புதன், 27 ஏப்ரல், 2016

புறநா: காற்றால் எழும் பறையோசை .........போர்! போர்

இலக்கிய இன்பம் வயப்பட விழையும் எவரும் புறநானூற்றினை நெடு நாட்களுக்கு மறந்துவிட்டு நாட்கடத்திவிடுதல் இயலாதது. நம் ஒளவைப் பாட்டியையும் எண்ணிப்பார்க்காமல் இருந்துவிடல் முடியாதது.  அவர்தம்  பாடலொன்றை இப்போது நுகர்வோம்.

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொருது  எண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்ஐயும் உளனே    89

 உரை :

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்   -  அழகிய மணிகள் பொருந்திய பெற்றுக்கொள்ளும் பெற்றியை  உடைய வளைந்த  இடை  அமைந்த;

மடவரல்  உண்கண்  -  மடம்பொருந்திய அழகிய கண்களும்

வாள் நுதல் -   வாளைப்போன்ற நெற்றியுமுடைய;

விறலி -    கலைபயிலும் நங்கையே!  ( பெரும்பாலும் பதினாறு வயதினள் ;   தொண்சுவையும் காண்போர் நுகர நடனம் ஆடுபவள் ....)

பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என  - போர் செய்வோரும்  இருக்கின்றனரோ உன் பரந்த நாட்டில் என்று;

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே -  கேட்டு அமையாத போர்ப்படைகளையுடைய  அரசே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன -  குச்சியால் அடிக்கும்போது அஞ்சாமல் சீறும் பாம்பினைப் போல;

சிறுவன் மள்ளரும் உளரே அதா அன்று -  சிறிய வன்மைவாய்ந்த  போர்வீரர்களும் உள்ளனரே; அதுமட்டுமில்லை;  ( சிறு  -  வன்மள்ளர் )

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை  - கூடத்தில் கிடத்தித்  தோல் வாரால் கட்டி வைக்கப்பட்டுள் ள போர்ப் பறைகளில்

வளிபொருது  எண்கண் கேட்பின்  -  கொஞ்சம் காற்று வந்து மோதிப் பறையோசை கேட்டால்

அதுபோர் என்னும் என் ஐயும் உளனே -  அதைக் கேட்டுப் போர் வந்துவிட்டது என்று  கிளம்பும்  என் தலைவனும் இருக்கின்றானே.

எண்கண் = எண்மைக்கண் = எளிமையானவிடத்து = கொஞ்சம்.

ஐ = தலைவன்; மன்னன்.

காற்றால் எழும் பறையோசை .........போர்! போர் என  எழுதல்.  என்னே   தமிழர்  தயார்  நிலை .............

படித்துச் சுவைத்தபடி இருங்கள் . பின்  இது  பற்றிப்  பேசுவோம் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

சகம் > சகா.

சக்களத்தி என்ற சொல்லின் அமைப்பினைக் காண்போம்.

ஒரே அகத்தில் (வீட்டில் அல்லது இடத்தில்) ஒன்றாக இருத்தலே சகம் என்பதாகும்.

உலகம் என்ற பொருளில் வரும்  ஜெகம் என்பதும் சகம் எனவரும். அந்தச் சகம் வேறு. அதை முன் யாம்  விளக்கியதுண்டு. அது முன் வந்த இடுகைகளில் இங்குப் பதிவுபெற்றுள்ளது.

இப்போது யாம் கூறவந்த "சகம்".

சகம்+ களத்தி = சகக்களத்தி.   மகர ஒற்றுக் கெட்டது.

இனிச் சகம் என்பதை மட்டும் காண்போம்.

சரி+ அகம் = சகம்.  இதில் உள்ள "ரி" எழுத்தையும்  "அ" எழுத்தையும் விலக்க, சகம் வரும்.

சரியகம் >  ச (ரிய) கம் =  சகம்.

இது ஒரு புனைவுச் சொல்லே.

இதை அமைத்த புலவர்கள் நல்ல படைப்பாளிகள்.

தமிழில் இடைக்குறை, தொகுத்தல் (சில எழுத்துக்களை விலக்குதல்) முதலிய உண்டு. பெரும்பாலும் கவிதைக்கு இவை
பயன்பட்டன.  என்னில் > எனில்  இல்லது > இலது, இப்படிப் பல.

இதைச் சொல்லமைப்புக்குக் கையாண்டது  மிக்க நல்ல உத்தி.


உயிரில் தொடங்கிய பல சொற்கள் உயிர்மெய்யாகத் திரிந்துவிட்டன என்று முன்பு யாம் மொழிந்த வழிச்சென்று, இதையும் உட்படுத்தி உரைப்பினும் ஏற்கத்தக்கதே.  அகரம் சகரமானதற்கு இங்கு ஒரு
காரணம் உண்டேயன்றித் திரிபு பொறுத்தவரை மாற்றம் இலது.

சொற்களின் நீட்டம் குறைத்தலில் குற்றம் ஒன்றும் இலது.

சகம் > சகா.

நன்றாகத்தான் இருக்கிறது.  இதைத் தமிழெனினும்  அன்றெனினும்  அதனால் விளைவு யாதுமிலது.


வெள்ளை அழகே ..... meaning

கறுப்பரொடு  ....  என்னும் இடுகை 

தொடர்ந்து:

வெள்ளை  அழகே கருப்போ அழகின்மை

எள்ளி  இதுசொல்வார் சொல்லுக்கு ‍‍‍----\\உள்ளுவது

யாதென்பீர் ;  யாதானும் சாதி  கறுப்பரொடு\

தோதில்லை என்பாரின் மாட்டு


பொருள்: 




வெள்ளை  அழகே  : உடல் வெள்ளையாக இருந்தால் அவள்தான்

அழகி;

கருப்போ அழகின்மை  ‍‍:  கறுப்பு நிறமானால் உடல் அழகு இல்லை.

எள்ளி : பரிகாசம் செய்து;

இதுசொல்வார்  ‍‍‍ :  இப்படிச் சொல்லுகிறவரின்;

சொல்லுக்கு உள்ளுவது :  வாய்ப்பேச்சுக்கு நீங்கள் நினைக்கும் பதில்;

யாதென்பீர்  : என்னவாய் இருக்கும் சொல்லுவீர்  

யாதானும் சாதி :  நீங்கள் சொல்லும் உங்கள் சாதி எதுவாயினும்;


கறுப்பரொடு :  கறுப்பாய் உள்ள  உங்களுடன்


தோதில்லை என்பாரின் மாட்டு :  தமக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம் என்பவரின் இடத்து.

மாடு : மாட்டு ,  இடம்  இடத்தில் என்ற பொருள்.  கால் மாடு
தலை மாடு என்ற வழக்கை நோக்குக.

சொல்லுக்கு  உள்ளுவது:  இதன் பொருள் ,  அவர் சொல்லுக்கு நினைப்பதன்றிச்  செயல்   ( நாமும் ஏதும் செய்தல்  )  மேலும் கசப்பு  விளைக்கும் ஆதலால்,   சொல்லுக்கு என்பது அழுத்திக் கூறப்பட்டது  என்பது அறிக. சொல்லுக்கு நாம் அறிவார்ந்த முறையில்
செயல்படுவது  "எண்ணுதல்"  ஆதலால் " உள்ளுதல் " என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.

தோது  connection, affinity, dealings etc. 

இதுவே பாடலின் பொருள்.

வேறொரு இனத்தவர் உங்களுடன் கொள்ளும் தொடர்பு   மணம் பற்றியதாகவோ  வணிகம்  அல்லது  வேறு எது  பற்றியதாகவுமோ   இருக்கலாம். உறவே வேண்டாம் என்பவரை நாம் வற்புறுத்த முடியாது.
ஊருக்குள் ஒரே சாதிக்குள் கூட இவளைப் பிடிக்கவில்லை  அவள்தான் வேண்டும் என்று போராடுகிறவர்களும்  இருக்கிறார்களே ! ஒரு காரணம் இல்லாவிட்டாலும் இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது  எளிதாயிற்றே. பல் சரியில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது ?  அதனால் எந்த விடயமானாலும் உங்களுடன் ஒத்துப் போகிறவர்  வரும்வரை பொறுமையுடன் இருக்கவும். பெண் வேண்டுமென்று  உங்களை விரும்பினாலும் பெற்றோர்  வேண்டாம் என்றால் விட்டுவிடுவதே அறிவுடைமை.
நம் பண்பாட்டில் /  கலாச்சாரத்தில்  திருமணம் என்பது  தனி இருவரின் 
முடிவன்று.  திருமணத்தின்பின் பல உறவுகள் கிளைத்தெழுகின்றன.  மாமனார், மாமியார் ,  அவர்கள் உறவினர்கள், கூட்டத்தார் என்பனபோன்றவை  அவை. இவற்றையெல்லாம் எளிதில் கையாண்டுவிட  முடியுமோ? வரதட்சினை1  (வரனுக்குத் தக்க இணையான  பொருள் )  வேறு இருக்கவே இருக்கிறது. 
------------------------------------------------------------------------



1  தக்க இணை > தக்கிணை  >  தச்சினை > தட்சிணை.

The typing presentation  (lines ) here could not  be justified.  We do not know how ir appears on your screen. You may report.  Presentation errors seem inherent.