திங்கள், 16 மார்ச், 2015

காலக்கணக்கு

அகத்தியரும் தொல்காப்பியரும் தலைக்கழகத்தில் இருந்ததில்லை.  தலைக் கழக காலம் தோராயம் கி.மு. 10,000 - 5000.  அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி .மு. தோராயம் 1200.  தொல்காப்பியர் காலம் கி.மு. 6-ஆம் , நூற்றாண்டு.  தமிழின் முதுபழந் தொன்மையாலும் வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையாலும் முக்கழக வரலாற்றில்  முன்னவரையும் பின்னவரையும்  ஒரு காலத்தவராக மயக்கிவிட்டனர்.

கடல் கோளால் பாண்டியராட்சி இடையீடு பட்டதினாலேயே மூவேறு இடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ  நேர்ந்தது. இரு கடல்கோள்களும்  நிகழ்ந்திராவிட்டால் தலைக்கழகம்  ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருக்கும்.

-

- கட்டுரை: மதுரைத் தமிழ்க் கழகம் ( தேவநேயப் பாவாணர்.) 

You may also refer to :-

http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmltm

http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmll 

ஐந்திரம் - 5 branches of grammar




இந்திரன் என்பவன் இயற்றியதே ஐந்திரம் என்று கூறுவாருண்டு. இந்திரனைப் பற்றிய  கதைகளை நோக்கும்போது, அவன் இலக்கண நூல் வரைந்தான் என்று சொல்வது நம்பத் தகுந்ததாய் இல்லை. காரணம், இந்திரன் வானுறை தெய்வம், தேவர்களின் தலைவன், தானைத்தலைவன், மழைக்கடவுள் என்றெல்லாம் சொல்லப்படுவதுதான்.

இவ்வளவு வேலைகளையும் கவனித்த இந்திரன், மொழிக்கு இலக்கணம் இயற்ற நேரமும் வாய்ப்பும் உண்டாகியிருக்கமாட்டா. இந்திர என்ற பெயருடன் ஐந்திர என்பது ஒலித்தொடர்பு உடையதுபோல் செவிப்படுவதே இந்தக் கதை எழுவதற்குக் காரணம் என்னலாம். இதைச் சிலர் வரலாறுபோல் சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கை ஆகும். மேலும் சமஸ்கிருதத்துக்கு முற்காலத்தில் எழுத்துக்கள் இல்லை1. வேற்று எழுத்துக்களால் பின் அது எழுதப்பட்டது. "எழுதாக் கிளவி" என்ற சங்க இலக்கியத் தொடர், சமஸ்கிருதத்தைக் குறிக்கும்.

எழுத்து, சொல்,பொருள் , யாப்பு அணி என்ற ஐந்து இலக்கணம் தாம்
"ஐந்திறம்" எனப்பட்டது. பண்டைக் காலத்தில், திறம் என்பது பிற சொல்லுடன் கூடிவருங்கால் "திரம்" என்று எழுதப்பட்டது என்று தெரிகிறது. திறம் என்பது விகுதியாகும் போதும், "திரம்" என்றே வரும். தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும். திறமும் அத்தகையதொன்று என்று தெரிகிறது. பாணிணியம் என்ற வடமொழி இலக்கணம், எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டையே கூறும். தொல்காப்பியம் ஐந்திலக்கணமும் கூறுகிறது.

எனவே ஐந்திறம் ‍ ஐந்திரம் என்பது ஐந்து இலக்கணம் என்பது குறித்ததாகலாம். இவ்வைந்து இயல்களிலும் தொல்காப்பியர் வல்லுநர் என்பதே "ஐந்திரம் நிறைந்த" தொல்காப்பியன் என்பதன் பொருள் என்று  கூறுக.

வட நூல்களில் ஐந்திரம் பற்றிய கதைகள் ‍ தொல்காப்பியப் பாயிரம் கண்டு எழுந்தவை ஆதல் தெளிவு, வடமொழி இலக்கணம் என்பது பாணினி பாடியது மட்டுமே. இப்புலவர் ஒரு பாணர் என்பது தெளிவு. பாண் + இன்+ இ =பாணினி, பாணன் பாடியது என்பதாம்.


1 மேலும் படிக்க:  John Kay's History of India
மேற்கோளாய்க் காட்ட இயலவில்லை.   This is suggested for further reading.


குறிப்பு: சமஸ்கிருதத்துக்கு எழுத்தமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர். மந்திரக் குரல்,  ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக. எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது. வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது. சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக. சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள . மண்டரின் எழுத்து மொழி இதை விரிவடையாமல் நிலைப்படுத்தியது (18.11.2019)..

ஞாயிறு, 15 மார்ச், 2015

இலக்கியக் காதலர் உறவுமுறை

சங்க இலக்கியத்தில் வரும் காதலர்கள்  ஒருவருக்கொருவர்  உறவினர்களா அல்லது ஓர் உறவுமின்றி எதிர்கொண்டு காதலர் ஆனவர்களா ,--   சங்க காலத்தில் எத்தகைய முறை வழக்கிலிருந்தது  என்ற ஒரு கேள்வி உங்கள் மனத்தில் எழுந்ததுண்டா?


அகத்திணை இலக்கியங்களை நோக்குமிடத்து,  தமிழர் காதல் மணம்
புரிந்துகொண்டு வாழ்ந்ததாகவே தெரிகிறது. தாய்தந்தையரை அணுகி முறைப்படி பெண்பார்த்தபின் தலைவியைச் சந்தித்து காதலை வெளிப்படுத்திய நிகழ்வு எதையும் சங்க இலக்கியத்தில் இதுவரை படித்ததில்லை. எங்கேனும் இருக்கலாம். இருப்பின்  மிக அருகிய நிகழ்வாகவே அது இருக்கும் என்பதென் ஊகமாகும். பாரி மறைந்தபின் அவன் மகளிருக்கு மாப்பிள்ளை பார்த்து கபிலர் தொல்லைப்பட்டதுபோல் நிகழ்வுகள் உள.


சாதி முறைகள் நடப்பிலிருக்கும் ஒரு குமுகாயத்துக்கு ( சமுதாயத்திற்குக் )  காதல் மணமுறை இணக்கமுடையதன்று. காதலாகிறவன் எந்தச் சாதியானாகவும் இருக்கலாமாகையால், பின் அது இடர்தருவதாகிவிடும்  என்று  தெரிகிறது   ,

தற்போதுள்ள நடைமுறையில் முன்பின் பழகியிராத ஆடவர்  பெண்டிரிடையே தரகர் மூலமாய்த் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. இது வேறு படும் இடங்களும் உண்டு. இது பாதுகாப்பான நடைமுறை என்று பெற்றோர் நினைக்கின்றனர். சங்க காலத்து நடைமுறைகள் காதலன் கைவிடுதல் போன்றபல நிகழ்வுகள் நடைபெற்றதாலேயே வழக்கொழிந்தது  என்று தெரிகிறது.  இதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடைத்தில.

 இதனை நீங்கள் ஆய்ந்ததுண்டாயின், இங்கு நம் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வருமாறு அழைக்கிறோம்.