வெள்ளி, 6 மே, 2016

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே
இடுப்படி கொடுத்து என்புடைப்பேன்
சொற்புனை வினிலே ஆழ்ந்திருந்தேன்
சூழலைக் கெடுத்தெனைச்  சுழலவைத்தாய்.

இரவினில் வருவது வாடிக்கையோ
இருப்பவை காண்பதும் வேடிக்கையோ
அரவினி வருமுனை விட்டுவைத்தால்
ஆதலின் உன் தலை குட்டுவைப்பேன்,

நறவெனச் சுவைப்பதெம் உணவினையோ
நானவை களைவதும் குணவினையோ
இறவினைத் தப்புக இனியொருநாள்
இவண்வரும் ஆவலுன் நினைவறவே.

வியாழன், 5 மே, 2016

வால்குழைத்தே.......!

குட்டியாய் இருக்கையில் கொடுத்தபால் சோற்றினையே
பட்டியாய்  வளர்ந்தின் னும்  பசுமையாய்   நினைவிருத்தி
சுட்டியாய்ப் பிறரஞ்சச்  சூரனாய்க் குரைத்திடினும்
முட்டிமோந்  தன்பினால் வந்தனை  வால்குழைத்தே

பூமாலையே தோள்சேர வா.! வரன்.............


அகப் பொருளிலக்கணத்தை  அலசிக்கொண்டிருக்கிறோம்.  புறப்பொருளிலும் புகுந்து  வெளிவருகிறோம். தமிழின் பல்வேறு செல்வங்களில்  இவையும் அடங்கும். வேறுபல செல்வங்களையும் பல்வேறு மக்கட்கு வாரி வழங்கியுள்ளோம். பிறமக்களிடமிருந்து பலவற்றைப் பெற்றுமிருக்கிறோம், இல்லையென்றால் மகிழுந்தில் பயணிப்போமா?

பூமாலை தோளுக்கு வந்துசேர வேண்டுமென்பது  வேட்கை முந்துற்ற  பெண்ணொருத்தியின்  இறைஞ்சுதல் ஆகும்.  இது எல்லை மீறிய காமம் பற்றி வந்த ஒரு வேண்டல் ஆதலின் புறப்பொருளிலே அடக்கப் பெற்று பெருந்திணை என்று வகைப்படுத்தப் படும்.

இதற்கான உதாரணச் செய்யுளை புறப்பொருள் ஆசிரியர் ஐயனாரிதனாரே  அமைத்துக்காட்டுகிறார்.

எழுது எழில் மார்பம் எனக்குரித் தாகென்று
அழுதழுது வைகலும் ஆற்றேன் ----- தொழுது இரப்பல்
வல்லியம் அன்ன  வயவேலோய் வாழ்கென
அல்லியந்தார் நல்கல் அறம்,  பு.வெ. 304

எழுது =  பல்வேறு சந்தனம் குங்குமம் நறுமணக் குழம்புகளால் வரையப் பெறும்;
எழில் -   அழகிய
மார்பம் -   உனது மார்பு;
எனக்கு உரித்து ஆக என்று -  எனக்கே உரியதாக வேண்டும் என்பதாக;
அழுதழுது வைகலும் ஆற்றேன் -   கண்ணீர் சிந்திச் சிந்தி ஒவ்வொரு நாளும் தாங்கமுடியாதவளாகிவிட்டேன்;

தொழுது இரப்பல் -  உன்னை மிக வணங்கி ப் பிச்சை கேட்கிறேன்;
வல்லியம் அன்ன -  வன்மையுடைய புலி போலும்;
வய வேலோய்  -  வீர வேலினை உடையவனே;
வாழ்கென =   என்னை  நீ வாழ்த்திக் கேட்டது தந்தேன் என்று;
அல்லி அம் தார் =  உன் அழகிய அல்லிப் பூமாலையை
நல்கல் அறம் -   நீ என் தோளுக்கு  அளித்தல்  உனக்கு அறமாகும்.

என்றபடி.

பூமாலையை  எனக்கு நீ தருவது உனக்கு அறம் என்னாது பூமாலையையே முன்னிலை ஆக்கி  வா என் தோளுக்கு என்று திரைப்பாடலில் போல அழைத்தாலும் பெருந்திணையாகவே கொள்ளல்வேண்டும்,

பண்டைக் காலத்து ஆண்களும் பல்வேறு நறும் பூச்சுக் குழம்புகளால் தங்கள்  மார்பிலும் உடலின் பிற  இடங்களிலும் வரிகளை எழுதி அழகு படுத்திக்  .கொண்டனர் .  போருக்குப் போகும்போதும்  மணமேடைக்குச் செல்லும்போதும் பிற நல்ல வேளைகளிலும் இவை  நிகழும் .  இத்தகு அலங்கரிக்கப் பட்ட ஆடவரைப் பெண்கள்   மணக்க விரும்பினர் .  அதாவது அவனை வரித்துக்கொள்ள  அவள் விரும்பினாள்.      இப்படி வரித்த ( வரிகள் எழுதிய )  ஆண் வரன்  (வரி + அன்)  எனப்பட்டான். வரி எழுதும்  வழக்கம் ஒழிந்து விட்டாலும் வரன் என்ற சொல் இன்றும் நம்மிடை உள்ளது.   வரிகள்  எழுதியவன் வரன்  என்பதை அகரவரிசை எழுதியவர்களும் மறந்துபோம் அளவுக்குக்  காலம் கடந்துவிட்டது . 

நல்ல வேளையாகச் சட்டை கிட்டை எல்லாம் அப்போது இல்லை. உடைகள்  மிகுந்த காலை இந்த வரிகள் சட்டை சேலை முதலியவற்றுக்கு மாறின .
பழங்காலச்   சீன நாடகங்களைப் பார்த்தால் வரிகள் எழுதும் பண்டைப் பழக்கம் கொஞ்சம் புரியும்.  யாரும் இப்போது   பார்க்காததால் இவை மேடைக்கு வருவது மிக அருகிவிட்டது.  1   இவற்றில் நடிக்கும்    சீன நடிகைகள்  வரைந்துகொள்வதும், மைதீட்டிக் கொள்வதும் பொட்டுவைத்துக்கொள்வதும் நம் கலாசார ஒற்றுமையைக் காட்டுகிறது.

குறிப்புகள்:

1  இது வாயாங்   (Chinese  Wayang )  எனப்படும்

will edit later. software error.