செவ்வாய், 16 ஜூன், 2015

பழமும் தோலும

வாழைப்பழத்தை உண்டுவிட்டுத்
தோலை ஆட்டுக்குக் கொடுத்தேன்;
ஆடு அதனைச் சுவைத்து உண்டது;

பழம் கொடுக்காமல் ஆட்டை ஏமாற்றிவிட்டேனே

என்று வருந்தி

இன்னொரு பழம் உரித்துப்
பழத்தை மட்டுமே கொடுத்தேன்;

பழத்தை விரும்பாமல் தரையில் போட்டது.
தோலைப் பார்த்தது

தோலை உண்டு மகிழ்ந்தது.

பழம் தரையில் கிடந்தது.     ஆட்டுக்கோ அதில் ஆர்வமில்லை.

பண்பறிந்து செயலாற்று என்ற வள்ளுவனின் குறள் நினைவுக்கு வந்தது






\\\



திங்கள், 15 ஜூன், 2015

சீரகம் என்றே சொல்லவும்

உடம்பினைச்  சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு  நச்சீரகமென்று பெயர்பெற்றது.

ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும்.  இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன  காண்க.

இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று  மாறிவிட்டது;  சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.

இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,

புதன், 10 ஜூன், 2015

வேகுமே உள்ளம்

இப்போது  நம் ஔவைப் பாட்டியின் ஓர் அழகிய சங்கப் பாடலைப் பாடி இன்புறுவோம்.  இது குறுந்தொகையில் 102வது பாடல் ஆகும்.

உள்ளின் உள்ளம் வேமே;   உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்று ;  வருத்தி 
 வான் தோய்வு அற்றே காமம்;  
 சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. 

உள்ளின் உள்ளம் வேமே  -   காதலரை நினைத்தாலோ உள்ளம்  மிகத் துன்புறுகின்றது ;    வேமே என்பது வேகுமே என்பதாம்   இதிற் குகரம் தொகுந்து நின்றது .
 உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று -  காதலரை நினைக்காமல் இருப்பது எமது  ஆற்றலுக்கு உட்பட்டது  அன்று  
வருத்தி  வான் தோய்வு அற்றே காமம்  -   இக்காதல் தந்த வருத்தமோ வானத்து மேல் சென்று முட்டியது போல்  நிற்கின்றது ;
யாம்  சொல்லத் தக்கது என்ன ?
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. -  எம்மை  மருவிப் பிரிந்தவர் நல்லவர் அல்லர் என்பது தவிர.
சங்க காலத்தில் காதல் மணங்களே .நிகழ்ந்தன  காதலித்த  பெண்களைக்  கைப்பிடிக்காமல் தொலைந்துவிட்ட ஆடவர்களால் நேர்ந்த  சீர்கேட்டைத் தவிர்த்தல் பொருட்டே  பெற்றோர் பார்த்துவைக்கும் மணவினைகள் நடப்புக்கு வந்தனவா என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிட்டுப் பாடலை நுகர்வோம்.

edit later