புதன், 27 ஏப்ரல், 2016

குற்றவாளியும் சட்டமும்

இல்லா தனசொலும் குற்ற வாளியை
நல்லா ரைப்போல் நடத்தலும்  அருஞ்செயல்
சொல்லான் இவனெனச்  சூழநின்  றதட்டினும்
கொல்லாப் புடைக்கா மெல்வழி மேற்கொளல்.

கடமை செய்தலில் காணும்   கோடிது
கடிதே  ஓச்சுதல்  எறிக மெல்லவே
கடுமை  வேண்டினும் கொள்ளல்  சொல்லிலே
உடமை உயிர்கொளல் சட்டத் துரிமையே.




புறநா: காற்றால் எழும் பறையோசை .........போர்! போர்

இலக்கிய இன்பம் வயப்பட விழையும் எவரும் புறநானூற்றினை நெடு நாட்களுக்கு மறந்துவிட்டு நாட்கடத்திவிடுதல் இயலாதது. நம் ஒளவைப் பாட்டியையும் எண்ணிப்பார்க்காமல் இருந்துவிடல் முடியாதது.  அவர்தம்  பாடலொன்றை இப்போது நுகர்வோம்.

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொருது  எண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்ஐயும் உளனே    89

 உரை :

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்   -  அழகிய மணிகள் பொருந்திய பெற்றுக்கொள்ளும் பெற்றியை  உடைய வளைந்த  இடை  அமைந்த;

மடவரல்  உண்கண்  -  மடம்பொருந்திய அழகிய கண்களும்

வாள் நுதல் -   வாளைப்போன்ற நெற்றியுமுடைய;

விறலி -    கலைபயிலும் நங்கையே!  ( பெரும்பாலும் பதினாறு வயதினள் ;   தொண்சுவையும் காண்போர் நுகர நடனம் ஆடுபவள் ....)

பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என  - போர் செய்வோரும்  இருக்கின்றனரோ உன் பரந்த நாட்டில் என்று;

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே -  கேட்டு அமையாத போர்ப்படைகளையுடைய  அரசே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன -  குச்சியால் அடிக்கும்போது அஞ்சாமல் சீறும் பாம்பினைப் போல;

சிறுவன் மள்ளரும் உளரே அதா அன்று -  சிறிய வன்மைவாய்ந்த  போர்வீரர்களும் உள்ளனரே; அதுமட்டுமில்லை;  ( சிறு  -  வன்மள்ளர் )

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை  - கூடத்தில் கிடத்தித்  தோல் வாரால் கட்டி வைக்கப்பட்டுள் ள போர்ப் பறைகளில்

வளிபொருது  எண்கண் கேட்பின்  -  கொஞ்சம் காற்று வந்து மோதிப் பறையோசை கேட்டால்

அதுபோர் என்னும் என் ஐயும் உளனே -  அதைக் கேட்டுப் போர் வந்துவிட்டது என்று  கிளம்பும்  என் தலைவனும் இருக்கின்றானே.

எண்கண் = எண்மைக்கண் = எளிமையானவிடத்து = கொஞ்சம்.

ஐ = தலைவன்; மன்னன்.

காற்றால் எழும் பறையோசை .........போர்! போர் என  எழுதல்.  என்னே   தமிழர்  தயார்  நிலை .............

படித்துச் சுவைத்தபடி இருங்கள் . பின்  இது  பற்றிப்  பேசுவோம் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

சகம் > சகா.

சக்களத்தி என்ற சொல்லின் அமைப்பினைக் காண்போம்.

ஒரே அகத்தில் (வீட்டில் அல்லது இடத்தில்) ஒன்றாக இருத்தலே சகம் என்பதாகும்.

உலகம் என்ற பொருளில் வரும்  ஜெகம் என்பதும் சகம் எனவரும். அந்தச் சகம் வேறு. அதை முன் யாம்  விளக்கியதுண்டு. அது முன் வந்த இடுகைகளில் இங்குப் பதிவுபெற்றுள்ளது.

இப்போது யாம் கூறவந்த "சகம்".

சகம்+ களத்தி = சகக்களத்தி.   மகர ஒற்றுக் கெட்டது.

இனிச் சகம் என்பதை மட்டும் காண்போம்.

சரி+ அகம் = சகம்.  இதில் உள்ள "ரி" எழுத்தையும்  "அ" எழுத்தையும் விலக்க, சகம் வரும்.

சரியகம் >  ச (ரிய) கம் =  சகம்.

இது ஒரு புனைவுச் சொல்லே.

இதை அமைத்த புலவர்கள் நல்ல படைப்பாளிகள்.

தமிழில் இடைக்குறை, தொகுத்தல் (சில எழுத்துக்களை விலக்குதல்) முதலிய உண்டு. பெரும்பாலும் கவிதைக்கு இவை
பயன்பட்டன.  என்னில் > எனில்  இல்லது > இலது, இப்படிப் பல.

இதைச் சொல்லமைப்புக்குக் கையாண்டது  மிக்க நல்ல உத்தி.


உயிரில் தொடங்கிய பல சொற்கள் உயிர்மெய்யாகத் திரிந்துவிட்டன என்று முன்பு யாம் மொழிந்த வழிச்சென்று, இதையும் உட்படுத்தி உரைப்பினும் ஏற்கத்தக்கதே.  அகரம் சகரமானதற்கு இங்கு ஒரு
காரணம் உண்டேயன்றித் திரிபு பொறுத்தவரை மாற்றம் இலது.

சொற்களின் நீட்டம் குறைத்தலில் குற்றம் ஒன்றும் இலது.

சகம் > சகா.

நன்றாகத்தான் இருக்கிறது.  இதைத் தமிழெனினும்  அன்றெனினும்  அதனால் விளைவு யாதுமிலது.