புதன், 18 பிப்ரவரி, 2015

சாதல் சமஸ்கிருதச் சொல்லா?

சாதல் என்ற சொல், தமிழ்ச் சொல். இதை யாரும் சமத்கிருதம் என்று சொல்லி யாம் கேள்விப்பட்டதில்லை.  இந்தச் சாதல் என்ற சொல்லின் வினைப்பகுதி ஆகிய "சா" என்பது, அங்கும் இடம்பெற்றுள்ளது. அதன் பல்வேறு பொருள்கோள்களை இப்போது கண்டின்புறுவோம்.

Sa :  loss , destruction ; loss of knowledge ; end , term ; rest , remainder ; eternal happiness , final emancipation ; heaven , paradise ; sleep ;

சா:  (= ஸா):  இழப்பு, அழிவு.  அறிவு அழிதல்.  இறுதி.  காலச் செலவு; ஓய்வு.  இறுதலில்லா மகிழ்வு. இறுதிச் சம நிலை;  மேலுலகு. ஒப்பற்ற துறக்கம்; உறக்கம். பொறுமை; தாங்கிக்கொள்ளல்.

இவை எல்லாம் சாதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இயைந்த பொருண்மைகளே.

இப்போது கேள்வி: சாதல் சமஸ்கிருதச் சொல்லா?  சமஸ்கிருத அகரவரிசையில் இருக்கிறதே!

சமஸ்கிருத அகரவரிசையில் இருப்பவை எல்லாம் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல . அகரவரிசைகள்  ஆக்கப் பட்ட \காலங்களில் ஒரு மொழியில் வழங்கிய   சொற்கள்  யாவற்றையும் விடாது  உள்வாங்கி எழுதிக்கொள்ள முனைந்தனர்,  பொருந்தாதவை என்று அவர்கள் நினைத்தவற்றை விட்டுவிட்டனர்.  மொழி ஆய்வும்  சொல் ஆய்வும்  செய்துதான்  சேர்க்கலாம் என்ற கட்டாயம் ஏதுமில்லை. குறிப்பிட்ட மொழியில் ஒரு சொல் வழக்கில் இருந்ததா என்பதுதான்  முதன்மையான கேள்வியாய்  அவர்கள் மனத்துள் இருந்தது.  அதுமட்டுமின்றி,  ஆக்கியோரின் மொழிக் கொள்கைகளும் அவர்களையே   பாதித்தன. சமஸ்கிருதம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்ற கொள்கை  அன்றைய அறிஞர்  இடையே நிலவியதால்  அக்கொள்கையின்படி  எதை வேண்டுமானாலும் உள்வாங்கிக் கொள்ளலாமே.  மேலும்  அகரவரிசை என்பது   பொருளறியும்  கருவியன்றோ?  சொல்லின் பொருளைத் தேடுகிறவன்  அதில் அதைக் காணமுடியவில்லை என்றால் 
அகரவரிசை பயனற்றதாகிவிடும்.  அகரவரிசை ஆசிரியன் இதையும் கருதவேண்டியிருந்தது. இத்தகைய சூழலில் அவன்  குறிப்பிட்ட மொழியில் கிடைத்த சொற்களையெல்லாம்  உள்வாங்க்கிக்கொண்டான்.  இது தவறன்று.   "சா" என்பதை  ஏதேனும் ஒரு நூலிலோ  வாய்மொழியிலோ  அறிந்திருப்பான். அதை எழுதிக்கொண்டான்.  அல்லது மொழிக்கொள்கையின்படி  அதை  ஏற்றுக்கொண்டான் அறியாமையும்  சிலவேளைகளில்  காரணமாகலாம்.   மொழி  ஆர்வமும்  காரணமாகலாம்.

பயன்படுத்துகிறவன்  அயன்மொழிச்சொல்லைக்  கொள்வதற்கு  சட்டப்படியான  தடை ஏதும் இல்லை;  அவனே  அதைத் தீர்மானிக்கிறான். மொழி   அறிஞன்    வேண்டாமென்றால்  அது வெறும் பரிந்துரை மட்டுமே.  
  

-----------------------------------------------------------------------------------------------quod supplantandum, prius bene sciendum

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிவ ராத்திரி

இரவு என்பது எப்படி இரா என்று வந்தது?  இதில் ஏதும் வியப்பு இல்லை,  காரணம் :

நிலவு  >  நிலா,
உலவு  > உலா
உணவு >  உணா
கனவு  > கனா.\

\பெயர்  வினை என்றில்லாமல் வடிவங்கள் இங்ஙனம் வருகின்றன,

நிலவு  என்பது  வு விகுதி பெற்றமைந்தது.   நிலா என்பது  ஆ என்னும் விகுதி பெற்று அமைந்தது. எனினும் வு விகுதி பெற்றவற்றுக்கு  ஆ பெற்றவை மாற்றுப் படிகள் .


நில் + வு  = நிலவு  ( இடையில் ஓர்  அகரம் தோன்றியது).
நில் + ஆ = நிலா.   

பார்க்கும்போது  நிற்பதுபோல் தோன்றுவது;  நிலையானது , அழியாதது  என்று பொருள்.   

ஆகவே இரவு இரா ஆனது இயல்பு

அடிச்சொல்  (இர் )
இர்  > இரவு.  ( இர் +அ +வு )  நிலவு என்ற சொல்லில்போல   ஓர்  அகரம்  தோன்றியது 

இர்  என்பதோர் மூலச்சொல்.  பிற சொற்கள்.

இர்  >  இருள். (உள்  இறுதி பெற்றது )
இர் > இருள் >  இருட்டு.  (இருள்+ து)   இரு விகுதிகள் உள் மற்றும் து.
இர்  >  இராகு.  ( விகுதிகள்:  ஆ  கு ,  அல்லது "ஆகு " என்னும் வினை). 

இராத்திரி  என்பது இராவுடன் திரியையும் கோத்து வைத்துக்கொண்டுள்ளது.  திரி என்பது திரிபு என்னும் பொருளது.

பகல் என்பதன் திரிபு இரவு,  திரிபு எனின் மாற்றம். பண்டை மக்கள் இரவைத் திரிபாகக் கருதியதையே இது காட்டுகிறது.
இரவு பகல் எப்படி ஏற்படுகின்றன என்று அவர்கள் காலத்தில்
தெரியவில்லை/  திரிபு என்று கருதியதில் வியப்பில்லை எனினும் இப்படிக் கருதியதிலும் பெருந்தவறு ஒன்றுமில்லை.

இரவாகிய திரிபு என்க, திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.


மாற்றுக் கருத்து:  திரி  என்பது  திரம்  என்பதன்  மாற்றுரு. இவை இரண்டும் திறம் என்ற சொல்லிலிருந்து பிறந்து விகுதிகளாய்ப் பயன்பட்டன.,  இராத்திரி  என்பதில் திரி  ஒரு விகுதி எனினும்  ஆகும்.



குழித்தல்  குழி என்று முதனிலைத் தொழிற்பெயர் ஆனது போல  திரிதல்  எனற்பாலது திரி என்றே நின்று  ஆனது. 

இராத்திரி என்பது நல்ல தமிழ் , இது வழக்கம்போல தலையிழந்து ராத்திரி ஆனது.

சிவ ராத்திரி என்பது சிவ என்ற இயல்பு எச்சச் சொல்லும் ராத்திரி என்ற உருத்திரிந்த சொல்லும்  கலந்த கலவைச் சொல்.
 இந்தக் கலவைச் சொல்லை நாம் சிவயிராத்திரி என்று எழுத வேண்டியதில்லை,

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நீ என்னென்ன சொன்னாலும் குறைதான்

நீ என்னென்ன சொன்னாலும் குறைதான்
நீ எங்கெங்கு சொன்னாலும் குறைதான்;
நீ சொல்கின்ற குறையெல்லாம் நிறைதான்;
அந்த நிறைக்குத்தான் எனக்கிங்கு வாக்கு!

உன்னாவி போகின்ற நட்டம்; அதை
உணர்ந்துமா உனக்கிங்கு கொட்டம்;
தென்னாடு தெரியாமல் பிட்டம்; பிசைந்து
திரட்டினை தரத்திலாள்   மட்டம்.


பிட்டம் -  மாவு.

தேர்தலில்  ஒரு கட்சி இன்னொன்றைப் பலமாகக் குறைகூறுகிறது. இருப்பினும்  குறைகூறின கட்சி  படுதோல்வி அடைய,  சொன்ன குறைகளைத் தாங்கிக் கொண்ட கட்சி, மிக்கப் பெரும்பான்மையில் வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.   ஏன்  அப்படி?  வெற்றி பெற்றவன் கூறுவதுபோல் வருகிறது இந்தப்பாடல்.