரை  ஒடித்துப்  போட்டார்!
திசாபுத்தித் திறமென்பார் கணியர்   !   ஆயின்
தேர்ந்ததொரு மூளைப் பலம்: தெரிவார் சொல்வார்.
அசாவாமை அவர் அரசின் இயக்க வேராம்
அழிகூத்தும் இழிகொலையும் இல்லா ஓட்டம்
கசாகூலம் ஆகிவிட்ட காய்கள் ஆளும்
காருலகில் ஏறொளிசேர் கனியாம் செம்மல்.


எட்டாண்டு வரம்புக்குள் ஏய நின்றே
இயல்வதெலாம் முடித்திட்டார் இற‌ங்கும் நேரம்
கட்டான அரசியற்றிக் கருத்தின் கோடு
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும்
முட்டான கழிவுகளும் மூடம் தானும்
முனைவாரை மட்டுறுத்தி மெட்டுப் பாடித்
தட்டாமல் தம்வழிக்குள் இட்டுஒ   பாமா
தமக்கெளிதே இமையமெனும்  தலைமைச் செல்வம்.


சில அருஞ்சொற்கள்: மற்றும் குறிப்புகள்
வெற்றி  அடுக்கினவர் -  வெற்றிகள் பல பெற்றவர்  
அழகு செய  உலகு ஒபாமா:   இதனை   ஒபாமா உலகை  அழகு செய என்று  திருப்புக .
உலகை அழகுசெய்ய ஒபாமா பல வெற்றிகளை அடுக்கினார் என்று உரை நடைப் படுத்தவேண்டும்.
உலகு அழகு செய்ய வேண்டின் எல்லா இன்னல் இடர்களையும் அகற்றுவதில் வெற்றிகளை அடுக்கி ஆகவேண்டும்.
எதற்கு எது அழகு என்று பழ நூல்கள் கூறுமே.  எ-டு :  உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்று சொல்வது காண்க.
" அடுக்கினவர் ./  அழகுசெய / உலகொ /  பாமா "   என்று இசைக்க.
இயற்பெயரைப் புணர்த்தி எழுதவில்லை.சரியாக வாசிக்கவும் .
திசாபுத்தி  -   கிரகங்கள் இயங்குதல் .
கணியர் -  சோதிடர்.
அசாவாமை --- அசந்து போகாமை; தளராமை.
அழிகூத்து -  உலகை  அழிக்கும் செயல்கள்
இழிகொலைகள் -  ஒன்றும் அறியாரை வெடிவைத்துக் கொல்லுதல்
கசாகூலம் - குப்பை;  குழப்படி .
காய்கள் - முதிர்ச்சி இல்லாத் தலைவர்கள்.
கனியாம் -  பழுத்தவர் ஆனவர் (பட்டறிவு/ அனுபவம்  பெற்றார் )
காருலகில் -   இருண்ட உலகில்.
ஏறொளி  சேர் -   போகப்போக  ஒளி மிகுந்துவரும்;
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை  -  சேறு போல  ஊடுருவும் குழப்பம்  உடைய ஏழ்மை கலந்த  பொருளீயல் //நாட்டைக் கெடுத்துவிடாமல் காத்த என்று  இயைக்க .

ஓட்டம்  :  இது அரசு நடத்திச் செல்லுதல்  குறிப்பது.

ஏய -  பொருந்த.
இறங்கும்  - பதவிக் காலம் முடியும்;
கட்டான -  கட்டுப்பாடு உடைய ;
கோடு -   உச்சி;
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும் -   கைவரவும் பெற்றவர்  இக்காலம்  தோன்றும் .
முட்டான   - முட்டுக் கட்டைகள் ஆன
 மட்டுறுத்தும் -  வரம்புக்குள் வைத்திருக்கும்

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே
இடுப்படி கொடுத்து என்புடைப்பேன்
சொற்புனை வினிலே ஆழ்ந்திருந்தேன்
சூழலைக் கெடுத்தெனைச்  சுழலவைத்தாய்.

இரவினில் வருவது வாடிக்கையோ
இருப்பவை காண்பதும் வேடிக்கையோ
அரவினி வருமுனை விட்டுவைத்தால்
ஆதலின் உன் தலை குட்டுவைப்பேன்,

நறவெனச் சுவைப்பதெம் உணவினையோ
நானவை களைவதும் குணவினையோ
இறவினைத் தப்புக இனியொருநாள்
இவண்வரும் ஆவலுன் நினைவறவே.