ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வாசனின் வாச மங்கை - தொடர்ச்சி II

தொடர்ச்சி....பாகம் 1-ல் இருந்து.

வாசன்  " நண்பர்களுடன் கொஞ்ச நேரம் தனியே பேசவேண்டும் "  என்று சொல்லி,  அந்த வீட்டின் முன்பக்கமாகச் சென்றார்.   நண்பர்களுடன் உடன் போயினர்.  பெண்ணின் அழகைப் பார்த்து  ஒருவாறு மயங்கிய வாசனுக்குக் கல்யாண ஆசை வந்துவிட்டாலும்,  வேறு ஏதோ பேசவேண்டும் போல்  தோன்றியது. "இதெல்லாம் முடிகிற காரியமா?" என்று பேச்சைத்
தொடங்கினார்.

"மணம் தேடுமுன் பணம் தேடி வைத்திருக்க வேண்டும்.   அதனால் பணம் வைத்துக்கொண்டு அப்புறம் இங்கே வருவோம் "  என்றார் வாசன்.   நண்பர்கள் இதற்கு ஒப்பவில்லை.  "அப்புறம் என்றால் நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடி இங்கே வரவேண்டும். இதே பெண்ணும் கலயாணம் ஆகாமல் இருக்க வேண்டும்.   வேறு யாரும் கலைத்துவிடாமலும்  இருக்கவேண்டும் ...... அதெல்லாம் சரிவராதப்பா"  என்றார் அவர்களில் ஒரு நண்பர்.  " பணக் கவலையை விடு,  செய்து முடித்துவிடலாம் ...... நீயே தெரிந்துகொள்வாய்" என்றார் இன்னொருவர்.   வாசனின் நண்பர்கள் எல்லாமே திருமணம் ஆனவர்கள்.  ஆகக் கடைசியாகக் கல்யாணம்  ஆனவருக்கு ஒரு குழந்தை . மற்றவர்களுக்கு இரண்டு மூன்று  என்றவாறு இருந்தனர். எப்படியும் வாசனின் வாழ்வு வாசனை பெறவேண்டும் என்று விரும்பினவர்கள் அந்த நண்பர்கள்.

ரப்பர் எனப்படும் தேய்வைத் தோட்டங்களில் மணப் பேச்சுக்களை[ப் பெரும்பாலும் இழுத்தடிக்க மாட்டார்கள். இழுத்தடித்து நடைபெறும் திருமணங்களுக்கு  கொஞ்சம் மதிப்புக் குறைவு என்று பேசிக்கொண்டார்கள்.

முடிந்தால் இன்னொரு நாள் தங்கி உறுதி செய்துவிட்டுப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் நண்பர்கள்.  வாசனுக்கும் வாசனைத் திரவியங்கள் மணமலர்கள் போய் வங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  பக்கத்து வரிசையில் உள்ள வீடுகள்  ஒன்றில் இருந்த   சோதிடரும் தம்  வேலைக்குரிய  ஏடுகளுடன் வந்து பொருத்தம் பார்த்து,  மிகவும் பொருந்தியிருப்பதாகச்  சொல்லிப் பச்சை விளக்குப் போட்டார்.  பெண் வீட்டில்  இரவு தங்குவது வழக்கத்துக்கு மாறானது என்பதால்,  அடுத்திருந்த வீடுகள் தொகுதியில் இருந்த   ஓர்  எழுத்தரின் வீட்டில் மாப்பிள்ளை வாசனும் நண்பர்களும் தங்க வைக்கப்பட்டனர்.  வசதிகள் எல்லாம் மன நிறைவு  அளிப்பனவாகவே இருந்தன.
மாறு நாள் குளுவாங்  என்னும் பட்டணத்துக்குப் போய்  சேலை, வேட்டி, பூக்கள், தேங்காய், வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என்று பலவற்றை வாங்கினார்கள் நண்பர்கள்.  வாங்கிக்  கொண்டு பெண்வீட்டுக்கு வந்து,  மணத் தொடர்பை உறுதி செய்தனர். வாசனுக்குப்  பட்டு வேட்டி.  பெண்ணுக்கு அழகிய சேலை.   பெண்ணின் கண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு மின்னல்,  வாசனின் இதயத்தைத் தொட்டது.  வாசன் வெளியில் காட்டாமல் சமாளித்துக் கொண்டார். அப்படியே செய்தாள் அந்த அழகியும்.   தேவகி என்பது அவள் அழகான பெயர். நண்பர்கள் அந்த "மின்னலைக்" கண்டு கொண்டனரோ என்னவோ ?

இனி விருந்து காத்துக்கொண்டிருந்தது.  பெண்ணின்  உறவினர்கள் சிலர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு,  வாசனுக்கும் தேவகிக்கும் தம் நெஞ்சங்களின் வாழ்த்துக்களைச் சொற்களால் சிலரும் புன்னகையால் சிலரும், கண்களால் சிலரும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
பின் வாசனும் நண்பர்களும் சிங்கையைநோக்கிப்  புறப்பட்டனர்.y

thodarum தொடரும்

Will edit later, as this feature is now unavailable.

புதன், 8 ஏப்ரல், 2015

Ways of referring to poverty

எழுத்துமொழியில் வறுமைக்கு மற்றொரு சொல் தரித்திரம் என்பது

நல்குரவு என்பதும் அது.

வறுமையை நல்குரவு என்பது   ஓர்  இடக்கர் அடக்கல் ஆகும்.

வறியோன் ஒருவனைப் பார்த்து  அவன்றன் வறுமையைக் குத்திக்காட்டுதலைப் பண்டைத் தமிழர் வெறுத்தனர்/ அதனால் அதனை அடக்கிச் சொன்னார்கள்  நல்குரவு என்று.

வறியோன் நன்றாகவும் உடுத்திருக்கமாட்டான். அவன் உடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

தரித்தல் என்றால் உடுத்தல்.  தரி+ திரம் :  தரித்திரம் ஆகும்.

வறுமையில் செம்மை கடைப்பிடிக்க வேண்டும்.  வறுமையும் ஒரு நோய் என்று கருதினர். உற்ற நோய் நோன்றல் என்றார் வள்ளுவனார்;  ஆதலின் அது பொறுத்தல் கடன். தரித்தல் என்பது பொறுத்தல் என்றும் பொருள்தரும் ஆதலினாலும்  தரித்திரம்  என்றது இரட்டைப் பொருத்தமானது. பொறுத்தற்குரிய துன்பம் என்ற பொருளிலும் இச்சொல் அமைந்துள்ளது.

மக்கள் வழக்கில் இது தரித்திரியம் என்றும் வழங்கும். இது ஏடுகளில் காணப்படவில்லை/
தரி :உடுத்தல்.
திரி:  மாற்றம்/
அம்:  அழகு மற்றும் விகுதியும் ஆகும்.
தரித்திரியமாவது:  உடுத்தலில் மாற்றம் என்றபடி.
இங்ஙனம் மக்கள் வேறுவகையில் வறுமையைக் குறித்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தமிழ்த் தென்றலில் கலந்தவை

தமிழென்ப  தே ஒரு  தென்றல்---- அது
தரணியெல் லாமுலவும்  தடைதானும்  உண்டோ?
அமைந்துள்ள அரண்களுள் போகும்  --- பின்போ
அவைநீங்கிக்  கானகம் வெளிகளில்  ஏகும்.

உலவுதல் புரிகின்ற பொழுதில் --அதன்
உராய்வினில்  அயல் நின்ற பொருள்கூடி வீசும்
சிலவந்து கலந்திட்ட போதும் ---- அண்ணே
தென்றல் வேறாம்சேர்ந்த பிறவேறு கண்டீர்

தென்றலில் வருகின்ற இன்பம் --- அண்ணே
சேர்ந்துவீ     சும்மவற்  றிடைகண்ட   துண்டோ
மன்றிடும் மகரந்த  மணமோ---- அதன்
மாண்புவே   றாம்பிற   மாசுவே   றாகும்.

edited.

இத்தகைய கவிதைகளைப் பெரும்பாலும் வெண்டளையில் எழுதுவர். இதை யான்  கருதாமல் கைக்கு வந்தவாறு எழுதியுள்ளேன் .  செதுக்கி  வெண்டளை என்னும் உறைக்குள் இடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் செயல் படுத்தவில்லை. எப்படி வந்ததோ  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்  இதன் விளைவு சிலவிடங்களில் சந்த முறிவு. முறிவு விலக்குவதாயின் :

(எ-டு )

"தரணி உலாவத் தடைதானும் உண்டோ ? " என்று இரண்டாம் அடியில் வரவேண்டும். பிறவும் அன்ன

தரணி உ /   லாவத் த /  டை  தானும் /  உண்டோ

என்று வகையுளிப் படுத்தி  அறிக.

Well if you are a grammar enthusiast, then I have left it in its crudest form. Just read, understand and discard.