வியாழன், 29 ஜனவரி, 2015

the beauty of suffixes kar, kari, karan etc

குருவி ஒன்று வாங்கவேண்டும், இதற்கு (குருவிக்கு) யாரைப்பிடித்தால் அது கிடைக்கும்?
சீரங்கம் போகவேண்டும், வண்டி வேண்டும்,  அதற்கு யாரைக்  கொண்டுவந்தால் காரியம் நிறைவேறும்?

குருவிக்கு அவர்.
வண்டிக்கு அவர்.

அவர் என்பது உண்மையில் அ+ அர் ஆகும். இடையில் வகர உடம்படு மெய்  தோன்றியது. வகர உடம்படு மெய் இல்லாமல் நோக்கினால், அஃது அ+அர் >ஆர் ஆகும்.

குருவிக்கு அவர் > குருவிக்கு அஅர் > குருவிக்கார்.
வண்டிக்கு அவர் > வண்டிக்கு அஅர் > வண்டிக்கார்.

அவர், ஆர் என்பவை பலர் பால். சேவை புரிந்த இவர்களை முதலில்  மரியாதையுடன் தான் நடத்தினர் என்று தெரிகிறது. நாளடைவில் மரியாதையும் குறைந்து, சேவையைப் பெற்ற நன்றியும் தேய்ந்து,  சொல்லில் உள்ள விகுதி பலர்பால் என்பதும்  மறந்து, அன் விகுதி சேர்ந்துகொண்டது.

குருவிக்கார்.+அன் = குருவிக்காரன்.
வண்டிக்கார்+அன் = வண்டிக்காரன்.

என்ற வழக்குகள்  உருவாயின.

அப்புறம் சிலர் இவற்றை ஆய்ந்தனர். சொற்களை இவ்வாறு பிரித்தனர்.

வண்டி+ காரன்.
குருவி+ காரன்

நமக்கு "காரன்" என்ற புதிய பின்னொட்டுக் கிடைத்தது. பெண்பால்  காரி என்றானது. மரியாதை வேண்டினபடியால்,  காரர் வந்தது.

குருவிக்காரி என்றது போதுமான பெண்மை காட்டவில்லை !!  குருவிக்காரிச்சி என்றும் புதுமை புகுந்தது.

என்ன ஆனந்தம்!
will edit later.

புதன், 28 ஜனவரி, 2015

நறவம்

நறவம் என்பதற்குப் பல பொருள் கூறப்படும் எனினும், தேன் என்பது அதன் முன்மைப் பொருள் என்று தோன்றுகிறது.  மற்றும் கள்,  பால்,  நறுமணம் ,  மயிற் கொண்டை , பொருள்கட்கு நிறம் ஏற்றும் ஒருவகை நீர்ப்பொருள், செஞ்சாந்து, ஒரு கொடி,  மஞ்சள் பூ உடைய ஒரு மூலிகை   முதலியவற்றையும் குறிப்பது இச்சொல்.

இது நறு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்.

நறு + வு (விகுதி) =  நறவு.
நறவு + அம்  =   நறவம்.

நறு  என்பது "நல் " என்பதனடிப் பிறந்த சொல்.  நல் =  நன்மை. 


செவ்வாய், 27 ஜனவரி, 2015

நற்றமும் குற்றமும்.


குற்றம் என்ற தமிழ்ச் சொல் இப்போதெல்லாம்,  சட்டத்திற்கு முரண்பட்ட, தண்டனைக்கு உட்பட்ட ஒரு செயலைக் குறிப்பதாகப் பெரிதும்  வழங்கி வருகிறது.  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழி, சட்டப்படியான குற்றம் மட்டுமேயன்றிப் பிற தகாதனவற்றையும்  உட்படுத்துவதாத் தெரிகிறது.

குற்றமின்மை என்பதை innocence என்ற சொல்லுக்கு ஈடாக வழங்கலாம்.  ஆனால் எந்த நீதி மன்றமும் ஒருவனைக் "குற்றம் அற்றவன்" என்று கூறுவதில்லை; சுமத்தப்பட்ட குற்றம் நிறுவ (அல்லது "நிறுவிக்க" > நிரூபிக்கப்) படவில்லை என்றே கூறி விடுப்பதாகத் தெரிகின்றது. இவ்விரு முடிவுமொழிதலும் வெவ்வேறானவை என்பது எளிதில் புரிந்துகொள்ளத் தக்கனவே.

நிரபராதி என்ற சொல்வழக்கும் உள்ளது. இது நிர்+ அபராதி என்று பிரியும்.  நிரபராதி என்றால் அபராதம் விதித்தற்கு உரியனல்லன் என்பது பொருள். அபராதி என்பதன் முன்னதான அபராதம், குற்றத்தையும் தண்டத்தையும் ஒருங்கே குறிப்பதால்  பண்டு இவை ஒன்றாகவே கருதப்பட்டன என்று தோன்றுகிறது. எனினும்  அபராதம் "குற்றம்" என்னும் பொருள் உடையதாய் இருப்பதால் இக்கருத்து   இலக்கிய வழக்கன்று.

அபராதபஜ்ஜின என்பது சிவனின் பெயர்களில் ஒன்று. நேர்ந்துகொண்டபடி செலுத்தாத காணிக்கை பின் செலுத்தப்படும்போது அதற்கு அபராத காணிக்கை என்பர்.

குற்றமும் நற்றமும் என்பது சொற்கள் இணையாக நிற்கும் தொடர்

நற்றம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பெரிதும் வழக்கிலில்லை. அது குற்றமற்ற தன்மையைக் குறிக்கிறது. இப்போது மறக்கப்பட்டுள்ளது. தகுந்தபடி மீண்டும் பயன்படுத்த எளிமையானது.